மாந்தி, குளிகன் போன்ற சில கிரகங்களைக் குறிப்பிடுவது அவசியமா?

சிதம்பரம் கோயிலுக்குள் காலணியை எடுத்துக் கொண்டு செல்லும் வழக்கம் உள்ளதாமே, இதன் ஐதீகம் என்ன? - அயன்புரம் த.சத்தியநாராயணன்.

 
Advertising
Advertising

‘சிவ சிவா..’ இதனை ஐதீகம் என்றே கருதத் தொடங்கிவிட்டீர்களா? சிதம்பரம் நடராஜர் ஆலயம் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்திருக்கிறது. பரப்பில் மிகப்  பெரிய வெளிச்சுற்று பிராகாரத்தினைக் கொண்டது இந்த ஆலயம். ஆலயத்தின் நான்கு திசைகளின் எல்லையிலும் பிரதான கோபுரங்கள் அமைந்திருக்கும். கிழக்கு,  தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு திசைகளிலும் பிரதானமான ராஜ கோபுரங்கள் அமைந்திருக்கும். ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு ரதவீதிகளும் உண்டு.  சிதம்பரம் நகரத்தினுடைய தெருக்கள் ஆலயத்தை மையப்படுத்தி அதனைச் சுற்றிச்சுற்றி அமைந்திருக்கும்.

மேற்குரத வீதியில் வசிக்கும் ஒருவர் கிழக்குரத வீதிக்குச் செல்ல நினைத்தால் வீதி வழியே செல்லும்போது மேற்கு வீதி, வடக்கு வீதி, கிழக்கு வீதி என்று  சுற்றிக்கொண்டு செல்ல வேண்டியிருக்கும். அதையே ஆலயத்தின் மேற்குக் கோபுர வாயிலின் வழியாக உள்நுழைந்து, கிழக்கு கோபுர வாயிலின் வழியாக  வெளியேறி கிழக்கு வீதியை எளிதாகச் சென்றடைந்துவிட இயலும். ஏதேனும் ஒரு வாகனத்தின் துணைகொண்டு கடக்க வேண்டிய தூரத்தை நடந்தே சென்றுவிட  இயலும். காலமும், நேரமும், காசும் மிச்சமாகும். இவ்வாறு ஆலயத்தின் வழியாக தங்கள் பாதையை அமைத்துக் கொள்பவர்கள் ஒரு கோபுரத்தின் வழியாக  உள்நுழைந்தவுடன் தாங்கள் அணிந்திருக்கும் காலணியை கையில் எடுத்துக் கொண்டு நடந்து செல்வர்.

அடுத்த கோபுரத்தின் வழியாக வெளியேறியவுடன் கையில் இருக்கும் காலணியை காலில் மாட்டிக் கொள்வார்கள். ஆலய வளாகத்திற்குள் காலணி அணியக்  கூடாது என்பதால் அதனை கையில் எடுத்துக் கொள்கிறார்கள். ஆலயத்தின் வெளிச்சுற்றுப் பிராகாரத்தில் கையில் காலணியை எடுத்துக் கொண்டு நடந்து  செல்வதால் இறை சாந்நித்தியத்திற்கு எந்த விதமான பங்கமும் உண்டாவதில்லை. அதேநேரத்தில் அன்றாட பணிகளுக்குச் செல்வோரும், இப்புறத்திலிருந்து  அப்புறத்திற்கு கடந்து செல்வோரும் ஆலய வளாகத்திற்குள் நடந்து செல்லும் போது புத்துணர்வு பெறுகிறார்கள்.

தங்கள் பணியும் வெற்றி பெற்றுவிடும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறார்கள். இவர்கள் யாரும் கையில் காலணியை எடுத்துக் கொண்டு ஆலயத்தின் இரண்டாம்  சுற்று பிராகாரத்திற்குள் நுழைய மாட்டார்கள். 90களின் இறுதி வரை இவ்வாறு கையில் காலணியுடன் ந(க)டந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.  தற்போது வாகனப் பெருக்கத்தினாலும், நடக்க வேண்டுமே என்ற சோம்பல் தன்மையினாலும் இவ்வாறு செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.  வாகனத்தை விடுத்து நடந்து செல்வோரை ‘நடராஜா சர்வீஸ்’ என்று நகைச்சுவையாகக் குறிப்பிடுவதும் இங்கிருந்து வந்ததே ஆகும்.

என்பதை நட-ராஜா என்று இவர்கள் மொழி பெயர்த்தாலும் நகரத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியை எளிதாகச் சென்றடைய சிதம்பரம் நடராஜர்  ஆலயத்திற்குள் குறுக்கே நடந்து செல்வது வழக்கத்தில் வந்ததில் இருந்துதான் இந்த நடராஜா சர்வீஸ் என்ற பெயர் வந்தது என்பது சிதம்பரம் நகரவாசிகளுக்கு  நன்றாகத் தெரியும். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் காலணியை கையில் எடுத்துச் செல்வது என்பது அந்த நகரத்தில் வசிப்பவர்கள் ஒரு வீதியிலிருந்து  மற்றொரு வீதிக்கு எளிதாக கடந்துச் செல்வதற்கான பாதையே அன்றி இதில் ஐதீகம் என்று எதுவும் இல்லை.

திருநங்கைகளிடம் ஆசி பெறுவது, அவர்கள் கையால் நம் தலையைத் தொட்டு ஆசிர்வதிப்பது, ஒரு ரூபாய் அதிர்ஷ்டக் காசாகப் பெறுவது என்பதெல்லாம்  சரியானவைதானா? - தளவாய் நாராயணசாமி, பெங்களூரு.

 

இல்லை. இது முற்றிலும் மூடநம்பிக்கையே. ஆண்பால், பெண்பால் என்பது போல் திருநங்கை என்பது மூன்றாம் பாலினம்.அவ்வளவுதான். இவர்கள்  அர்த்தநாரீஸ்வர் ஸ்வரூபம் என்று கருதி அவர்களிடம் ஆசி பெறுவது, அவர்கள் கையால் ஆசிர்வாதம் வாங்குவது, அவர்களுக்கு பணம் கொடுத்து, அவர்களிடம்  இருந்து ஒற்றை ரூபாயை பிரசாதமாக திரும்பப் பெறுவது என்பதெல்லாம் முற்றிலும் அறிவீனமே ஆகும்.

அவர்களும் நம்மைப்போல் மனிதர்களே. ஹார்மோன்களின் குறைபாட்டினால் இவ்வாறு மாறிவிடுகிறார்களே தவிர, அவர்களுக்கு என்று தனியாக எந்தவிதமான  சிறப்பு சக்தியும் கிடையாது. ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’ என்ற ஆதிசங்கரரின் கூற்றின்படி நம் எல்லோருக்குள்ளும் இறைவன் இருக்கிறான். உன்னுள்ளும்  இருக்கிறான், என்னுள்ளும் இருக்கிறான் என்பதுபோல் அவர்களுக்குள்ளும் இருக்கிறான்.

அவர்களை தெய்வீகமானவர்கள் என்றோ, குறைபாடு உடையவர்கள் என்றோ பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக எல்லோருக்கும்  கொடுக்கின்ற மரியாதையை அவர்களுக்கும் கொடுத்து சமுதாயத்தில் அவர்களையும் சாதாரண மனிதர்களாக அங்கீகரித்தாலே போதுமானது. கல்வி,  வேலை வாய்ப்பு, அரசியல் என எல்லாவற்றிலும் அவர்களுக்கும் சமமான அளவில் உரிமைகள் தரப்பட வேண்டும். திருநங்கைகளிடம் ஆசிர்வாதம் பெறுவது  என்பது முற்றிலும் மூடநம்பிக்கையே. இதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

மூதாதையர்களின் நினைவு நாளில் அவர்களை கும்பிட்ட பிறகு அதே நாளில் கோயிலுக்குச் செல்லலாமா? - பொன்.மாயாண்டி, ராயபுரம்.

தாராளமாகச் செல்லலாம். பிரதி வருடந்தோறும் செய்கின்ற சிராத்தத்திற்கு உரிய நாளிலும், அமாவாசை முதலான முன்னோர்களின் வழிபாட்டிற்குரிய  நாட்களிலும் முதலில் முன்னோர்களுக்கான வழிபாட்டினை நல்லபடியாக செய்து முடித்த பிறகு அருகிலுள்ள ஆலயத்திற்குச் செல்லலாம். அதில் எந்தவிதமான  தவறும் இல்லை.

எங்கள் ஊரிலுள்ள பெருமாள் கோயிலில், சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் பொருட்களை விறகு மூட்டி சமைக்கிறார்கள். கேஸ் அடுப்பில் சமைக்கக் கூடாதாம்.  தயவுசெய்து விளக்க வேண்டும்.- கே.ஆர்.எஸ்.சம்பத், திருச்சி.

   

சமையல் எரிவாயு அடுப்பினில் சமைப்பது ஆசாரத்திற்கு எதிரானது என்பதும், அந்த சமையல் மடியானது (புனிதமானது) இல்லை என்பதும் அவர்களின் கருத்து.  விறகு மூட்டி சமைப்பது மட்டுமே புனிதமான சமையல் என்று வாதிடுவது கொஞ்சம், கொஞ்சமாக பழமைவாதமாக மாறிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது  நாட்களில் நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது, கிராமப்புறத்திலும் விறகு என்பதே கிடைக்காமல் போகலாம். மரங்களை வெட்டுவதற்கும், விறகு அடுப்பினை  உபயோகப்படுத்துவதற்கும் அரசாங்கம் தடை விதிக்கக் கூடும். விறகு கிடைக்காத மாநகரப் பகுதிகளில் மடி, ஆசாரம் என்ற பெயரில் இறைவனுக்கு நைவேத்யம்  செய்யாமல் இருக்க முடியுமா?

சமையல் எரிவாயு (கேஸ்) அடுப்பிலாவது நெருப்பு அதாவது அக்னி என்பது இருக்கிறது. தற்காலத்தில் இன்டக்ஷன் ஸ்டவ், எலக்ட்ரிக் குக்கர் போன்றவற்றை  பயன்படுத்தி சமைக்கிறார்கள். இதுபோன்ற சாதனங்களில் அக்னிக்கு இடமில்லை. அதற்காக அவ்வாறு சமைப்பது ஆசாரத்திற்கு எதிரானது என்று வாதிட  முடியாது. உணவு என்பதுதான் முக்கியமானது. ஒவ்வொரு வேளை உணவும் இறைவன் நமக்கு அருளும் கொடை. அதனால் ஒவ்வொரு வேளையும்  சாப்பிடுவதற்கு முன்பாக இந்த நேரத்தில் எனக்கு உணவளித்த இறைவனுக்கு நன்றி என்று ஒரு நொடி தியானம் செய்து சாப்பிடுகிறோம்.

காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்றார்போல் மாற்றிக் கொள்வதில் தவறில்லை என்பதும், இந்த உலகில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதும் அடியேனின்  தாழ்மையான கருத்து. விறகு அடுப்பில் சமைப்பது மட்டுமே புனிதமானது, ஆசாரமானது என்று வாதிடுவதை விட, கிடைப்பதைக் கொண்டு நம்மால் இயன்ற  அளவிற்கு மடியுடனும், ஆசாரத்துடனும் உணவு சமைத்து இறைவனுக்கு நைவேத்யம் செய்வதே உத்தமம். கால மாற்றத்தினால் நமக்குக் கிடைக்கும்  கண்டுபிடிப்புகள் அனைத்தும் இறைவனின் கட்டுப்பாட்டிற்குள்தான் நிகழ்கின்றன. நம்மை இயக்குபவன் இறைவனே,

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான், நமது ஒவ்வொரு செயலிலும் இறைவன் இருக்கிறான் என்று முழுமையாக இறைவனை நம்புபவர்கள் இதுபோன்று  வாதிடமாட்டார்கள். கணபதி ஹோமம் செய்த பிறகு ஹோமத்திற்கு பயன்படுத்திய கற்களை எத்தனை நாட்களுக்குப் பிறகு அப்புறப்படுத்த வேண்டும்? - கிருபானந்தன், பாண்டிச்சேரி.

ஹோமத்தில் இருக்கும் வெப்பம் முழுமையாக தணிந்தவுடன் எடுத்து விடலாம். ஹோமத்தின்போது அளிக்கப்படும் ஆஹூதிகள் முழுமையாக பஸ்மம்  ஆகவேண்டும். அனல் முற்றிலுமாக அணைந்திருக்க வேண்டும். குறைவான ஆஹூதிகள் கொண்ட சிறிய அளவிலான ஹோமம் எனும்போது அன்றைய தினமே  சூரிய அஸ்தமனத்திற்கு முன்னதாக ஹோம குண்டத்தை அப்புறப்படுத்திவிடலாம்.

அனல் இன்னமும் தணியவில்லை எனும்போது மறுநாள் காலையில் எடுக்கலாம். இதில் மூன்றாவது நாள், ஐந்தாவது நாள் என்ற கணக்கு எதுவும் கிடையாது.  அதில் உள்ள பஸ்மத்தை எடுக்கும் வரை ஹோம குண்டத்தின் புனிதத்தன்மை காக்கப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். அதனருகில் அமர்ந்து  சாப்பிடுவது, அதனருகே அவ்வப்போது குறுக்கும் நெடுக்கிலும் நடப்பது போன்றவை கூடாது.

அதாவது அறியாமல்கூட அதன்மீது எச்சிலோ, இதர உணவுப் பண்டங்களோ, நமது பாதமோ பட்டுவிடக் கூடாது. கணபதி ஹோமம் மட்டுமல்ல, எந்த ஹோமம்  செய்தாலும் அதிலுள்ள அனல் முழுவதும் அடங்கி நன்றாக குளிர்ந்த பிறகு எப்பொழுது வேண்டுமானாலும் ஹோமத்திற்கு பயன்படுத்திய செங்கற்களை  அப்புறப்படுத்தி விடலாம். இதில் நாள் கணக்கு எதுவும் கிடையாது.

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா

Related Stories: