உடலை விட்டு உயிர் இன்பமாக நீங்கவேண்டும்!

சக்தி ரகசியம் - அபிராமி அந்தாதி

Advertising
Advertising

அபிராமி அந்தாதி பாடல் 17க்கான விளக்கம் தொடர்கிறது.

‘‘வாம பாகத்தை வவ்வியதே’’

சிவபெருமானது இடது பாகத்தை உமையானவள் தான் கவர்ந்து கொண்டாள் என்கிறது இவ்வரி. பிரிங்கி மகரிஷி, சிவனை மட்டுமே பூஜித்து உமையம்மையை வணங்காதிருந்தார். ஒருமுறை உமை, பிரிங்கி மகரிஷி சுற்றிவர முடியாதபடி சிவனோடு சேர்ந்து அமர்ந்து கொண்டார். தவப்பெருமை மிக்க முனிவர் வண்டு வடிவு கொண்டு சிவபெருமானை மட்டும் சுற்றி வணங்கினார். இதை பார்த்த உமை, தவத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தவும், தாம் இறைவனோடு பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலக்கவும் தவம் இயற்றினார். தவத்தின் பயனாய் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்தாள். அந்த வடிவமே அர்த்தநாரீஸ்வரர். அதையே இங்கு ‘வாம பாகத்தை வவ்வியதே’ என்று குறிப்பிட்டார். அடைந்தாள் என்று கூறாமல் ‘வவ்வியது’ என்ற சொன்னது ஏன்? தனக்கும் சிவபெருமானுக்கும் இடையில் யாரும் வரக்கூடாது என்பதால் தவத்தினால் முயன்று அதை பெற்றார். சக்தியில்லாது சிவனருளை பெற இயலாது என்பதையே மிக அழகாக ‘வவ்வியதே’ என்று குறிப்பிட்டார் என்கிறது திருச்செங்கோட்டு தலபுராண வரலாறு. கைலாயத்திலிருக்கும் சிவபெருமான் உமையம்மையானவள் கரியவளாக இருப்பதனால் காளி என்று அழைத்தார்.

அந்த கரிய தன்மையை இறைவன் சூட்டியதால் நாணம் கொண்ட உமை, வெண்மையாக ஆவதற்கு காஞ்சியில் தவம் இயற்றினாள். அதன் பயனால் கருமை நீங்கி வெண்மை நிறம் பெற்றார். சிவனை விட்டுப் பிரிந்து வெகுகாலம் தவம் இயற்றியதால் பிரிவை உணர்ந்த பார்வதி இனி பிரியாமல் சேர்ந்தேயிருக்க வரம் கேட்டாள். சிவபெருமானும் தன் உடலில் பாதி கொடுத்து உமையோடு இரண்டறக் கலந்தார். இதுவும் அர்த்தநாரீஸ்வர வடிவமே. இந்த வரலாற்றையும் அபிராமி பட்டர் சுட்டுகிறார்.‘காளீ’ என்ற வாக்கினாலும் இதனை அறியலாம். தத்துவ நோக்கில் அர்த்தநாரீஸ்வரர் என்பது இந்த இரு கதைகளின் வழியாகவும் பொருளை உணர்த்தவல்லதாக இருக்கிறது. சாக்த தத்துவத்தின்படி ஆன்மாவையே உமையம்மை என்கிறார் அபிராமி பட்டர். ஆன்மாவை காளி என்ற சொல்லும்போது ஆணவ மலத்தோடு கூடியது. களிம்போடு கூடிய செப்பைப் போன்று பிரகாசமற்றிருப்பது. அப்போது இறைவனை பிரிந்திருக்கிறது. தவத்தினால் ஆணவ மலம் நீங்கி காளியாக இருந்த உமை, கெளரி என்ற வெண்மை நிறம் பெறுவது போல் ரசவாதத்தால் களிம்பு நீக்கப்பட்ட பின் கரிய செப்பானது எப்படி தங்கமாக பிரகாசிக்கின்றதோ அதுபோல் ஆன்மாவானது தன்னை உணர்ந்து ஞானம் பெற்ற நிலையில் கெளரியாகிறது.

