சேரன்மகாதேவி அருகே திருவிருத்தான்புள்ளி வேலியார்குளத்தில் நாராயணசாமி திருத்தாங்கல் திருவிழா

வீரவநல்லூர்: சேரன்மகாதேவி அருகே திருவிருத்தான்புள்ளிவேலியார்குளத்தில் நாராயணசாமி திருத்தாங்கல் திருவிழா கடந்த 31ம் தேதி தொடங்கி செப்.10ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி கடந்த 31ம் தேதிஅதிகாலை திருக்கொடியேற்றம் நடந்தது. பின்னர் சுவாமி தோப்பில் இருந்து புதிய நாகத்தொட்டில் ஊஞ்சல் கொண்டு வருதல் நிகழ்ச்சியும், அய்யாவுக்கு பணி விடையும், உச்சிப்படிப்பும், அன்னதர்மமும் நடந்தது. அதன்பின்னர் திருஏடு வாசிப்பும், பெண்களுக்கான திருவிளக்கு வழிபாடும், அய்யாவுக்கு பணிவிடையும், அன்னதர்மமும் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் அய்யாவுக்கு பணிவிடை உச்சிப்படிப்பு மற்றும் அன்னதர்மம், திருஏடு வாசிப்பு நடந்து வருகிறது.

7ம் தேதியன்று நடைபெறும் 8ம் திருவிழா அன்று அய்யா குதிரை வாகனத்திலும், 9ம் திருவிழா அன்று அனுமன் வாகனத்திலும், 10ம் திருவிழா அன்று செண்டை மேளம் முழங்க உலகாளும் வாகனத்தில் அய்யா கருட வாகனத்திலும், செப்.10ம் தேதி நடைபெறும் 11ம் திருவிழாவில் செண்டை மேளம் முழங்க அய்யா இந்திர வாகனத்தில் வைகுண்ட ராஜாவாக பவனி வருதலும் நடக்கிறது. செப்.11ம் தேதி அய்யாவுக்கு பணிவிடை நிறைவடைந்த பின்னர் காலை 5 மணிக்கு திருநாமக்கொடி இறக்கி திருவிழா நிறைவடையும். அதன்பின்னர் இனிமம் தர்மம் நடைபெறும். ஏற்பாடுகளை திருவிருத்தான் புள்ளிவேலியார்குளம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

Related Stories: