விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் கொடியேற்றம்

நெல்லை: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட விநாயகர் கோயிலில் நேற்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. இவ்விழா வரும் 19ம் தேதி வரை நடக்கிறது.  விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ஆசியாவிலேயே மிக பெரிய கோயிலான மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோயிலில் நேற்று காலை 6 மணிக்கு மேல் விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், கொடி கம்பம் அபிஷேகமும், கொடியேற்றமும் நடந்தது. மாலை 5.30 மணிக்கு முதல் நாள் யாகசாலை பூஜையும், மூஷிக வாகனத்தில் திருவீதியுலாவும் சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

2ம் நாளான இன்று இரண்டாம் யாகசாலை பூஜைகள், சிறப்பு தீபாராதனைகளும், மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், சுவாமி சந்தன காப்பு அலங்காரமும், திருவீதியுலாவும், 12ம் தேதி காலை 8 மணிக்கு மேல் மூன்றாம் நாள் யாகசாலை பூஜையும், சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜையும், வீதியுலாவும் நடக்கிறது.

நான்காம் நாளான 13ம் தேதியன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி அதிகாலை 4 மணிக்கு 4ம் நாள் யாகசாலை பூஜைகளும், கணபதி ஹோமமும், 6.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், மாலை 5.30 மணிக்கு யாகசாலை பூஜைகளும், மூலவருக்கு சிறப்பு தீபாராதனையும், வீதியுலாவும், அன்னதானமும், 14ம்தேதி முதல் 18ம் தேதி வரை யாகசாலை பூஜைகளும், சிறப்பு தீபாராதனைகளும், 19ம் தேதி காலை 5 மணிக்கு 1,008 சங்காபிஷேகமும், தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரியும், மாலை 6 மணிக்கு நிறைவு விழாவும் நடக்கிறது. விநாயகர் சதுர்த்தி நாளில் அதிகாலை 4 மணி முதல் அன்று முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர். இது போல் நெல்லையிலுள்ள அனைத்து விநாயகர் கோயில்களில் நேற்று விழா துவங்கியது.

Related Stories: