சோழர் கலை வளர்த்த போசள மன்னர்கள்!

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் : கண்ணனூர் போசலீச்சரம்

Advertising
Advertising

சமயபுரம் மாரியம்மன் கோயில் என்பது தமிழ்நாட்டு சக்தித் தலங்கள் வரிசையில் தலையாய இடம் பெற்றுத் திகழ்வதாகும். மகத்துவம் பெற்ற இவ்வாலயத்தின் பெருமைகளை அறியாதவர் இருக்க வாய்ப்பில்லை. திருச்சிராப்பள்ளியிலிருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடப் பேராற்றின் வடபால் பளூரை அடுத்து சமயபுரம் உள்ளது. இவ்வூரின் பழம்பெயர் கண்ணனூர் என்பதாகும். பதிமூன்றாம் நூற்றாண்டில் சோழநாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்த போசள (ஹோய்சாளர்) மன்னர்களின் தலைநகரமாக கண்ணனூர் விளங்கியது என்பது பலரும் அறிந்திராத செய்தியாகும்.

போசள வேந்தர்களின் அரண்மனை அவர்கள் எடுப்பித்த போசலீஸ்வரம் எனும் பேரழகு வாய்ந்த சிவாலயம் ஆகியவைதாம் அவ்வூரின் பழமையான வரலாற்றுச் சின்னங்களாக விளங்கியவையாகும். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே அங்கு மாரியம்மன் கோயில் கட்டப்பெற்றது. போசளர் ஆட்சி வீழ்ந்த பிறகு கண்ணனூர் என்ற அவ்வூரின் பழம்பெயரும் மெல்லமெல்ல மறையலாயிற்று. கல்வெட்டுக்கள் மற்றும் ‘கத்திய கர்ணாமிர்தம்’ எனும் நூல் ஆகியவற்றின் துணையோடு நோக்குவோமாயின், சோழப் பேரரசின் இறுதிகாலத்தில் திகழ்ந்த மூன்றாம் ராஜராஜ சோழன்,

அவன் மைந்தன் மூன்றாம் ராஜேந்திர சோழன் ஆகியோர் காலத்தில் கண்ணனூர் எவ்வாறு ஒரு தலைநகரம் என்ற நிலையை அடைந்தது என்பது பற்றியும், அங்குள்ள போசலீச்சரம் என்ற ஆலயத்தின் வரலாற்றையும் நாம் அறிந்துகொள்ள இயலும். கி.பி. 846ல் தோற்றம் பெற்ற பிற்காலச் சோழர் பேரரசு, கி.பி. 1218 வரை (மூன்றாம் குலோத்துங்க சோழனின் இறுதிக்காலம் வரை) மிக உன்னத நிலையை அடைந்து திகழ்ந்தது. பின்னர் குலோத்துங்கனின் மைந்தன் மூன்றாம் ராஜேந்திரனின் இறுதியாண்டான கி.பி. 1279உடன் நிலையாக முற்றுப் பெற்றது.

சோழர்களுக்கு பாண்டியர்களாலும், கோப்பெருஞ்சிங்கன் என்ற காடவகுல அரசனாலும், சம்புவரையர்களாலும் இன்னல்கள் ஏற்பட்டபோது தோள்கொடுத்து உதவியவர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து இங்கு வந்த போசள மன்னர்களேயாவர். கன்னட நூலான கத்தியகர்ணாமிர்தம் என்ற நூலில் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் தோல்வியுற்று நாடிழந்த இரண்டாம் ராஜராஜ சோழன் தன் நண்பனான குந்தள நாட்டு அரசனிடம் உதவிபெறும் பொருட்டு வடதிசை நோக்கிச் சென்றான் என்றும், அப்போது காடவர் குல மன்னன் ஒருவன் இவனை இடையில் போரில் வென்று பரிவாரத்துடன் சிறைபிடித்துத் தன் தலைநகரமாகிய சேந்தமங்கலத்தில் சிறையிட்டனன் என்றும்,

அத்துயர நிகழ்ச்சிகளைக் கேள்வியுற்ற போசள மன்னன் வீரநரசிம்மன் என்பான் பெரும் படையுடன் புறப்பட்டு வந்து காவிரியாற்றின் வடகரையில் திருவரங்கத்திற்கு அண்மையில் தங்கித் தன் தண்டநாயகனைக் கொண்டு பகைவரை வென்று ராஜராஜ சோழனை சிறை மீட்பித்தான் என்றும் கூறுகின்றது. அந்நூலில் சொல்லப்பெற்றுள்ள காடவர் குல மன்னன் கோப்பெருஞ்சிங்கன் என்பதை திருவயிந்திரபுர கல்வெட்டால் உறுதி செய்ய இயலுகின்றது. அவன் ராஜராஜ சோழனை வென்ற இடம் வந்தவாசிக்கு அருகில் உள்ள தௌ்ளாறு என்பதை வயலூர் கோயில் கல்வெட்டு உறுதி செய்கின்றது.

சோழன் சிறைபட்டு மீண்ட இடம் விழுப்புரம் அருகிலுள்ள சேந்தமங்கலமாகும். சோழமன்னன் சிறைபட்டான் என்பதைக் கேட்டவுடன் போசள மன்னன் வீரநரசிம்மன் “சோழமண்டல பிரதிஷ்டாசரியன்” என்னும் சிறப்புப் பெயரை நிலைநிறுத்தாமல் எக்காளம் ஊதுவதில்லை என்று சபதம் செய்த பிறகே கர்நாடக மாநிலம் துவார சமுத்திரத்திலிருந்து பெரும்படையுடன் புறப்பட்டு சோழனை சிறை மீட்டதோடு சோழ அரசு எந்தவித இடர்பாடும் இல்லாமல் நிலைபெறச் செய்தான் என்பதை வரலாற்று ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது.

போசள வீரநரசிம்மன் வந்திராவிடில் சோழ அரசு அழிந்திருக்கும். அத்தகு புகழ்மிகு வீரநரசிம்மனின் புதல்வியை மூன்றாம் ராஜராஜ சோழனின் மைந்தன் மூன்றாம் ராஜேந்திர சோழன் மணந்துகொண்டதால் வீரநரசிம்மனைத் தன் மாமன் என்று கல்வெட்டுகளில் கூறியுள்ளான். அதனால் போசள அரசன் வீரநரசிம்மனின் படைத்தலைவர்கள் தலைமையில் காஞ்சியிலும், திருவரங்கம் அருகிலும் நிலைப்படைகள் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. போசள மன்னன் வீரநரசிம்மனுக்குப் பிறகு பட்டமேற்ற வீரசோமேஸ்வரன் சோழ நாட்டில் திருவரங்கத்திற்கு அருகிலுள்ள கண்ணனூரில் ஒரு கோட்டையைக் கட்டித் தன் தலைநகராகக் கொண்டு சோழநாட்டின் ஒரு பகுதியை ஆட்சிபுரியத் தொடங்கினான்.

அவனுக்குப் பிறகு வீரராமனாதன் என்ற போசள அரசன் அதே கண்ணனூரில் தங்கி சோழநாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்யத் தொடங்கினான். இவ்விரு அரசர்கள் காலத்தில்தான் கண்ணனூரில் (சமயபுரத்தில்) போசலீச்சரம் எனும் சிவாலயம் எடுக்கப்பெற்றது. போசளர் கலைவண்ணமும் சோழர் கலைவண்ணமும் இணைந்த ஒரு கலைப்பாணியில் இக்கோயிலை அவர்கள் எடுத்ததோடு திருவரங்கம் கோயிலில் குழலூதும் கண்ணன் கோயில், திருவானைக்கா கோயில் திருப்பணி எனப் பல பணிகள் புரிந்து சைவமும் வைணவமும் தழைக்க அருந்தொண்டாற்றினர். சோழ மண்டலத்தில் எண்ணற்ற கோயில்கள் போசள மன்னர்களால் புத்துயிர் பெற்றன.

தற்காலத்திய சமயபுரத்தில் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டியே போசலீச்சரம் என்னும் இச்சிவாலயம் உள்ளது. இவ்வாலயத்தினை அறநிலையத்துறையும், ஊர்மக்களும் “அருள்மிகு ஆனந்தவள்ளி உடனுறை போஜீஸ்வரர் கோயில்” என்றே குறிப்பிடுகின்றனர். தகவல் பலகையும் அவ்வாறே உள்ளது. கோபுர வாயிலில் காணப்பெறும் போசள மன்னர்களின் கல்வெட்டுகளில் “கண்ணனூர் போசலீச்சரம்” என்றே குறிக்கப்பெற்றுள்ளன. திருவாயில் கடந்து உள்ளே நுழையும்போது பலிபீடம், இடப மண்டபம் முதலில் திகழ, கிழக்கு நோக்கிய பெருங்கோயிலின் முகமண்டபம் தென்புறமும், வடபுறமும் பக்கவாட்டு களிற்றுப் படிகளோடு கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றது.

மூலவராகிய போஜீஸ்வரர் சிவலிங்கம் திகழும் கருவறை மேல் மூன்று தளங்களுடன் மிக உயரமான விமானம் அமைந்துள்ளது. அத்துடன் இணைந்து அர்த்த மண்டபம், மகாமண்டபம் ஆகியவை கம்பீரமான கட்டுமானத்துடன் காட்சி நல்குகின்றன. உபபீடம், அதிஷ்டானம் ஆகியவை உயர்ந்து காணப்பெறுவதால் ஒரு மாடக் கோயிலின் தோற்றப் பொலிவினை இங்கும் நாம் காணலாம். அர்த்த மண்டபத்து தேவகோஷ்டத்தில் கணபதியும், கருவறை தென்புறக் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தியான ஆலமர்ச்செல்வரின் கற்சிற்பமும் பேரழகோடு காணப்பெறுகின்றன.

மேற்கு திசை தேவகோஷ்டத்தில் அண்ணாமலையார் எனப்பெறும் லிங்கோத்பவரின் திருமேனி இடம்பெற்றுள்ளது. அழல் வடிவான நெடுந்தூணின் நடுவே உள்ள குடைவுப் பகுதியில் மான், மழுவை ஏந்தியவராக நான்கு திருக்கரங்களுடன் சிவபெருமான் காணப்பெறுகின்றார். கீழே பன்றி உருகொண்ட மாலவன் நிலத்தை அகழ்ந்து செல்கிறார். மேலே அன்னவடிவில் பிரம்மன் பறந்து செல்கிறார். போசளர் கைவண்ணத்தின் அற்புத வெளிப்பாடாக இத்திருமேனி அமைந்துள்ளது.

வடபுற தேவகோஷ்டத்தில் பிரம்மனும், அர்த்த மண்டப கோஷ்டத்தில் துர்க்கையின் திருமேனியும் இடம்பெற்றுள்ளன. தெற்கு நோக்கியவாறு ஆனந்தவல்லி அம்பிகையின் ஆலயம் அமைந்துள்ளது. சிவாலயத்திற்குரிய மற்ற பரிவாரங்களின் சிற்றாலயங்கள் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. முகமண்டபத்துக் களிற்றுப் படியின் இருமருங்கும் யானைமீது இருவீரர்கள் அமர்ந்து செலுத்த, அந்த யானை வீரன் ஒருவனை தன் துதிக்கையால் தூக்கியவாறு செல்கின்றது. சோழர் கலையின் நுட்பத்திறனை இங்கு போசளர் கலையில் நம்மால் காண இயலுகின்றது.

கோபுர வாயில்களிலும், மூலவர் திருக்கோயில் அதிஷ்டானத்திலும் போசள மன்னர்களான வீரசோமேஸ்வரன், வீர ராமநாதன் ஆகியோர் பொறித்த சிலா சாசனங்கள் உள்ளன. கண்ணனூர் போசலீச்சரத்துக்கு அளிக்கப்பெற்ற நிவந்தங்கள் பற்றி இவை குறிப்பிடுகின்றன. கோபுர வாயிலின் வலப்புறம் உள்ள ஒரு கல்வெட்டில் இவ்வாலயம் தவிர சோழநாட்டில் உள்ள பல ஆலயங்களுக்கு போசளர் அளித்த அருங்கொடைகள் பற்றி குறிக்கப்பெற்றுள்ளன. அவ்வாலயங்கள் அமைந்துள்ள ஊர்கள் பற்றிய ஒரு நீண்ட பட்டியல் காணப்பெறுவது இக்கல்வெட்டு சாசனத்தின் சிறப்பு அம்சமாகும்.

சமயபுரம் மாரியம்மன் ஆலயத்துக் கட்டுப்பாட்டின்கீழ் இவ்வாலயம் அமைந்துள்ளதால் மிக நேர்த்தியாகத் திருப்பணி செய்து கோயிலைப் புதுப்பித்துள்ளார்கள். மாரியம்மன் கோயிலுக்குச் செல்வோர் பலருக்கு இப்படி ஒரு அற்புத ஆலயம் அவ்வூரில் இருப்பது தெரியாமல் போவதால் இங்கு சேவார்த்திகளின் கூட்டம்  பெரும்பாலும் இருப்பதில்லை. திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பயணம் செல்வோர், சாலை ஓரமே திகழும் இவ்வாலயத்திற்கு ஒருமுறையேனும் சென்று பாருங்கள். நிச்சயம் அற்புதத்தைக் கண்ட ஆனந்தம் கிட்டும்.

முதுமுனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

Related Stories: