நாட்டரசன் கோட்டை கண்ணுடைய நாயகி

கண்ணாத்தாள் என்று பக்தர்கள் உரிமையோடும் பேரன்போடும் அழைக்கிறார்கள். கண்நோய் அனைத்தையும் தீர்ப்பதில் இவளுக்கு நிகர் எவருமில்லை. அந்த சிறு கிராமத்திற்கு பிரண்டைக் குளம் என்று பெயர். யாதவர்கள் குடியிருந்த ஊர் அது. பாலை விற்க நாட்டரசன் கோட்டைக்கு வந்து செல்வர். ஒருமுறை அப்படி நடந்து வரும்போது கால் தடுக்கி பால் அனைத்தும் கொட்டியது. வயதானவர்கள் கொண்டு சென்றால் தடுக்கத்தான் செய்யும் என்று இளைஞர்கள் தலையில் சுமந்தனர். அந்த குறிப்பிட்ட இடத்தை தாண்டும்போது அவர்களின் காலும் இடறியது.  ஏன் இப்படி? என்று தோண்டிப் பார்க்க குபுகுபுவென ரத்தம் பொங்கியது.

உதிரம் பெருகிய கல்லை முழுவதுமாக வெளியே எடுக்க ஆதிநாயகி அழகாக சிரித்தாள். சிலையை நகர்த்திப் பார்க்க நகர மறுத்தாள். ‘‘கண்ணால் பார்’’ என்று காலை இடறியதால் கண்ணுடையவளானாள். கண்ணுடைய நாயகி என்று பக்தர்கள் அழைக்கத் தொடங்கினர். இந்த நாயகி சற்றே தலை சாய்த்து சிலம்பணிந்த பாதத்தின் கீழ் அரக்கனை மிதித்தபடியும், மற்றொரு காலை மடித்து உயர்த்தியபடி காட்சி தருகிறாள். அம்மன் எண் கரங்களுடன் கபாலம், அக்னி, சூலம், உடுக்கை, குறுவாள், கிளி, கேடயம், மணி ஆகியவற்றை தாங்கி வெள்ளித் தேரில் பவனி வருவது கண்கொள்ளா காட்சியாகும். ஆடியில் முளைப்பாரி உற்சவம் நடக்கும். சிவகங்கையிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

Related Stories: