ஆவணி அமாவாசை திருவிழா : ஆயிரக்கணக்கானோர் சதுரகிரியில் தரிசனம்

வத்திராயிருப்பு: ஆவணி மாத அமாவாசை விழாவையொட்டி நேற்று சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு வந்த பக்தர்கள் தண்ணீர் வசதியின்றி தவித்தனர்.  வத்திராயிருப்பு அருகே, மேற்குத் தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட முக்கிய விஷேச தினங்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனடிப்படையில், கடந்த 7ம் தேதி பிரதோஷம், நேற்று அமாவாசை ஆகிய விஷேச தினங்களை முன்னிட்டு 7ம் தேதி முதல் இன்று வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

நேற்று அமாவாசையை முன்னிட்டு, அதிகாலையிலேயே தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு பக்தர்கள் குவிந்தனர். இதனால், 6 மணிக்கு திறக்க வேண்டிய கேட் 5.30 மணிக்கே திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்றனர். வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து அனுப்பினர். கோயிலில் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிசேகங்கள் நடைபெற்றன. அதன்பின்னர் சுவாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் நேற்று பக்தர்கள் வருகை தந்திருந்தனர். பக்தர்கள் மொட்டை போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சிவராம சூரியன் ஏற்பாடு செய்திருந்தார்.

Related Stories: