விரைவில் மழலை வரம் கிட்டும்!

நான் இளங்கலை கணிதம் முதலாம் ஆண்டு நிறைவு செய்துள்ளேன். படிப்பில் மந்தமாக உள்ளேன். ஆனால் பேச்சு போட்டிகளில் எப்போதும் முதல்பரிசை தக்கவைத்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் நான் அரசு உயரதிகாரியாக வேண்டும் என்ற லட்சியம் உள்ளது. குழப்பமான மனநிலையில் உள்ள எனக்கு தெளிவு தாருங்கள். நந்தகுமார், சேலம்.

Advertising
Advertising

அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. கல்லூரிப் படிப்பினில் அடியெடுத்து வைக்கும் போது பெரும்பாலான இளைஞர்கள் செய்யும் தவறையே நீங்களும் செய்திருக்கிறீர்கள். நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து ஆர்வம் எந்தத் துறையில் உள்ளதோ அது சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்துப் படிப்பதே புத்திசாலித்தனம். உங்கள் ஜாதகத்தில் கணித அறிவினைத் தரும் புதன் வக்கிரம் பெற்று தடையினை உண்டாக்கும் எட்டாம் வீட்டில் சூரியனுடன் இணைந்து அமர்ந்துள்ளார்.

இந்த நிலை கணிதம் சார்ந்த படிப்பினில் உங்களுக்கு முன்னேற்றத்தினை தராது. உங்கள் ஜாதக பலத்தின்படி ஜென்ம லக்னாதிபதி சந்திரன் நீசம் பெற்றிருந்தாலும் சிந்தனையைத் தரும் ஐந்தில் அமர்ந்துள்ளார். தொழிலைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் குருவும், ஒன்பதில் செவ்வாயும் பரிவர்த்தனை யோகம் பெற்றுள்ளனர். இன்னமும் காலம் கடந்து விடவில்லை. ஒருவருடம் வீணாகிவிட்டதே என்று எண்ணாமல் நீங்கள் படிக்கும் கல்லூரியிலேயே மொழிப்பாடத்தினை தேர்வு செய்து படியுங்கள். மொழியியல் துறையிலேயே சிறந்த பேராசிரியராக உருவெடுக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பிடித்ததைப் படித்தால் வாழ்க்கையில் முன்னேறலாம். குழப்பமே தேவையில்லை.

நான்கு வயதாகும் என் இரண்டாவது மகன் பிறந்த ஆறாவது மாதத்தில் இருந்து வலிப்பு நோயால் அவதிப்படுகிறான். மருந்து மாத்திரை சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறான். அவன் இன்னமும் நன்றாகப் பேசவில்லை, நடக்கவில்லை, சாப்பாடும் அரைத்துதான் ஊட்டுகிறோம். அவனுடைய உடல்நிலை சீரடைய பரிகாரம் சொல்லுங்கள். சித்ரா அருண், திருப்பூர்.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் ராகு புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் ஜென்மலக்னத்தில் சுயசாரம் பெற்ற கேது வலிமையாக அமர்ந்துள்ளதும், ஜென்மலக்னாதிபதி செவ்வாய் சுயசாரத்தில் ரோகத்தினைத் தரும் ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் சிரமத்தினைத் தந்து கொண்டிருக்கிறது. நரம்பு மண்டலத்தைக் கட்டுப்படுத்தும் புதனும் வக்கிரம் பெற்ற நிலையில் சஞ்சரிக்கிறார். அவருடைய ஜாதக பலத்தின்படி மூளைக்குச் செல்லும் நரம்பு ஒன்று பலவீனமாக உள்ளதே தவிர, சேதமடைந்துவிடவில்லை. உங்கள் பிள்ளையை முழுமையாக குணப்படுத்த இயலும் என்ற நம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள். மருத்துவர்களின் ஆலோசனைகளை தவறாது பின்பற்றி வாருங்கள்.

பழனிக்குச் சென்று மொட்டையடித்து காது குத்தலாம் என்று இருந்த நிலையில் குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டதாக எழுதியுள்ளீர்கள். அந்தச் சடங்கினைச் செய்தீர்களா இல்லையா என்பதைக் குறிப்பிடவில்லை. செய்யாமல் விட்டிருந்தால் முதலில் அந்தச் சடங்கினை செய்து பழனிஆண்டவனிடம் உங்கள் பிரார்த்தனையை வையுங்கள். ஏதேனும் ஒரு செவ்வாய்க் கிழமை நாளில் பழனிக்குச் சென்று மொட்டை அடித்து காது குத்துவது நல்லது. வாரம் ஒருமுறை கொள்ளு தானியத்தால் ரசம் சமைத்து குழந்தைக்கு ஊட்டி வாருங்கள். பழனி ஆண்டவனின் அருளால் குழந்தை வெகு விரைவில் நலம் பெறுவான்.

முப்பத்தைந்து வயதாகும் என் மகனுக்கு இதுவரை எவ்வளவோ முயற்சி செய்தும் திருமணம் கூடவில்லை. மகனின் திருமணம் தடைபடுவதால் மனதிற்கு நிம்மதியில்லை. எவ்வளவோ ஜாதகங்கள் பார்த்துவிட்டோம்.அவனுக்கு கல்யாணம் நடக்க வாய்ப்பு உண்டா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? சுப்ரமணியன், மும்பை.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்யா லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் பிள்ளையின் ஜாதகத்தின்படி தற்போது 09.07.2018 முதல் ராகுதசையில் குரு புக்தி துவங்கி உள்ளது. பிரச்னை அவருடைய ஜாதகத்தில் இல்லை. நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்திலேயே எதிர்பார்ப்பு என்றுநீங்கள் எழுதியிருக்கும் குறிப்புகளைப் பார்க்கும்போதே பெண் வீட்டார் மிகவும் யோசிப்பார்கள். எழுபத்தியொன்பது வயதாகும் நீங்கள் இன்னமும் உங்கள் காலத்திலேயே உள்ளீர்கள் என்பது புரிகிறது. தற்போது காலம் மிகவும் மாறிவிட்டது, மாப்பிள்ளை வீட்டாரை விட பெண் வீட்டார் ஒரு படி அதிக எதிர்பார்ப்பினைக் கொண்டிருக்கும் காலம் இது என்பதைப் புரிந்து  கொண்டு செயல்படுங்கள்.

அவருடைய ஜாதகத்தில் திருமணத்தைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது நல்லநிலையே. மேலும் எந்தவிதமான தோஷமும் இல்லாத சுத்தமான ஜாதகத்தினைக் கொண்டிருக்கும் அவருக்கு தற்போது துவங்கியுள்ள குருபுக்தி என்பது திருமண ரீதியாக மிகவும் சாதகமான நேரத்தினைத் தந்திருக்கிறது. நேரத்தினை உபயோகப்படுத்திக்கொண்டு பெண் தேடுங்கள். பெண்ணிற்கும், பிள்ளைக்கும் பிடித்திருக்கிறதா என்பதை மட்டும் கருத்தில் கொள்ளுங்கள். பிரதி வெள்ளிக்கிழமை தோறும் வீட்டில் கிழக்கு முகமாக நெய் விளக்கேற்றி கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி சுக்கிர பகவானை மனதில் தியானித்து உங்கள் மகனை வழிபட்டு வரச் சொல்லுங்கள். விவாஹம் கைகூடும்.

“தைத்யமந்த்ரீ குரு ஸ்தேஷாம் ப்ராணதச்சமஹாமதி: ப்ரபுஸ்தாரா க்ரஹாணாம் ச பீடாம் ஹரது மே ப்ருகு:”

எனது மகனுக்கு அரசு வேலைக்குச் செல்லும் யோகம் உண்டா? தனியார் பள்ளிக்கு வேண்டா வெறுப்பாக குறைந்த சம்பளத்திற்கு செல்லும் அவன் மனஉறுதி குறைந்துவிட்டதாகக் கூறுகிறான்.தக்கபரிகாரம் கூறுங்கள். சோமு, அரியலூர்.

சதயம் நட்சத்திரம், கும்பராசி, கன்னி லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகனின் ஜாதகத்தின்படி தற்போது சனிதசையில் கேது புக்தி நடந்து வருகிறது. தனியார் பள்ளியில் குறைந்த சம்பளம் என்பதற்காக வேண்டா வெறுப்பாக வேலைக்குச் செல்வதா? செய்யும் தொழிலில் பிடிமானம் வேண்டாமா? அதிலும் ஆசிரியர் பணி என்பது எத்தனை புனிதமானது, ஓய்வு பெற்ற ஆசிரியராகிய நீங்கள்அதன் மகத்துவத்தை உங்கள் பிள்ளைக்குக் கற்றுத்தர வேண்டாமா? தனியார் பள்ளியில் வேலை பார்ப்பவர்களில் பலரும் நல்லாசிரியர் என்ற பெயர் பெற்றிருக்கிறார்கள்.

உங்கள் மகனின் ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திலேயே குரு பகவான் அமர்ந்திருப்பது அவரையும் ஒரு சிறந்த நல்லாசிரியாக உருவெடுக்க வைக்கும். ஜென்ம லக்னாதிபதி புதன் ஆறில் அமர்ந்திருப்பதால் சிறிது போராட்டம் உருவாகியுள்ளது. உத்யோக ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் செவ்வாய் நிச்சயமாக அரசுப் பணியினைப் பெற்றுத் தருவார். அரசுப்பணி கிடைக்கும் வரை மன உறுதியைத் தளரவிடாது, முழுமையான அர்ப்பணிப்புடன் ஆசிரியர் பணியை சேவையாக ஆற்றி வரச் சொல்லுங்கள். வீட்டினில் டியூஷன் முதலான பயிற்சி வகுப்புகளை எடுப்பதும் அவருடைய எதிர்காலத்திற்கு நல்லது. 02.03.2019க்குப் பின் நல்ல நேரம் துவங்குவதால் அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் அரசுப் பணியை எதிர்பார்க்கலாம்.

கீழேயுள்ள ஸ்லோகத்தினைச் சொல்லி  தினமும் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர நல்லாசிரியராக உருவெடுப்பார்.

“சக்திமந்தமசேஷ ஸ்ருஷ்டி விதாநகேஸகலம் ப்ரபும்

தக்ஷிணாமுக மாச்ரயேமமஸர்வஸித்திதமீச்வரம்.”

பன்னிரெண்டு வயதாகும் என் மகன் ஆறாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்து பள்ளி செல்லவில்லை. கடந்த 20 மாதங்களாக பள்ளிக்குச் செல்லாமல் அப்பா, அம்மா, தங்கையை அடிப்பது, கெட்ட வார்த்தைகளால் பேசுவது, காசு கேட்பது, ஏதாவது சொன்னால் பொருட்களை போட்டு உடைப்பது என்று இருக்கிறான். அவனுக்கு மனநோய்பிரச்னை இல்லை என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். ஹாஸ்டலில் சேர்த்துவிட்டால் ஒழுங்காக இருப்பானா? நல்லவழி சொல்லுங்கள். ஜெயஸ்ரீ, வேலூர்.

உத்திரம் நட்சத்திரம், கன்னி ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகத்தில் தற்போது செவ்வாய் தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சிந்தனையைப்பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் மனோகாரகன் சந்திரனுடன் கேது இணைந்திருப்பது பிரச்னையைத் தோற்று வித்திருக்கிறது. ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் ஆட்சி பலத்துடன் லக்னத்திலேயே அமர்ந்திருப்பது கூடுதல் பலத்தினைத் தரும். உங்கள் பிள்ளை சுகவாசியாக வாழ விரும்புகிறார். ஆனால், அந்த சுகம் என்பது எப்படி வந்து சேரும் என்பது அவருக்கு புரியவில்லை.

தற்போது 12 வயது முடிந்து 13வதுவயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். 17வது வயதிற்குள் அவருடைய நடவடிக்கைகளை சரி செய்ய வேண்டியது பெற்றோர் ஆகிய உங்களது தலையாய கடமை. காலதாமதம் செய்யாது உடனடியாக ஹாஸ்டலில் சேர்த்து விடுங்கள். ஹாஸ்டலில் சேர்த்தவுடன் உடல்நலம் சரியில்லாததைப் போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவார். மனதைக் கல்லாக்கிக் கொண்டு அவரை ஹாஸ்டலிலேயே இருக்க விடுங்கள். 16.04.2019க்குப் பின் அவருடைய நடவடிக்கைகளில் சீரான மாற்றத்தினைக் காண்பீர்கள். சோளிங்கர் திருத்தலத்திற்கு மகனை அழைத்துச் சென்று முடி காணிக்கை அளித்து வழிபடச் செய்யுங்கள். மனத்தெளிவு பெறுவான்.

என் மகளுக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. இருமுறை கருத்தரித்து குழந்தை அசைவற்று இருந்ததால் கருச்சிதைவு செய்யும்படி ஆகிவிட்டது. அவளுக்கு புத்திர பாக்கியம் உண்டாக ஒரு நல்லபரிகாரம் சொல்லுங்கள். ஜெயலக்ஷ்மி, திருவண்ணாமலை.

புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. பூராடம் நட்சத்திரம், தனுசு ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகத்தில் ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. உங்கள் மருமகனின் ஜாதகத்தில் புத்ர ஸ்தான அதிபதியும், புத்ரகாரகனுமான குரு பகவான் நீசபலம் பெற்று மூன்றில் அமர்ந்திருப்பது புத்ரதோஷத்தினைத் தருகிறது. கணவன்மனைவி இருவரையும் திருச்செந்தூர் திருத்தலத்திற்கு வியாழக்கிழமை நாளில் சென்று நாழிக்கிணறு மற்றும் சமுத்திரத்தில் ஸ்நானம் செய்து செந்தில் ஆண்டவரை தரிசித்து பிரார்த்தனை செய்து கொள்ளச் சொல்லுங்கள்.

பிரதி மாதந்தோறும் வருகின்ற சஷ்டி நாளில் விரதம் இருந்து வீட்டிற்கு அருகில் உள்ள சுப்ரமணியரின் ஆலயத்திற்குச் சென்றுகந்தசஷ்டி கவசம் படித்து வழிபடச் சொல்லுங்கள். ஆலய வாசலில் அமர்ந்திருக்கும் ஆதரவற்றோருக்கு அவர்களால் இயன்ற அன்னதானம் செய்தபிறகு விரதம் முடித்து உணவருந்தச் சொல்லுங்கள். கீழேயுள்ள ஸ்லோகத்தினை தம்பதியர் இருவரும் தினமும் காலை மாலை இருவேளையும் 18 முறை சொல்லி சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கி வரச் சொல்லுங்கள். வடிவேலனின் அருளால் விரைவில் வம்ச விருத்தி உண்டாகக் காண்பீர்கள்.

“ஜநித்ரீபிதா ச ஸ்வபுத்ராபராதம்

ஸஹேதே ந கிம் தேவஸேநாதிநாத

அஹம் சாதிபாலோ பவான் லோகதாத:

க்ஷமஸ்வாபராதம் ஸமஸ்தம் மஹேச.”

என் மகளுக்குத் திருமணமாகி தற்போது ஒன்றரை வருட காலமாக தாம்பத்ய உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் வருந்திய மருமகன் விவாகரத்து கேட்டு வழக்கு நடந்து வருகிறது. என் மகள் குடும்ப வாழ்க்கைக்கு தகுதியானவர்தான் என்று டாக்டர் சர்ட்டிபிகேட் வாங்கி வக்கீலிடம் கொடுத்துள்ளேன். இவர்கள் மறுபடியும் சேர்ந்து வாழ என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? வைத்தியலிங்கம், திருச்சி.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கடக லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மருமகனின் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, விருச்சிக (தனுசு லக்னம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளீர்கள்)  லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சூரிய தசையில் சூரிய புக்தி என்பது துவங்கியுள்ளது. உங்கள் மகளின் ஜாதக பலத்தின்படி ஏழாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதும், ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் மூன்றாம் வீட்டில் சனியுடன் இணைந்திருப்பதும் தாம்பத்ய உறவில் பிரச்னையைத் தோற்றுவித்திருக்கிறது.

என்றாலும் தற்போது 17.07.2018 முதல் நேரம் மாறியிருப்பதால் கொஞ்சம், கொஞ்சமாக உடலும், மனமும் வலிமை பெற்றுவிடும். கோர்ட், கேஸ் என்று அலைவதை விடுத்து மருமகனை தனிமையில் சந்தித்து இடைத்தரகர் எவருமின்றி நீங்களே நேரடியாகப் பேசுங்கள். உங்கள் மகளையும் அவரிடம் பேச வையுங்கள். மஹாளய அமாவாசைக்குப் பின் வருகின்ற நவராத்திரி ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வீட்டினில் அம்பிகையை பூஜை செய்து தினம் ஒரு சுமங்கலி வீதம் ஒன்பது நாட்களும் ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு புடவையுடன் கூடிய தாம்பூலம் அளித்து உங்கள் மகளை நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். தீபாவளியை ஒட்டி மகளை அவரது புகுந்த வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். அம்பாளின் அருளால் அவர்களது தாம்பத்ய வாழ்வு சிறப்படையும்.

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா்  திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: