கீழக்கரை அருகே செய்யதலி ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு ஊர்வலம்

கீழக்கரை: கீழக்கரை அருகே மகான் செய்யதலி ஒலியுல்லா தர்ஹாவில் நேற்று அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதில் அனைத்து மதத்தையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே பெரியபட்டினத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லா தர்ஹா உள்ளது. இந்த தர்ஹாவில் சந்தன கூடு திருவிழா கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை சந்தனக்கூடு திருவிழா நடந்தது. பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் முகமது மீராசா தலைமையில் விழா கமிட்டி தலைவர்கள் சீனி நஜிமுதீன், சிராஜூதீன், பொருளாளர் அப்துல் மஜீது, நிர்வாகிகள் இஸ்மாயில், சாகுல்ஹமீது, சுல்தான், பசீர் முன்னிலை வகித்தனர்.

விழாவையொட்டி பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்ஆ பள்ளியிலிருந்து நேற்று அதிகாலை 3.30 மணியளவில் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலம் அதிகாலை 5.30 மணியளவில் செய்யதலி ஒலியுல்லா தர்ஹா வந்தடைந்தது. அங்கு மகானின் சமாதியில் சந்தனம் பூசப்பட்டது. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, பிற மதங்களையும் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். விழா நிறைவாக வரும் செப். 7ல் கொடி இறக்கப்பட உள்ளது.

Related Stories: