×

பக்தர் துயர்களையும் பிரயோக சக்கரம்!

கேரளம் - திருமூழிக்களம்

இரு சகோதரர்களிடையேயான உணர்வு பூர்வமான மோதலோடு திருமூழிக்களம் என்ற திவ்ய தேசம் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்த சகோதரர்கள் லட்சுமணனும், பரதனும். லட்சுமணனுடனும், சீதையுடனும் சித்ரகூடத்தில் ராமன் தங்கியிருந்தபோது ஏற்பட்டது அந்த மோதல். வெகு தொலைவில் மண் புழுதி விண்ணை எட்டும் அளவுக்கு உருவாக்கிய பெரும் ஆரவாரத்தை லட்சுமணன் உடனே அடையாளம் கண்டுகொண்டான். ஆமாம், படை, பரிவாரங்களோடு அப்படி வருபவன் பரதன்தான்! ராமன் வனவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று கைகேயி, தசரதனின் ஆணையாகக் கூறி ராமனை அயோத்தியை விட்டு விரட்டியபோது அங்கே பரதன் இல்லை, அவன் தன் தாய்மாமன் வீட்டிற்குச் சென்றிருந்தான். இதுவே ராமனுடன் காட்டுக்குச் சென்ற லட்சுமணனுக்குப் பெரிய உறுத்தலாக இருந்தது   ‘தெரிந்தேதான் போய் மறைந்துகொண்டானோ?’ அப்போது முதல் அவன் பரதனைப் பரம வைரியாகவே கருதத் தொடங்கினான்.

அதனால்தான் இப்போது பரதன் வரும்போது அவனை இன்னமும் சந்தேகிக்கத் தோன்றியது லட்சுமணனுக்கு. ராமனை முற்றிலுமாக ஒழித்திட படைகளுடன் பரதன் வருகிறான் என்றே குரூரமாக சிந்தித்தான். ராமனை நெருங்கு முன்னாலேயே பரதனை அழித்துவிட ஆவேசப்பட்டான். ஆனால், நிலைமை வேறாக இருந்தது. தன் படைகளோடு மட்டுமல்ல அயோத்தி மக்கள் பலருடனும் ராமனை நாடி வந்திருந்த அவன், ராமன் இப்போதே, உடனடியாக அயோத்திக்குத் திரும்பவேண்டும் என்றும் சிம்மாசனத்தில் அமர்ந்து அதனை சிறப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டான். இதைப் பார்த்த லட்சுமணன், தன் துர்சிந்தனைக்காக வெட்கப்பட்டான். ஆனாலும், அவனுடைய மனதில் திடமாகக் குடியிருந்த வன்மம், பரதனுடன் அவனை சுமுகமாகப் பேச வைக்கவில்லை. பரதன் மீதான சந்தேகம் லட்சுமணனை விட்டு முற்றிலுமாக நீங்கவில்லை. இறுதியாக ராமன், லட்சுமணனை ஆசுவாசப் படுத்தினான். பரதன் விரும்பிக் கேட்டுக்கொண்டபடியே தன் பாதுகைகளை அவனிடம் அளித்தான்.

ஹரித முனிவர், திருமூழிக்களம் என்ற இந்தத் திருத்தலத்தைத் தேர்ந்தெடுத்து இங்கே தன் எண்ணங்களை எழுத்தாக வடித்தார். தனக்குப் பின்னால் தோன்றும் மக்கள் அனைவருக்கும் பெரிதும் பயன்படக்கூடிய பல ஞானநூல்களை அவர் உருவாக்கினார். வெறும் செல்வம் சேர்ப்பதையே தம் வாழ்க்கை நோக்கமாகக் கொள்ளாமல் கல்வி, அறிவு, ஞானத்தை, மக்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தின அந்த நூல்கள். இப்படி அற்புதமான நூல்களை உருவாக்கிய அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம், சாட்சாத் பெருமாளின் திவ்ய தரிசனமே! பகவானைப் பார்த்த மாத்திரத்தில் உள்ளம் உருக, கண்களில் நீர் வழிய, அப்படியே நெடுஞ்சாண்கிடையாக அவர் பாதங்களில் விழுந்தார். ‘உன்னுடைய ஞானத் திரட்சியைக் கண்டு பிரமித்தே நான் வந்தேன். வருங்கால சந்ததியின் வாழ்க்கையை செழுமைப்படுத்தும் அற்புத நூல்களை உருவாக்கிய உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’ என்று பரந்தாமன் கேட்டபோது மேலும் நெகிழ்ந்து குதூகலித்தார் ஹரித முனிவர்.

‘‘பகவானே, இப்படி ஒரு திவ்ய தரிசனத்தைக் காட்டிய பிறகும் ஏதேனும் வேண்டும் என்று நான் கோருவது தகுமா? ஆனாலும், இந்தத் தலம் மேன்மையடைய வேண்டும். திருமொழிகளால் நல் நூல்களை உருவாக்க வைத்த இந்தத் தலம் திருமொழிக்களம் என்றழைக்கப்பட வேண்டும். இங்கே தாங்கள் அர்ச்சாவதாரமாகக் கோயில் கொண்டு, ‘திருமொழிக்களத்தான்’ என்ற திருப்பெயரோடு அருள வேண்டும்’’ என்று நெஞ்சம் பூரிக்கக் கேட்டுக் கொண்டார் முனிவர். பரந்தாமனும் அவ்வாறே அக்கோரிக்கைகளை நிறைவேற்றினார். ஹரித முனிவர் எழுதிய நூல்கள் எல்லாம் தொகுக்கப்பட்டு அந்தத் தொகுதி ‘ஹரித ஸம்ஹிதை’ என்று வழங்கப்பட்டது. இன்றும் அந்த நூல்கள் ஞான விளக்கமாகவே துலங்குகின்றன. ஹரித முனிவர் திருமொழிக்களத்தில் (இப்போது திருமூழிக்களம் என்றழைக்கப்படுகிறது. இத்தலத்தை மங்களாசாசனம் செய்த நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும்கூட திருமூழிக்களம் என்றுதான் இந்தத் தலத்தைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.) தொடர்ந்து பெருமாள் சேவையில் ஈடுபட்டிருந்தார்.

சக்கரவர்த்தி ராமச்சந்திரமூர்த்தி தம் ராஜ்ய பரிபாலனத்தில் மக்களுக்கு ஏதேனும் குறையுண்டோ என்று அறிவதில் ஆர்வம் கொண்டிருந்தார். பரதனையும், லட்சுமணனையும் பல பகுதிகளுக்கும் அனுப்பி வைத்து மக்கள் குறைகளைக் கேட்கச் சொன்னார். அந்த வகையில் சகோதரர்கள் இருவரும் திருமொழிக்களம் வந்தார்கள். முனிவரை சந்தித்தார்கள். லட்சுமணன் அவரிடம், ‘இப்பகுதியில் தங்களுக்கு ஏதேனும் குறை உள்ளதோ?’ என்று கேட்டான். முனிவர் மெல்ல சிரித்தார். ‘உன்னிடமே குறை வைத்துக்கொண்டு என்னிடம் கேட்கிறாயே, முதலில் உன் குறையைத் தீர்த்துக்கொள்’ என்று பதிலளித்தார். திடுக்கிட்டான் லட்சுமணன். ‘என்னிடம் அப்படி என்ன குறை உள்ளது?’ என்று குழப்பத்துடன் கேட்டான். ‘நீ, ராமன்சீதையுடன் சித்ரகூடத்தில் வாழுங்காலத்தில் ராமனின் பாதுகையைப் பெறவந்த பரதனைப் பற்றி மிகவும் தாழ்வாக சிந்தித்தாய், அவனிடம் பெருங்கோபமும் கொண்டாய், ஏன், முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்டாய். ஆனால், உண்மை தெரிந்தபின், ஒதுங்கி நின்றுவிட்டாயே தவிர, பரதனிடம் உன் தவறான நோக்கத்திற்காக மன்னிப்பு கோரவே இல்லை.

உண்மை தெரிந்த பிறகு, உன் தீய செயலுக்காக நீ இன்றுவரை வருத்தம் தெரிவிக்கவில்லை என்பது உன்னிடம் உள்ள குறைதானே!’ என்று கேட்டார் முனிவர். திகைத்தான் லட்சுமணன். உண்மைதான். தவறான விஷயத்துக்காகக் கோபம் கொள்ள உரிமை எடுத்துக்கொண்ட தான், அது உண்மையல்ல என்று தெரிந்த பிறகு வருத்தம் தெரிவிக்காதது எந்த வகையில் நியாயம்? இத்தனை வருடங்கள் ராமனுக்கு நிழலாக வந்த பெருமையெல்லாம் இந்தச் செயலால் கறைபடிந்தது போலாகிவிட்டதே. தன் பெருந்தன்மையற்ற செயலால், அந்த உத்தமனுக்குத் தம்பி என்று சொல்லிக்கொள்ளவே தனக்கு அருகதை இல்லையே! உடனே பக்கத்தில் நின்றிருந்த பரதனின் கால்களில் விழுந்தான் லட்சுமணன். தன் தவறை மன்னிக்குமாறு கேட்டு அழுதான். ஆனால், பரதனோ, ‘இதில் மன்னிப்பு கேட்க எதுவுமே இல்லை, லட்சுமணா. ராமனின் அத்யந்த தம்பி நீதான். ராமனுக்கு எந்தக் குறையுமின்றி, கானகத்திலேயே அவரைக் கண்ணிமைக்காமல் காத்தவன் நீ. ஆகவே சித்ரகூடத்தில் என் மீது நீ கோபம் கொண்டதில் எந்தத் தவறும் இல்லை.

உண்மை தெரிந்த பிறகும், என் மீதான உன் சந்தேகம் நீங்காததற்கு உன்னுடைய சிறப்பான ராமபக்திதான் காரணம். ஆகவே அதற்காக நீ குற்ற உணர்வு கொள்ளாதே. நீ மன்னிப்பு கேட்க வேண்டுமென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை’என்று மிகுந்த பெருந்தன்மையுடன் கூறினான். ஆனாலும், தன் குற்றத்துக்குப் பிராயசித்தம் செய்ய விரும்பிய லட்சுமணன், முனிவர் யோசனைப்படி, தனக்கு ‘ஞானோதயம்’ தந்த அந்தத் தலத்தை, திருமொழிக்களத் தான் கோயிலை, புதுப்பித்து, பெருமாளை வணங்கி, தன் மனக்குறை நீங்கப் பெற்றான். இப்படி லட்சுமணன் புதுப்பித்தத் தலத்தில் உறையும் பெருமாளை அதனாலேயே ‘லட்சுமணப் பெருமாள்’ என்று அழைக்கிறார்கள். ராமாயண சகோதரர்களுக்கு கேரளத்தில் தனித்தனி கோயில் இருந்தாலும், பெருமாள் என்ற பெருமை லட்சுமணனுக்கு மட்டுமே உண்டு. தவறை உணர்வதும் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதுமான மனப்பக்குவத்திற்குதான் எத்தகைய பெரிய வெகுமதி! ஸ்ரீராமனுக்கு திருப்பரையாரிலும், பரதனுக்கு இரிஞாலகுடாவிலும், சத்ருக்னனுக்கு பாயம்மலிலும் தனித்தனி கோயில்கள் விளங்குகின்றன.

ஆனால், திருமொழிக்களத்தில் உறையும் இறைவன் லட்சுமணப் பெருமாள் என்று அழைக்கப்படுவது, இந்த பிற கோயில்களினின்றும் தனிப் பெருமையானது.
ராம சகோதரர்களின் இந்தக் கோயில்களில் உறையும் பெருமாள்கள், ஸ்ரீகிருஷ்ணனால் பூஜிக்கப்பட்டவர்கள். துவாரகை நகரை உருவாக்கி அங்கே வாழ்ந்து வந்தார் கிருஷ்ணன். அப்போது ஏற்பட்ட பிரளயத்தால் துவாரகையை கடல் விழுங்கியது. அதனால் கிருஷ்ணன் வழிபட்ட ராம சகோதரர் விக்ரகங்களும் கடலில் மூழ்கின. பின்னாளில் ஒரு மீனவர் வலையில் சிக்கிய இந்த விக்ரகங்கள் கேரளத்தில் வெவ்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன என்கிறார்கள். கருவறை வெளிப் பிராகாரத்தில் ராமன்சீதைஅனுமன் ஆகியோர் தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள். லட்சமணன் தனியே மூலவராக விளங்குவதால் இந்த சந்நதியில் அவர் இடம் பெறவில்லை போலும்! கணேசன், சிவன்பார்வதி, யக்ஷியம்மன், தர்ம சாஸ்தா, கோகுல கிருஷ்ணன் ஆகியோரும் தனித்தனியே சந்நதி கொண்டு அருட்பாலிக்கிறார்கள். சாலக்குடி ஆறு, கோயிலின் தீர்த்தமாக பெருமையுடன் ஓடுகிறது. கருவறையில் லட்சுமணப் பெருமாள் என்ற திருமூழிக்களத்தான், பேரழகுடன் ஜொலிக்கிறார். இந்தப் பெருமாளை நம்மாழ்வார் ஒளிச்சுடராகவே கண்டு மகிழ்ந்திருக்கிறார்:

திருமேனி அடிகளுக்குத் தீவினையேன் விடுதூதாய்
திருமூழிக்களம் என்னும் செழுநகர் வாய் அனிமுகில் காள் திருமேனி அவர்க்கு அருளீர் என்றக்கால் உம்மைத்தன் திருமேனி ஒளி அகற்றித் தெளிவிசும்பு கடியுமே

என்பது அவரது பாசுரங்களில் ஒன்று. பெருமாளைத் தன் நாயகனாகவே பாவிக்கும் ஒரு கன்னியின் மனதைச் சொல்லும் நெகிழ்ச்சி மிக்கப் பாடல் இது. ‘‘திருமூழிக்களம் என்று அழைக்கப்படும் இந்த திவ்ய தேசத்தில் குளுமையாக சூழ்ந்திருக்கும் மேகங்களே, எனக்காக என் தலைவன் திருமூழிக்களத்தானிடம் தூது செல்லுங்கள். அவனிடம், தன்னுடைய பேரழகான ஒளியை, அவன் பிரிவால் தளர்ந்து வாடியிருக்கும் எனக்கு அவன் அருள வேண்டும் என்று கேளுங்கள். அப்படிக் கேட்டால் உங்களுடைய ஒளியை அழித்து உங்களை வானிலிருந்தே விரட்டி விடுவானோ என்று அஞ்சாதீர்கள். அவன் அப்படியெல்லாம் செய்ய மாட்டான்’ என்று நெக்குருகுகிறார் நம்மாழ்வார். திருமூழிக்களத்தான் பேரொளியோடுதான் திகழ்கிறார்.

நான்கு திருக்கரங்கள். இடது கரம் சங்கு ஏந்தியிருக்க, வலது கரம் பிடித்திருக்கும் சக்கரம் எந்தக் கணமும் பாயத் தயாராக இருக்கும் பிரயோக சக்கரமாக விளங்குகிறது. தன் பக்தனுக்கு ஏதேனும் துயரென்றால் அதை உடனே தீர்த்து வைக்கும் சுறுசுறுப்பை அது உணர்த்துகிறது. கீழ் வலதுகரம் கதையைப் பற்றியிருக்க, கீழ் இடதுகரம் அரவணைக்கும் தோரணையில் அமைந்திருக்கிறது. நம் மன வெளிச்சத்துக்கு இவரது தரிசனம் பெரிதும் உதவுகிறது என்பதை  அனுபவித்தால் தான் தெரியும். ஆலப்புழை எர்ணாகுளம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் உள்ளது திருமூழிக்களம். எர்ணாகுளம்ஆலப்புழை ரயில் பாதையில் அங்கமாலி ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவு.

Tags :
× RELATED காமதகனமூர்த்தி