பெண்களின் இயற்கை

நபித்தோழர் அனஸ் அவர்கள் கூறுகிறார்கள். “யூதப் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் யூதர்கள் அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார்கள். சாப்பிடும்போதும் குடிக்கும்போதும் உடன் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். வீட்டினுள்ளும் அவளை இணைத்துக் கொள்ள மாட்டார்கள். இறைவனின் தூதரிடம் இது குறித்துக் கேட்கப்பட்டது. அப்போதுதான் பின்வரும் குர்ஆன் வசனத்தை இறைவன் அருளினான்.‘மாதவிடாய் (குறித்த சட்டம்) பற்றியும் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அது ஒரு தூய்மையற்ற நிலை. ஆகவே மாதவிடாய்க் காலத்தில்( இல்லற உறவு கொள்ளாமல்) பெண்களைவிட்டு விலகியிருங்கள்’ (2:222)  என்று அந்த வசனம் கூறியது.இறைத்தூதர் அவர்கள், “மாதவிடாய்ப் பெண்களுடன் உடலுறவு நீங்கலாக மற்றவையெல்லாம் செய்துகொள்ளுங்கள் (அதாவது, சேர்ந்து சாப்பிடுவது, உறங்குவது, தொடுவதெல்லாம் கூடும்)” என்று சொன்னார்கள்.

Advertising
Advertising

மாதவிடாய்க் காலத்தில் (மூன்று முதல் ஏழு நாட்கள்) பெண்கள் தொழக்கூடாது. அதே சமயம் இறை தியானத்தில்(திக்ர்) ஈடுபடுவது, இறைவனின் திருப்பெயர்களை உச்சரிப்பது, பிரார்த்தனை செய்வது(துஆ) ஆகியவற்றுக்கு அனுமதி உண்டு. ஒரு பெண் அன்னை ஆயிஷாவிடம்,“மாதவிடாய்க் காலத்தில் விடுபட்ட தொழுகைகளைப் பின்பு தொழ வேண்டுமா?” என்று கேட்டார். “விடுபட்டத் தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டும் என்று எங்களுக்கு இறைத்தூதர்

கட்டளையிடவில்லை” என்றார் ஆயிஷா.மாதவிடாய் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. அருவெறுப்பு அடையவோ ‘சீச்சீ’ என்று முகம் சுளிக்கவோ அதில் ஒன்றுமில்லை. ஓர் அழகிய நிகழ்வை அன்னை ஆயிஷா அவர்கள் கூறுகிறார்கள்.

“மாதவிடாய் நிலையில் நானும் இறைத்தூதரும் ஒரே போர்வையில் இரவைக் கழிப்போம். மாதவிடாய் இரத்தம் நபியவர்களின் உடலில் பட்டுவிட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவிவிட்டுப் பின்பு தொழுகையில் ஈடுபடுவார்கள். அதைவிட அதிகமாகக் கழுவ மாட்டார்கள்.”ஒரு பெண்ணுக்கு வழக்கத்திற்கு மாறாக (அதிக நாட்கள்)  உதிரப்போக்கு இருந்தது. இறைத்தூதரிடம் அந்தப் பெண்ணுக்குரிய மார்க்கச் சட்டம் என்ன என்று கேட்கப்பட்டது. “அந்தப் பெண்ணுக்கு வழக்கமாக எத்தனை நாட்கள்  மாதவிடாய் ஏற்படுமோ அந்த நாட்களில் மட்டும் தொழுகையைத் தவிர்த்து விடட்டும். அந்த வழக்கமான நாட்கள் முடிந்தபிறகு குளித்துக் கொள்ளட்டும். பிறகு கோவணம்(போல் ஏதேனும் உள்ளாடை) கட்டிக்கொண்டு தொழட்டும்” என்றார்கள். மாதவிடாய் தொடர்பான இத்தகைய வழிகாட்டுதல்கள் நபிமொழித் தொகுப்பு நூல்களில் ஏராளம் உள்ளன.

இந்த வார சிந்தனை

“தூய்மையை மேற்கொள்பவர்களை இறைவன் நேசிக்கிறான்.” (குர்ஆன் 2:222)

 சிராஜுல்ஹஸன்

Related Stories: