கோலாகல வாழ்வருளும் கோல்ஹாபூர் மகாலட்சுமி

இத்திருக்கோயில் எந்த மந்திரத்தை உச்சாடனம் செய்தாலும் பலனளிக்கும் பீடம் இதுவே. இத்தேவி மகிஷாசுரமர்த்தினியாக உருவெடுத்ததே ஒரு தத்துவ நோக்கை உள்ளடக்கியது. அஞ்ஞானமே உருவெடுத்து வந்த மகிஷாசுரனை மெஞ்ஞானமே உருவான ஞானசக்தி அழிக்கிறாள் என்பதே இதன் தத்துவ விளக்கம். தேவி மஹிஷமர்த்தினி வீரசக்தி. க்ரோதீசரின் இடப்பாக்கத்தில் அருட்பிரகாசமாய், மூன்று கண்களை உடையவளாய், நம் உயிரைக் காக்கும் ஒப்பற்ற துணையாய் இருப்பவள். பாவிகளைத் தாய் போன்று அன்பு செலுத்திக் காப்பவள். பயனற்ற என்னையும் தடுத்தாட்கொண்டு பயன் உடையவளாக்குபவள். தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரமனும் பணியும் மகாதேவனுக்கு மனதிற்கு இனியவள். சர்க்கரார பீடத்தில் அமர்ந்தவள். முழுமையானவள்.

Advertising
Advertising

பழமையானவள் திரிபுரங்களை எரித்த ஈசனின் ராணி. நாராயணனின் சகோதரி. அழகிய கூந்தலை உடைய தேவி. அன்பர்களின் மனதிற்கு இனியவள். மங்களம் தருபவள். நீலகண்டரின் இதயத்திற்கேற்ற பச்சை பசுங்கிளி. மகிஷனை வதம் செய்ததால் இப்பெயர் பெற்ற இத்தாயை வர்ணிக்க ஒரு எல்லை ஏது!

இந்தியாவில்  பல சக்தி ஸ்தலங்கள் இருந்தாலும், குறிப்பிட்ட ஸ்தலங்கள் நம் மனத்தில் நீங்கா இடம் பெற்று விடுகின்றன. சென்னை காளிகாம்பாள்,  கற்பகாம்பாள், மதுரை மீனாட்சி, கொல்கத்தா காளி தேவி மும்பை மகாலக்ஷ்மி, கொல்லூர் மூகாம்பிகை, சோட்டாணிக்கரை பகவதி, காசி விசுலாட்சி, காஞ்சி காமாட்சி என்று ஒரு நீண்ட பட்டியல் நம் மனத்தில் எழும். இதே போல் மராட்டிய மாநிலத்திற்கு செல்வ வளத்தை தரும் மகாலக்ஷ்மி கோல்ஹாபூரில் எழுந்தருளியுள்ளாள். இத்தலம் ‘தட்சிண காசி’ என்றும் அழைக்கப்படும் பெருமைக்குரியது. இந்தியாவின் எப்பகுதியிலிருந்தும் எளிதில் கொல்ஹாபூரை அடையலாம். மும்பையிலிருந்து மகாலக்ஷ்மி எக்ஸ்ப்ரஸ்’ இத்தலத்திற்கு செய்கிறது.

கோயிலுக்கருகில் பஞ்ச கங்கா நதி ஓடுகிறது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மகாலக்ஷ்மி, சௌந்தர்ய ரூபவதி. துர்கா லக்ஷ்மி ஐக்ய ரூபத்தை எடுத்துக் காட்டுவதைப் போல் அமைக்கப்பட்டுள்ள தேவியின் கிரீடத்தில் நாகம் படமெடுத்தாடுகிறது. அன்னையின் பாதத்தில் சிம்மத்தின் ரூபமும், தாமரையின் வடிவமும் அமைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமில்லாமல் ஸ்ரீ மகாலக்ஷ்மி விஷ்ணு ஸ்வரூபமாக இருப்பதாகவே பக்தர்கள் நம்புகிறார்கள். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி ஸ்ரீ மகா விஷ்ணுவின் அம்சமே ஆனதால், இங்குள்ள துர்கா லக்ஷ்மி, மகாவிஷ்ணுவாக போற்றப்படுவதில் வியப்பில்லை.கோயில்களில் உள்ள கடவுள் சிலைகளுக்கு சக்தியை கொடுப்பதற்காக அதன் பீடங்களில் நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி போன்றவற்றை இடுவார்கள். ஆனால் கொல்ஹாபூர் மகாலக்ஷ்மி சிலையிலேயே நவரத்தினங்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