பிறகு அந்த ஆன்மா இறைவனோடு இரண்டற கலப்பதையே முக்தி நிலையில் அர்த்தநாரியாக உமையம்மை விளங்குகிறாள் என்று கூறுகின்றார். ஆன்மாவானது ஆத்ம ஞானம் பெறாத போது சரீர ஞானத்தை மட்டும் பெற்றதாய் சிவபெருமானோடு பக்தியுள்ள போது இணைந்தும் பக்தியில்லாதபோது பிரிந்தும் இருக்கும். ஞானமாகின்ற தவத்தை மேற்கொண்ட பிறகு இறைவனோடு இரண்டற கலக்கும். அப்படி கலப்பதற்கு நிமித்த காரணமாக இருப்பது பிரிங்கி மகரிஷி என்ற வண்டாகும். பிரிங்கி மகரிஷி என்பது உடலோடு ஆன்மா ஒன்றுகிறபோது சிவத்தை பிரிந்திருக்கிறது. உடல் பற்று நீங்கி ஆன்மா சிவத்தோடு ஒன்றுகிற போது உடல் பற்று நீங்கி பிறப்பறுக்கின்றது. இதையே பிரிங்கி மகரிஷி தியானத்தில், ஆகமங்கள் ‘நிர் மாம்சோ பிரிங்கி விக்ரஹ:’ (மாமிசமற்ற எலும்பு வடிவானவர்) என்று சொல்லப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட தலபுராணத்தின் வழியாக அர்த்தநாரீஸ்வர வடிவமானது ஆன்ம இறைவன் இணைந்து இருக்கின்ற முக்தி நிலையில் பிறவியறுத்து பெறும்போது (ஞானம்) பெற்று ஆனந்தத்தில் என்றுமே நிலைத்து அழிவற்றிருக்கின்ற நிலையை உணர்த்துவதாகும். இதையே ‘யாதொரு தெய்வம் கண்டீர் அங்கு அத்தெய்வமாகி மாதொரு பாகனார் தான் வருவார்’ என்ற பாடலால் ஆன்ம நிலையும் அது பெரும் ஞானமும், அதனால் கிடைக்கும் தன்னுணர்வும் சிவனருளும் பெற்ற பொழுது ஆன்மாவாகிற உமை, சிவனோடு சீவத்தன்மையாகிற பாசம் நீங்கியதால் சிவனே எனப்பட்டார். ஆசை நீங்கி, உடல் பற்று நீங்கி, ஞானம் அடைந்த, உயிர் உணர்வு பெற்று, இறையன்பு கொண்டு இரண்டற கலக்கும் அற்புதத்தையே ‘வவ்வியதே’ என்று கூறுகிறார். மேலும் ‘மதிசயமாக அன்றோ’ என்று இத்தகைய சிறப்புகளை செய்த பரமசிவனை தன் மதிநுட்பத்தால் தன்வயப்படுத்திக் கொண்டதை எண்ணி வியக்கிறார் அபிராமிபட்டர்.

வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்

செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும் சிந்தையுள்ளே

அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகி வந்து

வெவ்வியகாலன் என் மேல் வரும்போது வெளி நிற்கவே

- பாடல் 18

அபிராமிபட்டர் தான் வாழும்போது வறுமை நீங்கி, துன்பம் விலக்கி, இன்பம் பிறக்க இறைவியை வேண்டுகிறார் என்பதை ‘வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன்’ (பாடல்- 47) என்பதனாலும், ‘இல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று நில்லாமை’ (பாடல் - 54) என்பதிலிருந்து வாழ்வையும், வறுமை நீக்கத்தையும், ‘ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்’ (பதிகம்) என்பதனால் துன்ப நீக்கத்தையும், ‘என் அல்லல் எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள்’ (பாடல் - 85) என்று வலியுறுத்துவதிலிருந்து தெரிகிறது. வாழும்போது உடல்நலம் மட்டும் போதாது. இந்த வாழ்வு எல்லாம் ஒரு காலத்தில் நில்லாமல் போய் விடும்.

உடலுக்கு மூப்பு வந்து அனுபவிக்க முடியாமல் போய்விடும். மரணம் உறுதியானது என்பது அனுபவத்தில் அறியப்படுகிறது. அதனால் வாழ்விற்கு மட்டுமல்லாமல்  உடலைவிட்டு உயிர் நீங்கும் போது இன்பமாக நீங்க வேண்டும், இறையருளை பெற வேண்டும், இறந்த பின்பு ஆன்மா தன்னுணர்வு பெற வேண்டும், முக்தியடைய வேண்டும் என்பதை இப்பாடலின் வழியாக நமக்கு அறிவுறுத்துகின்றார். எமன் கொடியவன், நாமோ அறம் இல்லாதவர் என்று அச்சுறுத்தி இறை திருவடியின் நிழலை நமக்கு தந்து இறவா பயணத்திற்கு ஆற்றுப்படுத்துகிறார். இனி இப்பாடலுக்குள் நுழைவோம்.

‘‘வவ்விய பாகத்து இறைவரும் நீயும்’’ - ‘வவ்விய’ என்ற சொல்லானது கவர்ந்து கொள்ளுதல் என்ற செயலையும், சமயக்குறி இடாதவன் என்ற பெயர் சொல்லையும் குறிக்கும்; ‘பாகத்து’ என்ற சொல்லானது பகுதி, இடம், வலம் என்பதை குறிக்கும். ‘வவ்விய பாகத்து’ என்பது குறியீடு இல்லாத (அலிங்கம்) கவர்ந்து கொள்ளக்கூடிய தன்மையுடைய சிவபெருமானின் சுடரின் சூழ்ஒளி போலும், பிரிக்க முடியாத ஒரு பகுதியான உமையம்மையானவள், இடது பாகத்தை பற்றிக் கொண்ட செயலைக் குறிப்பிடும்.‘இறைவரும்’ என்பது உமையம்மையை பாதி வடிவாக கொண்ட சிவபெருமானைச் சொல்கிறது. ஆகமங்கள் இவரை அர்த்தநாரீஸ்வரர் என்று அழைக்கின்றன.‘நீயும்’ என்பது உம்மை தொகையால் ஒரே செயலை செய்யும் இருவரைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவது. உதாரணம் ‘ராமனும், கிருஷ்ணனும் இருவரும் வந்தனர்’ என்ற வாக்கியத்தில் வருதல் என்ற செயலானது இருவருக்கும் ஒன்றாக அமைந்தது. அது போல ‘வவ்விய பாகத்து இறைவரும், நீயும் என்ற சொல்லால் இருவருக்கும் ஒத்த செயல் ஒன்றை குறிப்பிடுகிறார் அச்செயல் யாது?

மேலும் அர்த்தநாரியிலே இருக்கக்கூடிய உமையம்மையை, நீயும் என்று சொன்னால் உமையம்மையானவள் இறைவனோடு கலப்பதற்கு முன்னுள்ள தோற்றம், கேதாரகெளரி, பாகம்பிரியாள் என இவளை குறிப்பிடுவர். இந்த உற்சவத் திருமேனியை இன்றும் திருச்செங்கோடு தலத்தில் காணலாம். அபிராமிபட்டர் ‘வவ்விய பாகத்து இறைவரும் நீயும்’ என்று விளித்தது அர்த்தநாரீஸ்வரரையும், கேதார கெளரியையுமே. சைவ சித்தாந்தம் சார்ந்து இந்த இரண்டையும் உற்று நோக்கினால் ஆன்ம வடிவான உமையம்மையானவள் ஆணவ மலத்தோடு கூடியபோது தனித்து கேதாரகெளரியாக, முழு பெண் வடிவாக தோன்றுகிறாள். ஆன்மாவில் பாதி வடிவான சகஜமலமாகிய ஆணவமலம் இறைவனோடு சேரும்பொழுது முழுவதும் நீங்கும். பாதிவடிவே எஞ்சியது, ஆணவமலம் நீங்கிய ஆன்மா அர்த்தநாரீ (பாதி பெண்) என்று பொருள். ஆன்மா என்பது சாக்த சித்தாந்தத்தை பொறுத்தவரை முழுப்பெண்ணாக குறிப்பிடப்படுகிறது. ஜடமான பாதி ஆணவ மலம், அறிவான ஆன்மாவின் பாதி (சுயம்பு) இயல்பான உண்மை தன்மை. இதையே இந்த தத்துவமானது உணர்த்துகிறது.

ஆணவ மலமானது நீங்காத நிலையில் துன்புறும், நீங்கிய நிலையில் மகிழ்ந்திருக்கும். ‘மகிழ்ந்திருக்கும்  செவ்வியும்’ - மகிழ்தல் என்பது உடல் சார்ந்தது, உள்ளம் சார்ந்தது, அறிவு சார்ந்தது, ஆன்மா சார்ந்தது, இறைவன் சார்ந்தது என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. உதாரணமாக உடல் சார்ந்த மகிழ்ச்சிக்கு இளமை, உள்ளம் சார்ந்த மகிழ்ச்சிக்கு வெற்றி, அறிவு சார்ந்த மகிழ்ச்சிக்கு பெருமை, ஆன்மா சார்ந்த மகிழ்ச்சிக்கு நித்தியம் (பிறவிச் சுழல் இல்லாதவர்), இறை சார்ந்த மகிழ்ச்சிக்கு ஆனந்தம் என ஆகும். இதை அபிராமிபட்டர் வெவ்வேறு சொற்களால் நமக்கு உறுதிப்படுத்துகிறார்: குன்றாத இளமையும் - அம்மை பதிகம், மனதிற்கு வாழ்நாள் வெற்றி பெருமை - பதிகம் 22, ஆன்மாவிற்கு - சத்தியமாய் நித்யமுள்ளத்தில் - அம்மை பதிகம் - 22. இறை சார்ந்த மகிழ்ச்சி - உமையம்மையின் அருளானது உடல் முதல் உயிர் வரை ஈடிலா இன்பம் தரவல்லது என்பதனாலேயே ‘மகிழ்ந்திருக்கும்’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார்.

மகிழ்ந்திருக்கும் என்ற சொல்லானது (முக்காலத்தையும் உணர்த்தும் கால வழு) தெளிவுற காலம் சுட்டாமையால் கடந்த காலத்தில் மகிழ்ந்திருந்ததும், நிகழ்காலத்தில் மகிழ்ந்து கொண்டு இருத்தலையும், எதிர்காலத்தில் மகிழ்ந்து இருக்கப்போவதையும் என முக்காலத்திற்கும் பொருள்படும்வகையில், மகிழ்ந்திருக்கும் என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். உலகியலில் இளமைக்காலத்தில் மகிழ்ச்சியாக இருப்பது, முதுமை காலத்தில் மகிழ்ச்சி இல்லாமல் போவது, நிகழ்காலத்தில் நோயில், வறுமையில், ஏழ்மையில், மகிழ்ச்சி இல்லாமல் போய்விடுவது என்றே அமைகிறது. அத்தகைய துன்பங்களைக் கடந்து,

காலம் கடந்து முக்காலத்திலும் மகிழ்ச்சியை தருவதனாலேயே ‘மகிழ்ந்திருக்கும்’ என்ற வார்த்தையை பயன்படுத்துகின்றார். 'செவ்வியும்’ என்ற வார்த்தையால் ஆன்மாவை, அது தான் எடுத்து கொண்ட உடலை, உள்ளத்தை, அறிவை, மகிழ்ச்சியை குறித்து செம்மைப்படுத்துவதையே, அதாவது துன்பத்தை நீக்கி இன்பத்தை மட்டும் சலிப்பின்றி அனுபவமாய் தருவதையே, ‘செவ்வியும்’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார். இதை ‘ஒரு துன்பம் இல்லாத வாழ்வும்’  என்ற அம்மை பதிக வரியால் நன்கு உணரலாம்.

‘‘உங்கள் திருமணக் கோலமும்’’ - திருமணக் காட்சியை சித்தரித்திருக்கிறார் பட்டர். பொதுவாக திருமணமானது அறத்தை காக்கவும், மகவை பெறுவதற்கும் மேற்கொள்ளப்படும் ஒரு உன்னத சடங்காகும். ஆன்மாக்களை அறத்தில் நிலைபெறச் செய்யும் சடங்கு. அந்த திருமணத்தில் அன்பின் மனம், அறத்தின் மனம் என இருவகை உண்டு. இந்தப் பாடலில் அறத்தின் மனமே வலியுறுத்தப்படுகிறது. உமையம்மையானவள் தாக்ஷாயினியாக இருந்து சிவபெருமானை மணந்து கொள்வது அன்பின் மனமாகும்.

அறத்தின் மனமானது இமவானின் புதல்வியான உமையம்மையாக அவதரித்து சிவபெருமானை மணந்ததாகும். இந்த அறத்தின் வழிவந்த திருமணகோலத்தை தியானம் செய்து வழிபடுவோருக்கு அறம், பொருள், இன்பம், வீடு என நான்கு வகை பயனையும் தரவல்லது. அதை பெறவே உமையம்மையை தியானிக்கின்றார். ‘கோலமும்’ என்ற வார்த்தையால் திருமணச் சடங்கின்போது உமையம்மை உடனாய சிவபெருமான், இமவான், அனைத்து தேவர்கள் என அனைவரையும் ஒருங்கே காண்கிற காட்சியாகும். அனைத்து தேவதையையும் அதனதன் வழியில் அவரவர் மகிழ்வித்து உபாசனையினால் பெறுகின்ற பயனை, இந்த ஒரு திருமணக்கோலத்தை தரிசிப்பதனாலேயே பெற்று விடலாம்.

அனைத்து தேவதைகளையும் ஒருங்கே காண்பது மிகவும் அரியதாகும். அதனாலேயே திருமணக்கோலம்’ என்கிறார். ‘‘சிந்தையுள்ளே’’ - சிந்தை என்பது புலன்களின் வழி உள்ளம் பெற்ற ஒன்று சேர்ந்த தகவல்களைப் பரிசீலனை செய்து ஒரு முடிவு எடுத்து தெளிவுபட உடலால் அனுபவமாக்கும் சாதனமாகும். உதாரணமாக, சாலையைக் கடக்கும் ஒருவன் முதலில் கண் சாலையை உற்று நோக்கி எந்த வாகனங்களும் வரவில்லை என்பதை உறுதி செய்துகொள்கிறது. பிறகு கடக்க அனுமதிக்கும் சிக்னலையும் கணித்து, இந்தத் தகவலை கண் மூளைக்குச் சொல்ல, மூளை கால்களை, சாலையைக் கடப்பதற்குப் பணிக்கிறது.

இந்த செயலை உள்ளிருந்து செய்யும் உறுப்பிற்கு சிந்தை என்று பெயர்.‘‘அவ்வியம்’’ - சிந்தை என்று பெயர். பொறாமை, பொய், மனக்குழப்பம் (ஒழுங்கற்ற நிலையில் உள்ள மனம்) சிந்தை செய்கின்ற வேலையின் வழி மனக்கோணல் நீங்கி, வேண்டுதல் வேண்டாமை என்ற பாகுபடுத்தும் பண்பு தரும் உணர்வையும், அவ்வுணர்வின் வழிபெறும் அனுபவத்தையும்தான் ‘‘சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்து’’ என்கின்றார். அதாவது மெய் அனுபவத்தையே மனம் குற்றங்கள் அற்று காட்ட வேண்டும். அதன் வழிதான் மனிதனுக்கு அனுபவம் ஏற்பட வேண்டும். அது அருளால் மட்டுமே சாத்தியம்.

பொதுவானவர்களுக்கு அருளில்லாதபோது மனமானது கோணலானதாகவும், பொய்யுரைப்பதாகவும், பொறாமையாகிய குற்ற குணங்களுடையதாகவும் அமைந்திருக்கும் மனது அல்லது சிந்தை, அபிராமிபட்டரின் கருத்துப்படி இப்படி இயல்பாகவே கோணலாக இருக்கக்கூடியதைத் ‘தீர்த்து’ சிந்தையை திருத்தி, செம்மைப்படுத்தி, நல்வழிப்படுத்துவது உமையம்மையின் அருளாகும். இதையே, ‘ஆசைக் கடலில் அகப்பட்டு’ (பாடல் - 32), ‘நெஞ்சம் பயில நினக்கின்றிலேன்’ (பாடல்- 59) திருமுறையினாலும் இந்த வார்த்தையை நன்கு உணரலாம்.

இந்தப் பாடலைப் பொறுத்தவரை நோயுற்ற மனிதனுக்குள் மருந்து எப்படி வேலை செய்யும் என்பதை மருத்துவர் தெளிவாக அறிந்து, மருந்தினை உட்செலுத்தி நோயைப் போக்குவதுபோல, இறைவியின் மருந்தாகிய அருளானது பிறவி நோயுடைய மனிதர்களுக்கு சிகிச்சை செய்கிறது. இதையே, ‘பிணியே பிணிக்கு மருந்தே’ (பாடல் - 24), ‘விருந்தான வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே’ (பாடல்- 900, ‘என்னை ஆண்ட’ ஆகிய வரிகளால் அறியலாம். அபிராமிபட்டர் சமூகத்தின் சார்பில் தன்னை முன்னிலைப்படுத்தி ‘என்னை’ என்று குறிப்பிடுகிறார். இதற்கு என்ன பொருள்?

எந்த தன்மையை குறிப்பிடுகிறார்? ‘நாயேனையும்’ (பாடல் 61) என்று தன் இழிநிலையைக் குறிக்கிறார். ‘என்னை படையாளை’ (பாடல்-84) என்று, உமையம்மையின் அருளைத்தான் பெற்று விட்ட சிறப்பைக் கூறுகிறார். ‘என்னை’, ‘ஆண்ட’ ஆகிய சொற்களால், முன்னர் இழிவாக இருந்த சிந்தையை, தன்னருளால் இறை இருக்கும் இடமாக மாற்றியருளியதையும் இணைத்து இழிவும், சிறப்பும் சேர்த்து இருவகையாலும் குறிப்பிடுகிறார். ‘ஆண்ட’ என்று, தொழுபவருக்குரிய சிந்தையை அவள் அருளால் பெற்றதைக் குறிப்பிடுகின்றார்.

‘‘பொற்பாதமும்மாகி வந்து’’ - ‘பொற்பாதம்’ என்று தான் இழிவுற்று இருந்த நிலையிலிருந்து உயர்வான நிலைக்குவர காரணமாகயிருந்த சாதனத்தை குறிப்பிடுகிறார். ஸ்ரீவித்யா உபாசகர்களை பொறுத்தவரை சாதனங்கள் ஐந்தாகும் - குரு, பூஜை, பொருள், காலம், செய்யும் முறை. இங்கே குறிப்பிடுவது ஐந்தையுமாம். இறைவியே குருவாக இருந்து அறிவித்தாள். ‘நின்பாதம் எனும் வாசக்கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட’ (பாடல் - 32)

பூஜை என்பது, சாக்த வழிபாடு சார்ந்து, இறைத்திருமேனியை வழிபடுவதாம்.

வழிபாட்டிற்கு மூன்று மூர்த்திகள்: ஸ்ரீசக்ரம் -  ‘ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’ (பாடல் 19); ராஜராஜேஸ்வரி விக்ரஹம் - பாசாங்குசமும் கரும்பு வில்லும் சேர்த்தாளை (நூல் பயன்);  சிவலிங்க வடிவம் - ஆத்மார்த்த மூர்த்தி. ‘நின் துணைவரும் நீயும்’ (பாடல் - 8) என்று மூன்றையும் பாதகமாகவே குறிப்பிடுகின்றார். பொருள் - பூஜைக்கு தேவைப்படும் பொருளையே இங்கு பொருள் என்கிறோம். அந்த வகையில் ‘பதாம்புயத்தில்’ (பாடல் - 12) எனும் வார்த்தையால் தாமரையைக் குறிப்பிட்டார்.

காலம் - பூஜை செய்யக்கூடிய காலத்தை திருவடி என்றே குறிப்பிட்டார். ‘யாமம் வயிறவர் ஏத்தும் பொழுதெமக்கென்று வைத்த சேமம் திருவடி’ (பாடல் - 73) செய்யும் முறை - பொருட்களை கொண்டு குறிப்பிட்ட காலத்தாலும், மனதாலும், வாக்காலும், காயத்தாலும், இறையருளை பெறவேண்டி, இறைவியை குறித்து செய்யப்படும் செயலாகும். இதையும் திருவடி என்று குறிப்பிட்டார். ‘பத்ம பதயுகம் சூடும் பணி எனக்கே அடைத்தனை’ (பாடல்-27). மேற்கண்ட வரிகளால் சாதனங்களான ஐந்தையுமே பாதம் என்ற சொல்லாலேயே குறிப்பிட்டுள்ளார்.

ஆகிவந்து - குருவோ, பூஜையோ, பொருளோ, காலமோ, செய்யும் முறையோ. இவைமட்டும் இறையருளை பெற்றுத் தருமா? தராது உபாசகன் வேண்டியழைத்தாலும் உமையம்மை வாராதிருக்கலாம். காலம் சரியாக இருந்தாலும் பலன் விளையாதிருக்கலாம். பூஜை சரியாக நடந்தாலும் தெய்வ அருள் தோன்றாதிருக்கலாம். அதை இறைவி ஏற்காதிருக்கலாம். செய்யும் முறை சரியாக இருந்தாலும், இறைவி எதிர்படாமல் இருக்கலாம். அதற்கு இறைவியானவள் இவற்றையெல்லாம் தன் கருணையினாலே மெய்யாக்கினாலேயன்றி இயல்பில் அனைத்தும் பொய்யாகிப் போகும் என்பதனை வலியுறுத்தவே,

‘பொய்யாகியிருக்கின்றவற்றை எல்லாம் தன் கருணையினால் பெண் ஆக்கி அருள்வதனால் ஆகிவந்து’ என்கிறார். மின்சாரம் இல்லாமல் மின்சார சாதனம் இருந்து மட்டும் என்ன பயன்? அதுபோல் உமையம்மை அருளில்லாமல் இவை அனைத்தும் பயனற்றதாகும். அனாலேயே ‘ஆகிவந்து’ என்கிறார். ‘‘வெவ்விய காலன்’’ - வவ்விய என்றால் மிகுந்த சினத்தோடு கூடிய காலன் என்பதைக் குறிக்கும். ‘கலையதி இதி காலஹ:’ (கணக்கிடுவதனால்) காலன் என்று பொருள். உயிரானது உடலோடு கூடியிருக்கும் நாட்களை கணக்கிடும் வேலையைச் செய்வதனால் காலன் என்று பெயர் பெற்றான்.

உடலையும், உயிரையும் பிரிக்கின்ற செயலை சரியாக காலக் கணக்கிட்டுச் செய்பவன் காலன். அவனை கோபிப்பதில் அர்த்தமில்லை. பிறகு ஏன் கோபப்படுகிறார்? தர்மராஜன் என்பது காலனுக்கு மறுபெயர். இதற்கு அறத்தை விளங்கச் செய்பவன் என்று பொருள். அறத்தை செய்பவருக்கு அவன் பணிவானவனாகவும், அறத்தை செய்யாதவருக்கு கோபக்காரனாகவும் இருக்கிறான். அறத்தை செய்யாத ஆன்மாக்களை கோபிப்பதனால் ‘வெவ்விய காலன்’ என்கின்றார். அறம் என்றால் என்ன? அறம் என்பது உடம்பைக் கொண்டு உயிரை அறிதலாகும். அப்படி உயிரை அறிந்தவர், இறை உணர்வு பெறுவார்.

 உடல் சிறையிலிருந்து தன்னைத் தானே விடுவித்துக் கொள்வார். அங்ஙனம் செய்யாது உடல் உயிரோடு கூடி வாழும் காலத்தில் உயிரை உணராமல் யாக்கையின்பத்தை மட்டுமே அனுபவித்து ‘ஆசைக் கடலுள் அகப்பட்டு’ (பாடல் - 32), ‘குடறும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே’ (பாடல் 48) வசப்பட்டு, இறுதியில் இறந்தும், பிறந்தும், பிறக்க முற்படும் அறமில்லாதவர்களைக் கண்டு, அறத்தோடு திகழ்கின்ற எமனானவன் கோபப்படுகிறார். அதை நமக்கு முன்கூட்டியே அறிவுறுத்துகின்றார் அபிராமி பட்டர். தான் தெரிந்தோ, தெரியாமலோ அறத்தை மறந்ததால் எமன் கொல்லும் சினத்திலிருந்து தன்னை காக்க முறையிடுகிறார்.

இதை மேலும், ‘உடம்போடு உயிர் உறவு அற்று அறிவு மறக்கும் பொழுதென் முன்னே வரல் வேண்டும்- வருந்தியுமே’ (பாடல் -89) என்பதனாலும் அறியலாம். ‘‘என்மேல் வரும்பொழுது’’ - ‘காலக்கணக்கின் வழியே என் ஆயுள் முடிந்தபோது மிகச்சரியாக என்னை வந்து எமன் அழைக்கும் சமயத்தில் உமையம்மை சரியாக அந்தப் பொழுதில் காலதாமதம் செய்யாமல் என் உடலுக்கு வெளியே நின்று வெளி நின்ற காலனை அணுக ஒட்டாது காக்க வேண்டும்’ என்று வேண்டுகிறார். அந்த நேரத்தில், தான் அழைக்க மறந்தாலும், வருந்தாது வரவேண்டும்!

‘வருந்தியுமே’ (பாடல் - 89) என்பதனாலும், தான் வருவதோடு மட்டுமல்லாமல் ‘இரக்கம் தரும் நின் துணைவரும் நீயும்’ (பாடல்-89) என்று கூறுவதிலிருந்தும், மீண்டும் பிறப்பில் உழலாமல் உமையம்மையின் கணவரின் அருளால் முக்தியையும் பெறவேண்டி இருவரையும் ஒன்றாக அழைக்கின்றார். ‘‘வெளி நிற்கவே’’ - உமையம்மை உடலுக்கு உள்ளிருக்கும்போது உயிரானது உடலைக் கொண்டு தன்னுணர்வு பெறும்; உடலுக்கு வெளியில் உமை இருக்கும்போது உடலோடு கூடிய உயிரானது தன் உணர்வை இழக்கும்.

இறக்கும் காலம் வரை தன் உணர்வைத் தரும் உமையம்மையைத்தான் உடலை விட்டு வெளியே உயிராக வருகிறபோது, வெளியில் இருந்தும் ஆன்ம உணர்வை பெறுவதற்கு உமையம்மையை ‘வெளி நிற்கவே’ என்று ஆன்மா உடலுக்கு வெளியிலிருந்தபோதும் தன்னுணர்வு பெற பிரார்த்திக்கிறார். உமையம்மை உள்ளிருந்தால் போகத்தையும், வெளியிலிருந்தால் மோட்சத்தையும் தருவாள் என்று அறிவுறுத்துகின்றார். வெளிநிற்கவே என்று கடைசியில் (வ்+ஏ) ஏகாரத்தை பயன்படுத்துகின்றார். வெளிநிற்க வேண்டும் என்பதை உமையம்மையிடம் அன்பு கட்டளையிடுகின்றார்.

‘வராமல் இருந்துவிடாதே, வேறு ஏதேனும் காரணம் கூறிவிடாதே, நான் அழைக்கவில்லை என்று வருந்தாதே, உடம்போடு உயிர் உறவு அற்றபோது அறிவு இழந்துவிடும் என்பதனால் தான் நன்றாக வாழும்போதே இதற்கான வழிவகையை செய்ய முன்னேற்பாடாக ‘வெளிநிற்கவே’ என்று ‘ஏ’காரத்தினால் வலியுறுத்துகிறார். எமனும் யாருக்காகவும் பயப்படாமல் பாசம் வீசிய தலம் திருக்கடையூர். ஆதலால் அந்த நேரத்தை ‘பொழுது’ என்று மிகச் சிறப்பாக இறக்கும் நேரத்தை வலியுறுத்துகிறார், மீண்டும் பிறவாதிருக்க முயல்கிறார்.

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

(தொடரும்)

Related Stories: