×

உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள்!

‘‘நாட்டை ஆளும் மன்னன் ஒரு ஜோதிடப் பைத்தியம். நாட்டிற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்றாலும் ஜோதிடர்களுடன் ஆலோசனை நடத்துவான். அதன்பிறகு தளபதிகளைக் கூப்பிட்டுப் பேசுவான். மன்னர் இப்படிப்பட்டவர் என்பதைப் புரிந்து கொண்ட ஜோதிடர்கள் அனைவரும் மன்னனைத் தேடி வந்து ஏதாவது சொல்லிவிட்டுப் பொருள் பெற்றுச் செல்வது வழக்கமாயிற்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் ஒரு ஜோதிடர் வந்து, மன்னா! இரண்டு அண்டங்காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் அதிர்ஷ்டம் என்றார். அவ்வளவுதான்! உடனே அமைச்சரைக் கூப்பிட்டான் மன்னன்; அமைச்சரே! எங்காவது இரண்டு அண்டங் காக்கைகள் ஒன்றாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் உடனே ஓடிவந்து என்னிடம் சொல்ல வேண்டும்; இனி அதுதான் உங்கள் வேலை என்றார்  அமைச்சர். அப்படியே ஆகட்டும் மன்னா!

அமைச்சர் அண்டங் காக்கைகளைத் தேட ஆரம்பித்தார். மறுநாளே அந்தக் காட்சி கிடைத்தது. அரண்மனையின் தோட்டத்தில் ஒரு மரக்கிளையில் இரண்டு அண்டங்காக்கைகள் ஜோடியாகக் கொஞ்சிக் கொண்டிருந்தன. இதனைக்கண்ட அமைச்சர் ஒரே ஓட்டமாக உள்ளே ஓடி, மன்னா! சீக்கிரம் வாருங்கள், நீங்கள் விரும்பிய அதிர்ஷ்ட தேவதைகள் அங்கே காட்சி அளிக்கின்றன என்றதும், மன்னர் விரைந்து வந்து பார்த்தார். ஆனால், அதற்குள் இரண்டில் ஒரு காகம் பறந்துசென்று விட்டது. ஒன்று மட்டும் தனியே இருந்ததைப் பார்த்த மன்னருக்கு வந்தது கடும் கோபம்! அமைச்சரே! நீங்கள் இருகாகங்களைப் பார்த்துவிட்டு எனக்கு மட்டும் ஒரு காகத்தைக் காட்டுகிறீர்கள். இதற்கான தண்டனை உமக்கு பத்து கசையடிகள்! அடிவாங்கிய அமைச்சர் சிரித்தார்.

எதற்காக சிரிக்கிறீர்கள்? இரண்டு அண்டங்காக்கைகளைப் பார்த்த அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு வந்தது மன்னா! பக்தியானது பாதை மாறிப் போகிறபோது, பகுத்தறிவு அதைப் பார்த்து சிரிப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. ‘‘சிரிப்பே உனது பிரார்த்தனையாக இருக்கட்டும்! மகிழ்ச்சியே உனது ஒரே காணிக்கையாக இருக்கட்டும்! வாழ்வை நேசிக்கத் தொடங்கு! தவற விடாதே? மென்மேலும் மகிழ்ச்சியடையும்போது இறைவன் உன்னிடம் மென்மேலும் வருவதைக் கண்டுபிடிப்பாய்! பகுத்தறிவின் வெளிச்சம் பரவுகிறபோது பக்தியின் பாதை இன்னும் தெளிவாகும்.‘‘வீண் வார்த்தைகளால் உங்களை யாரும் ஏமாற்ற விடாதீர்கள். ஏனெனில், மேற்கூறிய செயல்களால்தான் கீழ்ப்படியாத மக்கள் மீது கடவுளின் சினம் வருகிறது.

எனவே, அவர்களோடு நீங்கள் எதிலும் பங்கு கொள்ள வேண்டாம். ஒரு காலத்தில் இருளாய் இருந்தீர்கள். இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே, ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும், நீதியையும், உண்மையையும் விளைவிக்கிறது. ஆண்டவருக்கு உகந்தது எது என்பதை ஆராய்ந்து பாருங்கள்; பயனற்ற இருளின் செயல்களைச் செய்கிறவர்களோடு உங்களுக்கு உறவு வேண்டாம். அவை குற்றமென எடுத்துக் காட்டுங்கள். அவர்கள் மறைவில் செய்பவற்றைச் சொல்லக்கூட வெட்கமாக இருக்கிறது. அவர்கள் செய்வதை எல்லாம் குற்றமென ஒளியானது எடுத்துக்காட்டும்போது அவற்றின் உண்மை நிலை வெளியாகிறது.’’  (எபேசியர் 5:613)

‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Tags :
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!