புராண வரலாறு:

முன்பொரு சமயம் சிவனுக்கும் சக்திக்கும் ஒரு சர்ச்சை ஏற்பட்டதாம். சிவபெருமை சேர்க்கும் வாரணாசி க்ஷேத்ரம் பெரியதா அல்லது சக்தியின் க்ஷேத்ரம் பெரியதா என்பதே அது. இருவரும் மகாவிஷ்ணுவிடம் செல்ல அவர் ஒரு தராசில் இரண்டையும் வைக்க, தேவியின் பக்கமே தராசின் தட்டு தாழ்ந்திருந்ததாம். இரண்டு தலங்களும் சிறந்ததே ஆயினும் தேவியின் திருத்தலம் ஒரு மணி அளவு அதிக பெருமை உடையதென்று மகாவிஷ்ணு தீர்ப்பளித்தாராம். சிவனுக்கும் சக்தியைக் கொடுப்பவளல்லவா அந்த பராசக்தி! ஆதலால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. பாவங்களை போக்கிட காசிக்கு செல்ல வேண்டும் என்பது இந்துக்களின் ஐதீகம். ஆனால், பக்தர்களின் பாவங்களை போக்குவதோடு மட்டுமின்றி, கேட்ட வரங்களை அள்ளிக் கொடுத்து அருள்வது கோல்ஹாப்பூர் மகாலக்ஷ்மி அன்னையின் சிறப்பம்சம். அதனாலேயே, ஆண்டு முழுவதும் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் பக்தர்கள் இத்தலத்துக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். காசியை விட ஒரு அரிசி எடை மிகுந்த புண்ணியம் பெற்றது இந்த தலம்.

இத்தலம் கரவீரபீடம் என்றும் அழைக்கப்படுகிறது. அன்னையும் ‘கரவீரவாஸினி’ என்றே போற்றப்படுகிறாள். ஆதியில் பிரம்ம தேவர், கயா, லவணன், கோலன் என்ற மூன்று மானஸ புத்திரர்களைப் படைத்ததாகவும் இதில் லவணாசுரன் மகாவிஷ்ணுவால் கொல்லப்பட்டதாகவும் கோலன், இந்நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து பின் தன் மூத்த மகனிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டு கானகம் ஏகியதாகவும், கூறப்படுகிறது. மூத்தமகன் கரவீரன் கொடுங்கோலனாக இருந்ததால், மும்மூர்த்திகளும் அவனுடன் போரிட்டு அவன் உடலை சுக்கு நூறாக சிதைத்தனர். அவன் உறுப்புகள் விழுந்த இடங்கள் தீர்த்தங்களாக உருப்பெற்றன. அவன் நினைவாக இந்த க்ஷேத்ரமும் கரவீரபுரம் என்று அழைக்கப்படுகிறது. வனம் சென்ற கோலன், கரவீரனின் முடிவைக் கேள்வியுற்று, தேவர்களை எதிர்க்கத் துணிந்தான். ஸ்ரீ மகாலக்ஷ்மியின் துணையாலேயே, மும்மூர்த்திகளும் வெற்றி பெற்றதை அறிந்தான்.

மகாலஷ்மியைக் குறித்து தவமியற்றி, அன்னை காட்சி தந்த போது நூறு வருடங்களுக்கு, லக்ஷ்மி இந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டுமென்று வரம் கேட்டான். வரத்தை தந்து விட்டு லக்ஷ்மி அவ்விடத்தை விட்டகன்றாள். 100 வருடம் சென்றதும் மகாலட்சுமி தனது சக்தி சேனையுடன் வந்து கோலனுக்கு முடிவுகட்டினாள். கோலன் ஆண்ட ஊர் கோல்ஹாபூர் ஆயிற்று. அகஸ்தியர், பராசரர், துர்வாசர், இந்திரன், நாரதர் உட்பட பலரும் இங்குள்ள மகாலக்ஷ்மியை வழிபட்டுள்ளனர். தானும் விஷ்ணுவும் வேறல்ல என்பதை பராசர முனிவருக்கு உணர்த்திய தலம் இது. ஒரு முறை பராசர முனிவர் (பிள்ளை வரம் வேண்டி) அன்னையை நோக்கி தவமியற்றிய போது அவருக்கு விஷ்ணுவாகக் காட்சி தந்து, தானும் விஷ்ணுவும் வேறல்ல என்பதை உணர்த்தி வரமும் தந்தாள் தேவி. அவ்வாறு தோன்றியவரே  வேதவியாசர்.‘கரவீரம்’ என்றழைக்கப்பட்ட இன்றைய கோல்ஹாப்பூரும் முக்கியமானது.

இங்கு மகாலக்ஷ்மி அன்னையுடன் திருமாலும் வாசம் செய்வது விசேஷம் ஆகும். மகாபிரளயம் நிகழ்ந்த காலத்தில் கூட அன்னையும் திருமாலும் இத்தலத்தில் இருந்து வெளியேறவில்லை என்பதால், இத்தலம் ‘அவிமுக்தி’ க்ஷேத்திரமாக புகழ் பெற்றுள்ளது. அத்துடன் திருமால் வாசம் செய்வதால் அனைத்து தீய சக்திகளிடம் இருந்தும் பாதுகாக்கப்பட்ட தலமாக ‘கரவீரம்’ விளங்குவதாக இத்தல வரலாறு கூறுகிறது. வைகுண்டத்தில் வாசம் செய்வதை விட அன்னை மகால்க்ஷ்மியின் இஷ்ட தலமான கோல்ஹாபூரில்தான் திருமால் அதிக காலம் வாசம் செய்கிறார் என்பது ஐதீகம். அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் கரவீரபீடமாக துலங்குகிறது. அம்பிகை மஹிஷாஸுரமர்த்தினியான மகாலக்ஷ்மியாக அருள்கிறாள். இத்தேவிக்கு ஆசனமோ, திருவடிகளில்கமல மலரோஇல்லை. இருபுறங்களிலும் யானைகளும் இல்லை. இத்தேவியின் சிரசில் சிவலிங்கம் ஒன்று உண்டு. தேவி மஹாத்மியத்தின் உத்தரபாகம் 2426 அஷ்டதசாபுஜா எனும் ஸ்லோகம் பூஜைக்குரியவள்.

பதினெட்டு கரங்களோடு கூடியவள். மஹிஷாஸுரமர்த்தினியான மகாலக்ஷ்மியே அவள். மகாகாளியும் அவளே சரஸ்வதியும் அவளே என்கிறது. புண்ணிய பாவங்களுக்கு ஈஸ்வரியும், மஹேஸ்வரியும் அவளே என்கிறது. அது குறிப்பிடும் திருக்கோலத்தில் இத்தலத்தில் தேவி அருளாட்சி புரிகிறாள். பக்தர்கள் செய்த குடம் குடமான பால், தேன், சந்தன அபிஷேகத்தால் தேவியின் திருவுரு சிதையத் தொடங்க பின் சிலைக்கு வஜ்ரலேக் எனும் மருந்துக்காப்பு சாத்தப்பட்டு பின் அபிஷேகங்கள் நிறுத்தப்பட்டன. அதற்குப்பதிலாக பஞ்சகால பூஜைகள் தினமும் நடக்கிறது. பூஜையின் போது வித விதமான பணியாரங்கள் படைக்கப்படுகின்றன. தேவி தன் திருக்கரங்களில்வாள், கேடயம், கதை, மாதுளை போன்றவற்றை ஏந்தியிருந்தாலும் அவை அனைத்தும் பட்டாடைகளால் முழுதுமாக மறைக்கப்படுகின்றன.

தலையின் வைரக்கிரீடம், ஐந்துதலை வெள்ளி நாகம் குடைபிடிக்க சர்வாலங்கார பூஷிதையாக அம்பிகை ஜொலிக்கிறாள். தேவியின் தலையில் நாகங்கள் ஏன்? பராசர முனிவர் செய்த கடுந்தவத்தால் பாதாளலோக நாகங்கள் துவண்டன. நீர் நிலையில் நீராடு நீரைக்குடிப்பதால்தானே பராசரருக்குபலம் என நினைத்த நாகங்கள் அத்தனை நீரையும் குடித்துவிட பராசரரிடம் சாபம் பெற்றன நாகங்கள். கோல்ஹாபூர்சென்று மஹாலக்ஷ்மிக்கு உபசாரங்கள் செய்தால் சாபம்நீங்கும் என்றார் பராசரர். அதன்படி கோல்ஹாபூர் வந்த நாக்ங்கள்தேவியை ஓங்காரரூபிணி. காமினி விஷ்ணுஹ்ருதயகமல வாஸினி என பல்வேறு துதிகளால் துதிக்க அதில் மகிழ்ந்த தேவி நாகங்களுக்கு சாபவிமோசனம் அளித்து தன் தலையிலும் சூட்டிக்கொண்டாள் என்கிறது தலபுராணம். மஹாலக்ஷ்மி அஷ்டகம் இவளை கோலாசுரபயங்கரீ என துதிக்கிறது.

சாரதா நவராத்திரி ஒன்பது நாட்களும் வித விதமான அலங்காரங்களில் வித விதமான வாகனங்களில்தேவி பவனி வருவதைக் காணக் கண் கோடி வேண்டும். ஆலயத்தின் எட்டு திக்குகளிலும் எட்டு சிவலிங்கங்களும், நான்கு திசைகளிலும் நான்கு தடாகங்கள் உள்ளதும் இத்தல அற்புதம். மகாலக்ஷ்மி அன்னை வீற்றிருக்கும் இத்தலத்துக்கு துல்லியமான வரலாற்று ஆவணங்கள் ஏதும் இல்லை. மகாலக்ஷ்மி உருவில் விஷ்ணு பகவானே இங்கு குடியிருப்பதாக ’கரவீர மகாத்மியம்’ என்ற புராணம் கூறுகிறது. வேத காலத்தில் தேவர்களை அழித்தொழித்தும், துன்புறுத்தியும் வந்த ‘கோலசுரன்’ என்ற அசுரனை,  மகாலக்ஷ்மி அன்னை உருவம் தரித்து வந்த மகாவிஷ்ணு அழித்து, ‘கரவீர்’ பகுதியை புனிதமாக்கினார். கோலாசுரன் அழிக்கப்பட்ட இடத்தில்தான் ‘கர்வீர் நிவாசினி ஸ்ரீ மகாலக்ஷ்மி’ கோயில் பிரமாண்டமாகவும், கலை நேர்த்தியுடனும் எழுப்பப்பட்டிருக்கிறது.

6 அல்லது 7ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில்(600/700ம் ஆண்டு வாக்கில்) சாளுக்கிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாக நம்பப்பட்டாலும் அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் கிடையாது. 10ம் நூற்றாண்டு வாக்கில் இயற்கை பேரிடரால் ஸ்ரீ மகாலக்ஷ்மி அன்னையின் கோயில் இடிந்து விழுந்ததாகவும், அதன் பிறகு 17ம் நூற்றாண்டு வரை அன்னையின் விக்ரகம் வேறொரு இடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆவணங்கள் தெரிவித்தாலும், இந்த காலக்கட்டங்களில் அன்னையின் விக்ரகம் எந்த இடத்தில் வைத்து பூஜிக்கப்பட்டது என்ற கேள்விக்கு விடையில்லை. மகாராஷ்டிராவில் ‘மராத்தா‘ மன்னர்கள் ஆட்சி தோன்றிய பிறகுதான் இடிந்து விழுந்த அன்னையின் கோயிலுக்கு விடிவு காலம் பிறந்தது. மராத்தா மன்னர்களின் பெருமுயற்சியால் கோயில்(இப்போதைய தலம்) மீண்டும் கட்டப்பட்டு 1715ம் ஆண்டில் அன்னையின் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

முழுக்க முழுக்க கருங்கல்லால் பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் இக்கோயிலில், நான்கு திசைகளை விளக்கும் வகையில் நான்கு கோபுரங்கள் உயர்ந்து நிற்கின்றன. கோயிலுக்கு நான்கு திசைகளிலும் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கிழக்கு திசையில் கோயிலின் பிரதான நுழைவு வாயில் இருந்தாலும், பக்தர்கள் வடக்கு வாசல் வழியாகவே கோயிலுக்குள் பிரவேசம் செய்கின்றனர். ஏனெனில் அங்கிருந்துதான், கோயிலின் ஒவ்வொரு பிராகாரமாக வழிபாடு துவங்குகிறது.வடக்கு திசையில் இருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை முழு முதற்கடவுள் விநாயகப் பெருமான் வரவேற்கிறார். இங்கு கோயிலின் கருங்கல் சுவற்றில் விநாயகர் விக்ரகம் செதுக்கப்பட்டு காவி நிறத்தில் காட்சியளிக்கிறார். ‘சாக்ஷி கணேஷ்’ என்றழைக்கப்படும் விநாயகரை பக்தர்கள் மூன்று முறை கரவொலி எழுப்பி வணங்கி விட்டு உள்ளே சென்றால், வலது பக்கத்தில் மகாகாளியம்மன்.

எல்லா கோயிலிலும் காளி விக்ரகம் ஆக்ரோஷத்துடன் காணப்படுவதுதான் வழக்கம். ஆனால் இத்தலத்திலோ சிவப்பு பட்டுடுத்தி, தலையில் கிரீடம் தாங்கி சாந்த சொரூபிணியாக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறாள் மகாகாளி.  மகாகாளியை தரிசித்து விட்டு எதிரில் திரும்பினால் இடது பக்கத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மி யந்திரம். அம்மன் உருவப்படத்துக்கு கீழ், கண்ணாடிப் பேழையில் யந்திரம் பத்திரப்படுத்தப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இங்கு குங்குமம் தூவி வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.. அதற்கு நேர் எதிர் திசையில் வருண பகவான் சந்நதி.இதற்கு அடுத்ததாக நான்காவதாக வருவது கருவறை. அழகிய வேலைப்பாடுகளுடன் 12 கருங்கல் தூண்களுடன் வடிவமைத்த கருவறையில், கருங்கல் பீடத்திற்கு மேலே, வெள்ளியால் உருவாக்கப்பட்ட சிங்கத் தலை சிம்மாசனத்தில் மகாலக்ஷ்மி திருவருட்பாலிக்கிறாள்.

3 அடி உயரத்துக்கு செதுக்கப்பட்ட அதியற்புதமான விக்ரகத்தில் பட்டுடுத்தி, தலையில் தங்க கிரீடமும் உடல் முழுவதும் பொன்னகையலங்காரத்துடன் தரிசனம் அளிக்கும் அன்னையை காணும் பக்தர்கள் பரவசமடைகிறார்கள். ஒரு நொடிப் பொழுது அன்னையை வணங்கினாலும் மனதுக்கு கிடைக்கும் ஆத்ம திருப்தியை, அன்னையை தரிசித்து உணர்ந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஸ்ரீ மகாலக்ஷ்மியின் கருவறை அருகில் ஸ்ரீ தனவந்திரி விக்ரகம் உள்ளது. இந்த விக்ரகத்தின் உடல் முழுவது விரல்களால் அமுக்கி விட்டு பக்தர்கள் வழிபடுகிறார்கள். இப்படி வணங்குவதன் மூலம், நம்மை பிடித்த பிணிகள் விலகி, தனபாக்கியம் பெருகும் என்பது ஐதீகம்.

நாள் தோறும் காலை, மதியம், மாலை என மூன்று வேளை அன்னை அபிஷேகம் செய்து அலங்கரிக்கப்படுகிறாள். அர்ச்சனைக்காக பக்தர்கள் கொண்டு வரும் தேங்காய், மாலை ஆகியவை அன்னையின் அருட்பாதத்தில் வைத்து பூசாரிகள் கொடுக்கிறார்கள். அன்னையின் பாதம் தொட்ட தேங்காயை, வீட்டிற்கு எடுத்துச் சென்று, பூஜிக்கப்பட்ட சொம்பில் நீரிட்டு வைப்பது மராத்தியர்களின் வழக்கமாக உள்ளது. பெரும்பாலும் எல்லா கோயில்களிலும்ம் கருவறை விக்ரகம் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி இருப்பதுதான் வழக்கம். ஆனால், இத்தலத்திலோ மகாலக்ஷ்மி அன்னை மேற்கு திசையை நோக்கி நின்ற நிலையில் பக்தர்களுக்கு அருட் பாலிக்கிறாள். இதுவும் இத்தலத்தின் மகிமைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

கோயிலின் மேற்கு திசை சுவற்றில் சிறிய துவாரம் சிறப்பு வாய்ந்தது. வருடத்தின் 6 நாட்கள் இந்த துவாரத்தின் வழியாக சூரியபகவான் தன் கதிர்களின் மூலம் அன்னையை தரிசிக்க வருவதாக ஐதீகம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 21ம் தேதி முதல் மூன்று நாட்கள் இந்த சிறு துவாரத்தின் வழியாக சூரிய கதிர்கள் அன்னையின் மேல் படர்கிறது. அந்த நாட்களில் கோயிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். முழு நிலவு நாட்களில் மட்டும் அன்னை கருவறையில் இருந்து வெளியே வந்து தன்னை நாடி வரும் மக்களுக்கு தரிசனம் அளிக்கிறாள். அன்றைய தினம் வெள்ளி சப்பரத்தில் கோயில் வளாகத்தில் அன்னை வீதியுலா வருவதுண்டு. கருவறையில் அன்னையை வணங்கிய பிறகு வலது பக்கம் வந்தால், மகாசரஸ்வதி. கல்வி பயிலும் மாணவர்கள் இங்கு சிறப்பு வழிபாடு செய்கிறார்கள்.  மகாலக்ஷ்மி அன்னையின் கருவறைக்கு நேர் எதிரில் ஸ்ரீ கணேசர்.

கணேசரை வழிபட்ட பிறகு கோயிலில் இருந்து வெளியே கிழக்கு திசை வழியாக வெளியே வந்து ஒரு சுற்று சுற்றி, மீண்டும் வடக்கு திசைக்கு வந்தால் வெங்கடேச பெருமாள் சந்நதி. திருமலை கோயில் படத்துடன், பெருமாள் விக்ரகம் வீற்றிருக்கும் சந்நதியில் பிரார்த்தனை செய்த பிறகு வருவது  தத்த சந்நதி. மூன்று முகக் கடவுளான தத்தாத்ரேயர் விஷ்ணுவின் அவதாரம். மராத்தியர்களின் முதன்மையான கடவுள்களில்  தத்தரும் ஒருவர். அடுத்து ஒன்பதாவது சந்நதியாக நவகிரக சந்நதி.. இங்கு மூன்று சுற்று சுற்றி நவகிரகங்களை பக்தர்கள் வழிபடுகிறார். இது தவிர பிரதான கோயில் தவிர்த்து கோயில் வளாகம் முழுவதும் சூர்ய பகவான், சனி பகவான், ராதாகிருஷ்ணர், விட்டல் ருக்மணி(கிருஷ்ணர் ருக்மணி), கஜலக்ஷ்மி அம்மன், பார்வதியுடன்  சிவபெருமான் வீற்றிருக்கும் சந்நதி, கவுரி சங்கர் ஆலயம் என கோயிலின் நான்கு புறங்களிலும் சமீப காலங்களில் தோற்றுவிக்கப்பட்ட சிறு சிறு ஆலயங்கள் இருக்கின்றன.

முக்கியமாக கோயிலின் வடக்கு வாசல் அருகில் தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு தனி ஆலயம் இருப்பது இன்னும் சிறப்பு. இங்கும் கருங்கல்லில் தோற்றம் கொண்டு தரிசனம் அளிக்கிறார் முருகக்கடவுள். அருகிலேயே வேல் ஏந்திய முருகர் படமும் உண்டு. இது தவிர சிவ பெருமானுக்கும் தனி சந்நதி இருக்கிறது. மற்ற சந்நதிகளைக் காட்டிலும் இதற்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த சந்நதி நடுவில் உயரமாக கருங்கல் கோபுரமும், அதைச்சுற்றி 4 சிறிய கருங்கல் கோபுரமும் கொண்டதாக இருக்கிறது. 4 சிறிய கோபுரங்களின் அடிப்பாகத்தில் இருக்கும் கருங்கல் சிவலிங்கத்திற்கு பக்தர்கள் தவறாது பூஜை செய்கிறார்கள். இத்தலத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மி அன்னைக்கு தினசரி 5 கால பூஜை நடத்தப்படுகிறது. அதிகாலை 5 மணிக்கு முதல் பூஜை. தொடர்ந்து 8 மணிக்கு இரண்டாவது கால பூஜையும், பிற்பகல் மற்றும் மாலையில் மேலும் மூன்று கால பூஜைகளும் நடத்தப்படுகிறது.

வெகு தொலைவில் இருந்து இங்கு வரும் பக்தர்கள் குறைந்த பட்சம் இரண்டு நாட்களாவது தங்கியிருந்து ஒவ்வொரு சந்நதிக்கும் சென்று வழிபடுகிறார்கள். கோயிலின் கீழ்த்தளம் இன்று வரை பழமை மாறாமல் புராதன சின்னமாக பேணிக் காக்கப்படுகிறது. கீழ்த்தளத்தின் கருங்கல் சுவர் முழுவதும் பல நிலைகளில் கடவுள் சிலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டிருக்கின்றன. நூற்றாண்டுகளை கடந்து விட்டாலும் இந்த சிலைகள் இன்றளவும் பொலிவு மாறாமல் காட்சியளிப்பது சாளுக்கிய கட்டிடக்கலையின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இத்தனை சிறப்புகள் வாய்ந்த இத்தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ மகாலஷ்மி அன்னை தன்னை நாடி வரும் பக்தர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான இத்திருக் கோயிலில் உள்ள சிலை ஒருமுறை முகலாய மன்னர்களின் படையெடுப்புக்கு பயந்து ஒளித்து வைக்கப்பட்டது. பின்னர் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றி தான் இருக்குமிடத்தை கூறி 1712ம் வருடம் செப்டம்பர் திங்கள் 26ம் தேதி மீண்டும் இத்திருக்கோயிலில் குடி கொண்டாள் தேவி.

அன்னை மகாலக்ஷ்மியானவள் ஜீவன்களின் பாபமூட்டைகளைத் தன் கடைக்கண் பார்வையாலே சுட்டெரிப்பவளாகத் திகழ்கிறாள். நம்மை வருத்தும் பாபங்களும் துன்பங்களும் அன்னையைக் கண்ட கணப் பொழுதிலேயே மறைந்துவிடும். அன்னையானவள் அம்மா பவானி என்றும் அழைக்கப்படுகின்றாள். அன்னையைச் சுற்றி விஷ்ணு மந்திரம், கோகர்ணேஸ்வரர், கௌரி சங்கர், சனீஸ்வரர், முரளீதரர் , காலபைரவர், சிம்மவாஹினி, துளஜா பவானி, மஹா சரஸ்வதி, மஹா காளி, தத்தாத்ரேயர், பரதர், சத்ருக்னர், அகத்தியர், லோபா முத்திரா தேவி, ஜோதிபா, காசி விஸ்வேஸ்வரர்  பஞ்சகாப்கா தேவி, ஐந்து அம்மன் விக்கிரகங்கள், பிந்து மாதவர், தண்டபாணி, சுப்ரமண்யர் மஹா விஷ்ணுவின் தசாவதாரங்கள், ஸ்ரீராமர், லட்சுமணர், ஜானகி மற்றும் ஹனுமார் சந்நதிகள் அமைந்திருக்கின்றன. அன்னையின் வலப்பக்கத்தில் மஹா சரஸ்வதியும், இடப்பக்கத்தில் மாகாளி கோயிலும் உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் கோல்ஹாப்பூர்  மகாலக்ஷ்மி கோயிலுக்கு சென்று அன்னையை தரிசனம் செய்வதை முக்கியமான ஆன்மிக கடமையாக கருதுகின்றனர் மும்பையிலிருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தொலைவிலும் புனேயில் இருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது கோலாப்பூர். கோலாப்பூர் ரயில் நிலையத்தில் இறங்கினால் ஆட்டோவில் 5 நிமிட பயணத்தில் ஸ்ரீ மகாலக்ஷ்மி அம்மன் கோயிலை சென்றடையலாம். இந்த கரவீரத்தலத்திலே தவம் இயற்றுவபவர்களை மன்மதனின் சாகஸங்கள் எதுவும் வெற்றி காண முடியாது என்று புராணங்கள் கூறுகின்றன. இப் புனிதத் தலத்தில் உறைபவர்கள் புத்தி, முக்தி இரண்டையும் ஒருங்கே பெற்றுப் பேரின்பப் பெருவாழ்வினைப் பெறுவார்கள் என்பது திண்ணம். அன்னையின் ஈர்ப்பு சக்தியே வானவரையும், முனிவர்களையும் மண்ணின் மைந்தர்களையும் இத்திருத்தலத்தினை நோக்கி வரச் செய்தன என்பது உண்மை. பீட சக்தியைப் பணிந்து நலன் பெறுவோம்.

Related Stories: