எதிர்கால வாழ்வு சிறப்பாகவே அமைந்துள்ளது!

நான் ஒரு மாற்றுத் திறனாளி. வாடகைக்கு கடை எடுத்து மின்சாதனம் பழுதுபார்க்கும் தொழில் செய்கிறேன். என் மனைவிக்கு அடிக்கடி உடல்நலம்  பாதிக்கப்படுகிறது. என் தாயாரின் பெயரில் உள்ள மனையில் வீடுகட்ட முடியவில்லை. சகோதரர்களுக்குள் மன வருத்தம் உண்டாகிறது. எனது  பிரச்னைகள் தீரவும், தொழில் நல்ல முறையில் நடக்கவும் வழி சொல்லுங்கள்.- க. ஸ்ரீதர், பாண்டிச்சேரி.

    
Advertising
Advertising

‘முயற்சி இருந்தால் முன்னேற்றம் நிச்சயம்’ என்ற எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, சிம்ம லக்னத்தில்  பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தை கணித்துப் பார்த்ததில், தற்போது 15.07.2018 வரை கேது தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள்  ஜாதகத்தின்படி ஜென்ம லக்னத்தில் இருந்து ஆறாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால், இந்த தசையில் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறீர்கள்.  சத்ரு, ரோக, ருண ஸ்தானம் என்று அழைக்கப்படும் ஆறாம் வீட்டில் கேது அமர்ந்து, அவரது தசை நடக்கும் காலத்தில் பல்வேறு பிரச்னைகள்  உண்டாவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

என்றாலும் உங்கள் ஜாதகத்தில் தொழிலைப் பற்றிச் சொல்லும் ஜீவன ஸ்தா னாதிபதியான சுக்கிரன், ஜென்ம லக்னத்தில் அமர்ந்திருப்பதால் கடும்  உழைப்பாளியாகத் திகழ்வீர்கள். தனது சொந்த உழைப்பினால் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தோடு போராடுவீர்கள். 39 வயது முடிந்து 40வது  வயது தொடங்கும் நாளிலிருந்து உங்கள் வாழ்க்கை ஏறுமுகமாக அமையும். அதுவரை பிரச்னைகளை சமாளிக்க வேண்டியிருக்கும்.

வீடு கட்டும் முயற்சியை சிறிது காலம் ஒத்தி வையுங்கள். உடன்பிறந்தோருடனான பிரச்னைகள் விரைவில் காணாமல் போய்விடும். நீங்கள்  நிம்மதியாக உறங்காதது மட்டுமே உங்கள் பிரச்னைக்கான காரணம். இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை தொடரும் கடன் பிரச்னை அதன்பின்  முற்றிலும் குறைந்துவிடும். உறக்கத்தைத் துறந்தால் உடல்நிலை கெட்டுவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இறைவன் நம்மைக்  கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். அரசுப்பணியை எதிர்பார்த்துக் காத்திருப்பதைவிட உங்கள் மேல் நம்பிக்கை வைத்து  உங்கள் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.

சுக்கிர தசை துவங்கும் நேரத்தில் உங்கள் தொழில் விருத்தி அடையும். பத்து பேருக்கு நீங்கள் வேலைவாய்ப்பு அளிப்பீர்கள். லாப ஸ்தானத்தில் ஆட்சி  பெற்றிருக்கும் புதன் சிறப்பான தனலாபத்தை அளிப்பார். மனைவியின் உடல்நல பாதிப்பு என்பதெல்லாம் தற்காலிகமானதே. உங்கள் மனைவி  உங்களுக்கு பக்கபலமாகத் துணை நிற்பார். ஞாயிற்றுக்கிழமை தோறும் அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வருவதை வழக்கத்தில்  கொள்ளுங்கள். பரமேஸ்வரனின் அருள் உங்கள் ஜாதகத்தில் பரிபூர்ணமாக நிறைந்திருக்கிறது. 21.08.2020 முதல் உங்கள் வாழ்க்கையில் ஏறுமுகம்  காண்பீர்கள்.

அமெரிக்காவில் பயோஇன்ஜினியரிங் படிக்கும் என் பேத்தி மருத்துவம் படித்து டாக்டர் ஆவாளா? ஏழைகளுக்காகவே பாடுபடவேண்டும் என்று  நினைக்கிறாள். அவளது ஆசை நிறைவேறுமா? திருமணம் எப்பொழுது?- பத்மாவதி ராமன், சென்னை.

 

சிங்கப்பூரில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் உங்கள் பேத்தியின் ஜாதகம் மிகவும் பலம் பொருந்தியது. ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும்  என்ற அவரது எண்ணம் அவரை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, மகர லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதக  பலத்தின்படி தற்போது அவர் மேற்கொண்டு படிப்பதை விட உத்யோகத்தில் சேர்வது நல்லது. அவரது தகுதிக்கேற்ற உத்யோகத்திற்கு முயற்சித்தால்  தற்போது கிடைத்துவிடும். பார்ட் டைமில் மேற்படிப்பினைத் தொடர்வதே அவரது எதிர்காலத்திற்கு நல்லது.

22 வயது முடிந்த நிலையில் தற்போது டாக்டர் படிப்பிற்கு முயற்சிப்பதை விட, ஏற்கெனவே தான் படித்து முடித்திருக்கும் பயோ இஞ்சினியரிங்  பிரிவில் கிடைக்கும் வேலைக்குச் செல்வதே உத்தமமாகத் தோன்றுகிறது. அவருடைய ஜாதகத்தில் புதன், குரு இருவரும் வக்கிர கதியில் சஞ்சரிப்பது  மேற்படிப்பினை தடைசெய்யும். தற்போது நடக்கும் சனி தசையில் குரு புக்தியின் காலம் உத்யோக  ரீதியான பயிற்சிக்கு துணைபுரியும். 23.11.2019  முதல் துவங்கவுள்ள புதன் தசை இவரது வாழ்வில் திருப்புமுனையை உண்டாக்கும்.

சுயசம்பாத்யம் அதிகரிப்பதோடு ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணமும் வெற்றி பெறும். 27வது வயதில் திருமணம் நடைபெறும்.  இவரது எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொண்டு இவரது முயற்சிகளுக்கு பக்கபலமாய் நின்று துணைபுரியும் நல்ல மனிதரை கரம் பிடிப்பார். உங்கள்  பேத்தியின் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் இணைந்துள்ள சனியும், கேதுவும் பொதுசேவைக்குத் துணையிருப்பார்கள்.

பொதுவாக ஏழைகள் என்று சொல்வதை விட ஏழ்மை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உபகரணங்களைத் தந்து உதவி  செய்வார். இவரது எளிமையான கண்டுபிடிப்புகள் உலகெங்கும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியாய் அமையும். ஆஞ்சநேய ஸ்வாமியினுடைய  அருள் உங்கள் பேத்திக்கு என்றென்றும் துணையிருக்கும். தனது தன்னலமில்லா சேவையினால் புகழ்பெறும் அம்சம் அவரது ஜாதகத்தில் பலமாக  உள்ளது.

என் மகளுக்கு கடந்த இரண்டு வருடங்களாக வரன் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவள் திருமணம் எப்பொழுது நடக்கும்? எத்தகைய வரன்  அமையும்? அவளது திருமண வாழ்வு எப்படி இருக்கும்? என் மகளுக்கு அரசாங்க வேலை கிடைக்குமா?

- நர்மதா, சென்னை.

அரசாங்கப் பணிக்காகக் காத்திருக்காமல் கிடைக்கும் உத்யோகத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்வது நல்லது. திருவாதிரை நட்சத்திரம் (மிருகசீரிஷம்  அல்ல), மிதுன ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதக பலத்தின்படி தற்போது குரு தசையில், புதன் புக்தியின் காலம் நடந்து  கொண்டிருக்கிறது. திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சனி பகவான் ஆறாம் வீட்டில் மறைகிறார்.

திருமணத்திற்கு அவசரப்படாமல் நிதானமாகப் பாருங்கள். உங்கள் மகளின் ஜாதகத்தில் லக்னாதிபதி சூரியன், ஜீவனாதிபதி சுக்கிரன் ஆகியோர் நீசம்  பெற்றுள்ளனர். பத்தாம் வீட்டில் நீச பலம் பெற்ற கேது அமர்ந்து அரசுப் பணியை தடை செய்தாலும் அந்நிய தேச வாழ்வினைத் தருவார். உங்கள்  மகளுக்கு அந்நிய தேசத்தில் பணிபுரியும் மாப்பிள்ளையாக பார்க்கலாம். 17.07.2019 முதல் இவருக்கான திருமண யோகம் துவங்க உள்ளது. அதனால்  வரும் வருடத்தில் நீங்கள் தீவிரமாக மாப்பிள்ளை தேட ஆரம்பிக்கலாம்.

உறவு முறையில் மணமகன் அமைவதற்கான வாய்ப்பு இல்லை. உங்கள் மகள் பிறந்த ஊரின் மேற்கு திசையில் இருந்து வரன் வந்து சேரும்.  தற்போதைய கால அமைப்புப்படி உங்கள் மகளை அவரது உத்யோகத்தில் முழு கவனத்தையும் செலுத்தச் சொல்லுங்கள். 2019ம் ஆண்டின்  பிற்பாதியில் தொலைதூரத்தில் பணிபுரியும் நபரோடு இவரது திருமணம் நிச்சயமாகிவிடும். முருகப்பெருமானின் திருவருளால் எதிர்கால வாழ்வு,  உங்கள் மகளுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.

பிட்ஸ் பிலானியில் படித்து கடந்த 12 வருடங்களாக நல்ல வேலையில் உள்ள எனது மகனுக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. 35 வயதாகும்  அவன் தற்போது சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறான். வயதான காலத்தில் எங்கள் ஆசையெல்லாம் இவனுக்கு திருமணம் செய்துவைத்து  வம்சத்தை தழைக்கச் செய்ய வேண்டும், நல்ல பெண்ணாக அமைய வேண்டும் என்பதே. இவனுடைய ஜாதகப்படி திருமணம் எப்போது நடக்கும்?- முத்துலட்சுமி, பெரவள்ளூர்.

 

வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிக்கப்பட்ட ஜாதகத்தை அனுப்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் அனுப்பியுள்ள ஜாதகக்  கணிதத்தின்படி தற்போது உங்கள் மகனுக்கு கேது தசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. பூசம் நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னத்தில்  பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் பாவம் சுத்தமாக உள்ளதால், எந்தவிதமான தோஷமும் இல்லை.  என்றாலும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சூரியன், ஒன்பதாம் வீட்டில் நீசபலத்துடன் அமர்ந்திருக்கிறார். மேலும் ஒன்பதாம் வீட்டில் உள்ள சூரியனோடு  புதன், குரு, சுக்கிரன், சனி என மேலும் நான்கு கிரஹங்கள் இணைந்துள்ளன.

இந்தப் பிள்ளைக்கு தனது தகப்பனாரின் சொந்த ஊர் பக்கத்தில் இருந்து, தகப்பனார் வழி உறவு முறையில் பெண் அமைவார். ஒரு காலத்தில் நன்கு  கௌரவத்துடன் வாழ்ந்து, தற்போது காலப் போக்கில் வசதி வாய்ப்புகள் குறைந்து சற்று ஏழ்மை நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக  இருப்பார். வசதி வாய்ப்பில் குறைவு இருந்தாலும் கௌரவம் நிறைந்த குடும்பமாக இருக்கும். உங்களுக்கு அந்த குடும்பத்தைப் பற்றி ஏற்கெனவே  தெரிந்திருக்கும். நல்ல குணவதியாகவும், குடும்பப் பொறுப்புகளை சுமக்கின்ற பெண்ணாகவும் அமைவார். 07.11.2018ற்குப் பின் பெண்ணைப் பற்றிய  தகவல் உங்களை வந்து சேரும்.

அதுவரை பொறுத்திருங்கள். உங்கள் மகனின் உத்யோக ஸ்தானத்தைப் பொறுத்தவரை அந்நிய தேசப் பணி என்பதே அவருக்கு நன்மை தரும்  வகையில் அமைந்துள்ளது. பலநாடுகளில் பணியாற்றும் அம்சம் அவருக்கு உள்ளது. ஒரே இடத்தில் நிரந்தரமாக உட்கார்ந்திருப்பது அவருடைய  மனதிற்கு ஏற்புடையதாக இருக்காது. என்றாலும் 40வது வயது முதல் அதாவது 19.11.2021ற்கு மேல் அமைகின்ற உத்யோகம் அவருக்கு முழுமையான  திருப்தியைத் தருவதாக அமையும். உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதியான சனி, ஒன்பதாம் இடமாகிய தர்ம ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பதால் என்றும் தர்மநெறி  வழுவாமல் நடந்து, தனது பரம்பரைக்கு பெருமை சேர்ப்பார்.

வருடந்தோறும் தவறாமல் குலதெய்வ ஆராதனை செய்து வாருங்கள். குலதெய்வ வழிபாடும், முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளைச்  சரிவர செய்து வருவதாலும், விரைவில் உங்கள் வம்சம் தழைக்கக் காண்பீர்கள். இளம் வயதில் அறுவை சிகிச்சையின் போது உயிர்நீத்த உங்கள் மூத்த  மகனின் நினைவுநாளில் வருடந்தோறும் தவறாமல் ஆதரவற்றோருக்கு அன்னதானம் செய்து வாருங்கள். உங்கள் வாழ்நாளிலேயே உங்கள் பேரனைக்  கொஞ்சும் வாய்ப்பு உங்களுக்கு நிச்சயம் உண்டு. கவலை வேண்டாம்.

திருமணம் ஆன நாள் முதலாக எனது மகனின் வாழ்க்கை சிரமத்தில் உள்ளது. ஏழு வயதில் ஒரு மகன் இருக்கிறான். திருமணம் ஆன மூன்றாம்  ஆண்டு முதல் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. வழக்கு எப்போது முடியும்? பேரன் எங்கள் வீட்டிற்கு வருவானா? எனது மகனின் எதிர்கால  வாழ்க்கை எவ்வாறு இருக்கும்?- ஒரு வாசகி.

செவ்வாய், குரு, சனி ஆகிய மூன்று கிரஹங்களின் வக்கிர நிலையும், ஜென்ம லக்னத்தில் சந்திரன்-கேதுவின் இணைவும், ஏழாம் வீட்டில் ராகுவின்  அமர்வும் உங்கள் மகனின் வாழ்வில் பிரச்னைகளைத் தந்து கொண்டிருக்கிறது. மூலம் நட்சத்திரம், தனுசு ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும்  உங்கள் மகனின் ஜாதகக் கணிப்பின்படி தற்போது சந்திர தசையில் சூரிய புக்தி நடந்து கொண்டிருக்கிறது. 05.11.2018ற்கு மேல் விவாகரத்து வழக்கு  முடிவிற்கு வரும். உங்கள் மருமகளின் ஜாதகத்தை நீங்கள் அனுப்பவில்லை. மருமகளை விட பேரன் நம் வீட்டிற்கு வர வேண்டும் என்பதில் அதிக  அக்கறை கொண்டுள்ளீர்கள்.

உங்கள் பேரனின் ஜாதகப்படி அவனுக்கு தன் தந்தையுடனான தொடர்பு, வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். உங்கள் மகனின் ஜாதகப்படியும் தனது  பிள்ளையுடன் அவரது உறவுமுறை தொடரும். உங்கள் மகனின் ஜாதகத்தில் பிள்ளையைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் உச்ச பலம் பெற்ற  சூரியனுடன் புதன் இணைந்திருப்பது நல்ல நிலையே. செவ்வாயின் சொந்த வீடான மேஷத்தில் புதனும், புதனின் சொந்த வீடான கன்னியில்  செவ்வாயும் பரஸ்பரம் மாறி அமர்ந்திருப்பதும் நற்பலனையே தரும். உங்கள் பேரன் தனது தாயாருடன் வளர்ந்தாலும் அவரது எண்ணம் முழுவதும்  தந்தையையே சுற்றி வரும்.

சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பேரனின் ஜாதகத்தில் பிதுர்காரகனான சூரியன் ஜென்ம லக்னத்திலேயே  புதனுடன் இணைந்திருப்பது அவனுக்கு தன் தந்தையின்பால் உள்ள ஈடுபாட்டினை உறுதி செய்கிறது. உங்கள் பேரனின் ஜாதகத்தில் தாயார் மற்றும்  தந்தையாரைப் பற்றிச் சொல்லும் நான்கு மற்றும் ஒன்பதாம் பாவங்களுக்கு அதிபதி, சுக்கிரன் ஒருவனே. அந்தச் சுக்கிரனும் 11ம் இடத்தில்  அமர்ந்திருப்பது நற்பலனைத் தரும். உங்கள் பேரனின் எதிர்கால நன்மை கருதியாவது உங்கள் மகனும், மருமகளும் இணைந்திருப்பதோ அல்லது  இணைந்து செயல்படுவதோ நல்லது.

உங்கள் மகனின் ஜாதகப்படி மறுமணம் என்பது அவரது வாழ்வில் வெற்றியைத் தராது. பேரனின் ஜாதகம் வெகுசிறப்பான முறையில் அமைந்துள்ளது.  உங்கள் பேரனின் ஜாதகப்படி தற்போது குரு தசை நடந்து வருகிறது. பேரனின் ஜாதக பலம், பிரிந்த குடும்பத்தை ஒன்றிணைக்கட்டும். இரு  குடும்பத்தைச் சேர்ந்த பெரியவர்கள் அவர்களது இணைவிற்கு ஒத்துழைக்க முயற்சியுங்கள். பிரதி ஞாயிறு தோறும் கோயம்பேடு அருகில் உள்ள  குறுங்காலீஸ்வர் ,சரபேஸ்வரர் சந்நதிக்குச் சென்று உங்கள் மகனின் பெயரில் அர்ச்சனை செய்து வாருங்கள். வழக்கு விரைவில் முடிவிற்கு  வருவதோடு, மகனின் வாழ்வில் நிம்மதி கிடைக்கக் காண்பீர்கள்.

என் தங்கை மகனின் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவனும் அப்பா மாதிரி உருப்படாமல் போய்விடுவானா? தன் வழியே தன் இஷ்டப்பட்ட  பெண்ணைத் தேடிக்கொண்டு நகர்ந்து விடுவானா? தாயை ஆதரிப்பானா, கைவிடுவானா? வீடு வாசல் ஏதாவது பொறுப்பாக வாங்குவானா? பரிகாரம்  இருப்பின் சொல்லவும்.- ஒரு வாசகி.

 

உங்கள் தங்கையின் வாழ்வு சிறப்பாக அமையாத ஆதங்கத்தில் கடிதம் எழுதியுள்ளீர்கள் என்பது புரிகிறது. அதற்காக எதிர்மறையான எண்ணங்களை  அதிகமாக வளர்த்துக் கொண்டுள்ளீர்கள். உங்கள் கேள்விகளில் உள்ள எதிர்மறையான அர்த்தங்களை எடுத்துவிட்டு அதையே நேர்மறையாகக்  கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் தங்கை மகனின் ஜாதகக்  கணிப்பின்படி தற்போது செவ்வாய் தசையில் குருபுக்தி நடந்து வருகிறது.

30 வயது வரை செவ்வாய் தசை நடப்பதாலும், செவ்வாய் 12ம் வீட்டில் நீசம் பெற்றிருப்பதாலும் அதுவரை சற்று சிரமத்தினை சந்தித்து வருவார்.  அதன் பின்னர் துவங்க உள்ள ராகு தசை இவரது வாழ்வில் திருப்பு முனையை உண்டாக்கும். ஜென்ம லக்னாதிபதி சூரியனுடன் இணைந்து நான்காம்  வீட்டில் ராகு உச்ச பலத்துடன் அமர்ந்திருப்பது சுகமான வாழ்வினைத் தரும். 30வது வயது முதல் நல்ல சம்பாத்யம் உண்டு.

சொந்த வீடு, வண்டி வாங்கும் யோகம் வந்து சேரும். அதுவரை பொறுத்திருங்கள். சிம்ம லக்னத்தில் பிறந்த பிள்ளை என்பதால் சற்று அதிகார  தோரணையைக் கொண்டிருப்பார். இருந்தாலும் தனது தாயாரை நல்லபடியாக வைத்து பார்த்துக் கொள்வார். இப்பொழுதுதான் ஒரு வருட காலமாக  வேலைக்குச் செல்லத் துவங்கியிருக்கிறார். 28வது வயதில் குடும்பத்தினர் பார்த்து அவரது திருமணத்தை நடத்தலாம்.

பெயருக்கு ஏற்றார்போல் பெருமாளின் அனுக்ரஹம் இந்தப் பிள்ளையின் ஜாதகத்தில் நிறைந்துள்ளது. பிள்ளைக்கு முன்னால் எதிர்மறையான  பேச்சுக்களைத் தவிர்த்து அவனை மிகவும் நல்ல பிள்ளை என்று புகழ்ந்து பேசுங்கள். தனது நற்பெயரைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும், சுய  கௌரவத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்ற எண்ணம் அந்தப் பிள்ளையிடம் நிறைந்துள்ளது. பலம் பொருந்திய ஜாதக அமைப்பினை உடைய அந்தப்  பிள்ளை எதிர்காலத்தில் சிறப்பாக வாழ்வார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

- சுபஸ்ரீ சங்கரன்

Related Stories: