×

பூக்களும் பரமேஸ்வரனும்

* மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பூவனத்தில் ஈசன் ‘பூவண்ணன்’, ‘பூவணத்தவன்’, ‘பூவணன்’ எனும் பெயர்களால் வணங்கப்படுகிறார்.

* ஈசனின் திருக்கோலங்களில் ஒன்றான சதாசிவமூர்த்தி பொற்றாமரை மலரில் அமர்ந்து கைகளில் செந்தாமரையையும் நீலோத்பலத்தையும்  ஏந்தியருள்வதால் ‘தாமரைச் சென்னியன்’, ‘தாமரைச் சேவடியான்’, ‘தாமரை மலர்கரத்தான்’, ‘தண்தாமரைச் சைவன்’, ‘தாமரையான்’ என்றெல்லாம்  போற்றப்படுகிறார்.

* தஞ்சாவூர்-திருவையாறு சாலையிலுள்ள கண்டியூருக்கு மேற்கே 4 கி.மீ. தொலைவில் உள்ள பூந்துருத்தி தலத்தில் ‘புஷ்பவனநாத’ராக ஈசன்  அருள்கிறார்.

* தும்பைப் பூவை விரும்பிச் சூடிடும் பரமனை ‘தும்பைச் சூடி’ என திருமுறைகள் போற்றுகின்றன. காஞ்சிபுரம் பங்குனி உத்திர  ஏகாம்பரேஸ்வரர்-ஏலவார்குழலி திருமணத்தின்போது தும்பை மலர்களைக் கொண்டு புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது.

* திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பரை தேவாரம், ‘சிந்துபூந்துறைச் செல்வர்’ என போற்றுகிறது.

* கம்பராமாயணத்தில் ‘எருக்குமதி படைத்த சடை இறைவன்’ என எருக்கம்பூவைச் சூடிய ஈசன் புகழப்படுகிறார்.

* ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறையில் ‘புஷ்பவனேஸ்வரர்’ எனும் பெயரில் இந்திரன் வழிபட்ட ஈசனை தரிசிக்கலாம்.

* மன்னார்குடிக்கு வடக்கே 10 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள, திருநாவுக்கரசரால் பாடப்பட்ட பூவனூரில் ‘புஷ்பவனநாத’ராக ஈசன் வழிபடப்படுகிறார்.

*  சென்னை-செங்குன்றத்தை அடுத்த ஞாயிறு திருத்தலத்தில் ‘புஷ்பரதேஸ்வரர்’ எனும் திருப்பெயரில் மகேசனை தரிசிக்கலாம். பஞ்சபாஸ்கர  தலங்களுள் இத்தலமும் ஒன்று.

* தேவாரத்திலும், திருமுறை நூல்களிலும் சிவபெருமான் ‘கொன்றை வேணியன்’, ‘கொன்றைச் சடையான்’, ‘பொன்னங்கடுக்கைப் புரிசடையோன்’ என  குறிப்பிடப்பட்டுள்ளார்.

* செவ்வந்தீஸ்வரர் எனும் பெயரில் சிவபெருமான் அருளும் தலம், காஞ்சிபுரத்தில் உள்ளது.

* பெரியபாளையத்திற்கு அருகில் ஆரணியாற்றங்கரையில் ‘செண்பகபிச்சாலீஸ்வரர்’ எனும் பெயரில் சிவ பெருமான் திருவருள்பாலிக்கிறார்.

* திருநெல்வேலியில் உள்ள திருப்புடைமருதூரில் ‘நாறும்பூநாதராக’ பரமேஸ்வரனை தரிசிக்கலாம்.

* தேவாரம் கொன்றை மலரை திருமலர் என போற்றுகிறது. காஞ்சிபுரத்திலுள்ள ஆலஞ்சேரியில் ‘திருமலர் உடையார்’ எனும் பெயரில் ஈசனை  வணங்கி மகிழலாம்.

* கரவீரம் எனும் மஞ்சள் அலரி பூவின் பெயரை தன் பெயரோடு சேர்த்து ‘கரவீரநாதராக’ பரமன் அருளும் திருத்தலம் திருவாரூருக்கு அருகே உள்ள  கரையாபுரம்.

* திருமலைராயன் பட்டினத்தில் உள்ள தியாகராஜப் பெருமான் ‘செண்பகத்தியாகர்’ என வணங்கப்படுகிறார்.

* திருவாரூர் தியாகராஜரை ‘செவ்வந்தித் தோடழகர்’,  ‘தண்தாமரையான்’ என பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.

* திருக்கருகாவூரில் முல்லைக்கொடி படர தன் திருமேனியை அளித்த ‘முல்லைவனநாதரை’ தரிசிக்கலாம்.

* குரங்கணில்முட்டத்தில் ஈசன் பாரிஜாத மரத்தடியில் வீற்றருள் புரிவதால் ‘கொய்யாமலர் சூடியோன்’ என அழைக்கப்படுகிறார்.

* மன்னார்குடியிலிருந்து 21. கி.மீ. தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் உள்ள திருக்களர் ஈசன் ‘பாரிஜாதவனேஸ்வரர்’ எனும் பெயரில்  அருள்கிறார்.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி