மணப்பாட்டில் கோலாகலம் : திருச்சிலுவை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உடன்குடி: மணப்பாடு திருச்சிலுவை திருத்தல 439வது மகிமைப் பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 14ம் தேதி திருச்சிலுவை ஆசீர் நிகழ்ச்சி நடக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள மணப்பாடு கடற்கரையில் மணல் குன்றின் மீதுள்ள திருச்சிலுவை திருத்தலத்தின் 439வது மகிமை பெருந்திருவிழா நேற்று துவங்கியது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் முதல் திருப்பலியும், காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலியும், தொடர்ந்து வீரபாண்டிபட்டினம் பங்குத்தந்தை ஆண்ட்ரூ டி ரோஸ் தலைமையில் கொடியேற்றமும் நடந்தது. தொடர்ந்து திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர் நடந்தது. இதில் பங்குத்தந்தையர்கள் செட்ரிக்பீரிஸ், செல்வன், ததேயுஸ், அருமைநாதன், சகாயம், ரோஷன், எட்வின் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

திருவிழாவையொட்டி தினமும் காலை 5.15 மணிக்கு திருச்சிலுவை ஆலயத்தில் திருப்பலியும், 5.30க்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைப்பின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.  விழாவில் செப்.13ம் தேதி காலை 5.30 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோசுக்கு வரவேற்பு, மாலை ஆராதனை, கோட்டாறு மறைமாவட்டத்தைச் சேர்ந்த உபால்டு சிறப்பு மறையுரை நிகழ்த்துகிறார்.

14ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திருப்பலி, 5 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 6 மணிக்கு திவ்ய ஐந்து திருக்காய சபையினர் பவனி வந்து மகிமைப்பெருவிழா திருப்பலி, மெய்யான திருச்சிலுவை ஆசீர், 11 மணிக்கு திருப்பலி, மாலை 4.30 மணிக்கு நற்கருணை ஆசீர், மாலை 5.30 மணிக்கு கொடியிறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. கேரளா, குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து திருவிழாவில் கலந்து கொள்வர். பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரியஜான் கோஸ்தா, உதவி பங்குத்தந்தை மரியசேவியர் ராஜா, திருத்தல ஆன்மகுரு தெயோபிலஸ், பாக்கியபவுல் மற்றும் அருட்சகோதரிகள், புனித யாகப்பர் ஆலய நல கமிட்டி, மணப்பாடு இறைமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Stories: