வள்ளல் முருகன்

மணக்கால்

Advertising
Advertising

மணக்கால் கிராமத்தில் ஊர்நடுவே அமைந்துள்ளது, அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில். ஆலயம் கீழ் திசை நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழைந்ததும் மகாமண்டபம் முகப்பில் இடது புறம் பிள்ளையார் அருட்பாலிக்க, அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் சுப்ரமணியசுவாமி வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் வரமருளுகிறார். மகா மண்டபத்தின் வலதுபுறம் உற்சவத் திருமேனி உள்ளது. தினசரி மூன்று கால பூஜை நடக்கும். இந்த ஆலயம் காலை 8½ முதல் 11½ மணி வரையிலும், மாலை 5 முதல் 6½ மணி வரையிலும் திறந்திருக்கும்.

சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், ஆடிக் கிருத்திகை, கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. பங்குனி உத்திரம் அன்று இந்த ஆலயம் திருவிழா கோலம் பூண்டிருக்கும். அன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் பால் காவடி, மயில் காவடி எடுத்து வந்து முருகன் திருவடிகளில் தங்களது பிராத்தனைகளை நிறைவு செய்வது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

இந்த திருவிழாவைக் காண ஆலயத்தில் கூடிநின்று, முருகனை ஆராதிப்பது இந்த ஆலயத்தின் சிறப்பு அம்சமாகும். ஊரின் மத்தியிள் உள்ளது வரதராஜ பெருமான் ஆலயம். ஆவணி மாதம் நடைபெறும் அந்த ஆலய திருவிழாவின்போது பெருமாள், இந்த முருகன் ஆலயத்துக்கு வந்து ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் தங்கி சேவை சாதிப்பது உண்டு. பின்னர்புறப்படும் பெருமாளும், தாயாரும் இந்த ஆலயத்தில் நடைபெறும் உறியடி உற்சவத்தில் கலந்து கொண்டு, தங்கள் ஆலயம் திரும்புவது வழக்கம்.

இந்த ஆலயத்தின் வளாகத்திலேயே யஜுர்வேத பாடசாலை அமைந்திருப்பது ஆலயத்திற்கு பெருமை சேர்க்கிறது. இந்த பாடசாலையில் பயின்ற பலர்நம் நாட்டிலும், வெளிநாட்டிலும் தலைசிறந்த வேதவிற்பன்னார்களாகத் திகழ்வது பெருமைக்குரிய தகவலாகும். தன்னை ஆராதிக்கும் அனைவருக்கும் இந்த மணக்கால் முருகன் கணக்கில்லாமல் வாரி வழங்கும் வள்ளல் என்று பக்தர்கள் அனுபவபூர்வமாக, மகிழ்ச்சி பொங்கத் தெரிவிக்கிறார்கள். திருச்சி மாவட்டம், லால்குடிக்கு கிழக்கே ஒரு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது மணக்கால்.

- திருச்சி சி.செல்வி

Related Stories: