இஸ்லாமியப் பேச்சு என்பது...

இஸ்லாமிய உரையாடல் அல்லது இஸ்லாமியப் பேச்சு என்பது என்ன என்பதற்கு பேரறிஞர் யூசுபுல் கர்ளாவி அவர்கள் ஓர் அருமையான விளக்கம் அளித்துள்ளார்.

“சிலர் நினைப்பது போல் ஆன்மிகத்தோடும் மறைவானவையோடும் தொடர்புடைய பேச்சுகள் மட்டும்தான் இஸ்லாம்; ஏனைய துறைகள், விவகாரங்கள் பற்றிய பேச்சுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பே இல்லை என்பது சுத்த அறியாமையாகும்.  இஸ்லாத்தின் அழகை எடுத்துக் காட்ட இவர்களால் முடியவே முடியாது. “மனிதனைப் பற்றிப் பேசும்போது அவனுடைய சிந்தனை, அறிவு, ஆன்மா, உடல் என்பவற்றில் ஒன்றைப் புறக்கணித்து ஒன்றை உயர்த்திப் பேசுவது இஸ்லாமியப் பேச்சு அல்ல. “குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது ஆண்களை மறந்துவிட்டுப் பெண்களின் ஒழுக்கம், கற்பு போன்ற வற்றை மட்டும் பேசுவது இஸ்லாமியப் பேச்சு அல்ல.
Advertising
Advertising

“சமூகத்தைப் பற்றிப் பேசும்போது தலைமைத்துவம், கட்டுப்பாடு, கட்டமைப்பு, அன்பு, சகோதரத்துவம், நல்ல பண்புகள், வியாபாரம், திருமணம், குடும்ப வாழ்க்கை, அரசியல் போன்றவற்றில் சிலவற்றை நல்லடக்கம் செய்து விட்டு சிலவற்றை மட்டுமே  தொடர்ந்து உயிர்ப்பிப்பது இஸ்லாமியப் பேச்சு அல்ல.“ஒரு பேச்சில் ஆன்மிகம், மற்றொரு பேச்சில் சட்டம், மற்றொன்றில் தத்துவம், இன்னொன்றில் அழைப்பியல் எனப் பேசுபொருட்கள் ஒன்றுக்கொன்று வேறுபடலாம். அவ்வாறு வேறுபடும்போது ஒரு துறையை உயர்த்தி மற்றொரு துறையைத் தாழ்த்தும் வகையில் பேசுவது இஸ்லாமிய மொழியல்ல.“இஸ்லாமிய உள்ளடக்கங்களில் ஒன்றை அடியோடு புறக்கணித்துவிட்டு, இன்னொன்றை வானளாவ தூக்கி வைத்துப் பேசுவது இஸ்லாமியப் பேச்சு மொழிக்குரிய சிறப்பம்சமல்ல.

“முஸ்லிம்களுக்குச் சொல்லப்பட வேண்டியவை  சிலபோது முஸ்லிமல்லாதவர்களுக்குப் பொருத்தமற்றவையாக இருக்கலாம். ஒரு ஞானியிடம் எடுத்துரைக்கப்படும் விஷயம் ஒரு பாவியின் முன்னால் பேசுவதற்குப் பொருத்த மற்றதாக இருக்கலாம். முஸ்லிம் பெரும்பான்மைச் சமூகத்தில் சொல்லப்படும் ஒரு விஷயம் முஸ்லிம் சிறுபான்மையாக இருக்கும் ஒரு சூழலுக்குப் பொருத்தமற்றதாக இருக்கலாம். பணக்காரர்களுக்குச் சொல்ல வேண்டியதை ஏழைகளுக்கு எடுத்துரைப்பதால் நன்மைகள் விளையாது. போர்ச் சூழலில் பேச வேண்டியதை அமைதி நிலவும் சூழலில் பேச வேண்டியதில்லை. பூகோளக் கிராமம் ஆகிவிட்ட யுகத்தில் பழங்கதைகளைப் பேசுவது அறிவுடைமையே அல்ல.”இந்தக் குறிப்புகளைக் கவனத்தில் கொண்டு நாம் பேசினால் நம்முடைய மார்க்கப் பேச்சு பயனுள்ளதாக அமையும்.

இந்த வார சிந்தனை

“என் இறைவனே, எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக.” (குர்ஆன் 20:114)

சிராஜுல்ஹஸன்

Related Stories: