மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் : ஏராளமான பக்தர்கள் தரிசனம்

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலையில் மூலவர் அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து அம்மனுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதையடுத்து உற்சவர் அங்காளம்மனை, சிறப்பு மலர்கள் அலங்காரத்துடன் கோயில் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தனர்.

இரவு 11.30 மணிக்கு மேள தாளம் முழங்க கோயில் மண்டபத்தில்இருந்து வடக்குவாசல் வழியாக ஊஞ்சல் மண்டபத்துக்கு கொண்டு சென்று ஊஞ்சலில் அம்மனை வைத்தனர். இதனை தொடர்ந்து கோயில் பூசாரிகள் ஊஞ்சலை அசைத்தவாறு அம்மனை வாழ்த்தி தாலாட்டு பாடலை பாடினர். இதையடுத்து அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் தேங்காயில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர். இரவு 12.15 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் முடிந்து அம்மனை மீண்டும் கோயில் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். ஊஞ்சல் உற்சவத்தில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் புதுச்சேரி, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் லட்சக்

கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார், திருவண்ணாமலை உதவி ஆணையர் மோகன சுந்தரம், விழுப்புரம் உதவி ஆணையர் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மேல்மலையனூர் பிரகாஷ், கோயில் அறங்காவல் குழு தலைவர் கணேசன், அறங்காவலர்கள் ஏழுமலை, செல்வம், ரமேஷ், சரவணன், சேகர், மணி, கோயில் ஆய்வாளர் அன்பழகன், மேனேஜர் மணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.  செஞ்சி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Related Stories: