×

திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடி தேரோட்டம்

புதுக்கோட்டை: திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயிலில் ஆடிபெருந்திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை திருக்கோகர்ணம்  பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஷ்வரர் கோயில் புகழ்பெற்ற கோயிலாக திகழ்கிறது.புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட தொண்டைமான் மன்னர்களின் குலதெய்வமாகவும் இக்கோயில் இருந்து வந்துள்ளது. மேலும் தேவலோகத்தில் தேவேந்திரனுடைய திருச்சபை கூடிய போது தாமதமாக வந்த காமதேனுவை பூலோகத்தில் காட்டு பசுவாக பிறக்கும்படி தேவேந்திரன் சாபமிட்டதாகவும் காமதேனு பூலோகத்தில் திருக்கோகர்ணத்தில் பசுவாக பிறந்து தன் காதுகளில் அன்றாடம் கங்கை நீரை கொண்டு வந்து அன்றாடம் பிரகதாம்பாள் உடனுறை திருக்கோகர்ணேஷ்வராக அருள்பாலித்த சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வந்து சாபவிமோசனம் பெற்றதாக  வரலாறு.

இத்தகைய  சிறப்பு மிக்க இக்கோயிலின் ஆடி பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்தாண்டும் ஆடி பெருந்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து, பிரகதாம்பாள் மற்றும் திருக்கோகர்னேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த்திருவிழா நேற்று நடந்தது. பிரகதாம்பாள் மற்றும் கோகர்ணேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். கலெக்டர் கணேஷ் தேரோட்டத்தை வடம் பிடித்து துவக்கிவைத்தார். தேர் 4 வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலைக்கு வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.

Tags :
× RELATED சுந்தர வேடம்