×

வேண்டும் வரமருளும் வேணுகோபாலன்!

இந்நாளைய செங்கல்பட்டு பகுதி, ஒரு காலத்தில் வடஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களையும், ஆந்திர பிரதேச  தென்பகுதிகளையும் உள்ளடக்கி, விரிந்து பரந்திருந்த பல்லவ பேரரசின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. தொண்டை மண்டலம் என்றும், தொண்டை  நாடு என்றும் அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பு, பின்னாளில் சோழ, பாண்டிய, விஜயநகரப் பேரரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. தொன்மை காலத்திலும்,  இடைக்காலத்திலும் இப்பகுதியில் தோன்றிய கோயில்கள் மக்களின் சமய வாழ்க்கையில் மட்டுமின்றி அவர்களின் பண்பாடு, சமூக பொருளாதாரத் துறைகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளன. செங்கல்பட்டு நகரத்தைச் சுற்றியுள்ள அனேக சிற்றூர்களிலுள்ள கோயில்கள் தற்போது  சிதைந்த நிலையிலுள்ள போதிலும், அவை அக்காலத்தில் செயல் துடிப்புடன் இருந்திருக்கின்றன. கோயில் தினப்படி நிர்வாகத்தில் தங்களை  முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த பெரும்பாலான ஊர் மக்கள் தங்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு இவற்றைத் தேடி பெரிய நகரங்களுக்கு குடிபெயர்ந்ததே கோயில்களின் இச்சீரழிவுக்குக் காரணமாகும்.

எனினும், பெரும்பாலான இக்கிராமங்களில் ஒருசிலர் கோயில்களை புனருத்தாரணம்  செய்யவும், இறைவழிபாடு நடத்தவும், விழாக்கள் எடுக்கவும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உள்ளார்ந்த பொறுப்புடன் முன் வந்துள்ளனர். அவ்வாறான  கிராமங்களில் ஒன்றுதான் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோயில் கொண்டுள்ள களியப்பேட்டை கிராமம் ஆகும். ஸ்ரீநரஸிம்ஹ ஸ்வாமி கோயில்  கொண்டுள்ள புகழ்வாய்ந்த சோழசிங்கபுரத்தைச் (அரக்கோணம் அருகிலுள்ள சோளிங்கர்) சேர்ந்தவரும், ராமானுஜதாசர் என்றும், மஹாசாரியர் என்றும் அழைக்கப்பட்ட வடமொழி பண்டிதருமான சண்டமாருதம் தொட்டையாச்சாரியார் (1509 - 1591) என்ற வைணவ அறிஞரை  கௌரவிக்கும் முறையில் களியப்பேட்டை கிராமம் தொட்டையாச்சார்யபுரம் என்றும் அழைக்கப்பட்டிருந்தது. தொட்டையாச்சார்யஸ்வாமி இயற்றிய  நூல்களில் ஆசார்ய விம்ஸதி, வேதாந்த தேசிக வைபவப்ராகாஸிகா, சததூஷணிவ்யாக்கியா சண்டமாருதம், ஸ்ருதிதாத்பர்ய நிர்ணயம், பாராஸர்ய  விஜயம், ஸ்ரீபாஷ்யோபந்யாஸ வேதாந்த விஜயம் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.

பதினாறாம் நூற்றாண்டில் குறிப்பாக 1543 முதல் 1564  வரை விஜயநகர பேரரசினை தலைமையேற்று ஆட்சி செய்த சதாசிவராயர் (கிருஷ்ணதேவராயரின் சகோதரி மகன்) மற்றும் ராமராயர்  (கிருஷ்ணதேவராயரின் மருமகன்) காலம், வைஷ்ணவம் மறுமலர்ச்சி பெற்ற காலகட்டமாகும். இந்த காலத்தில் வைணவக் கோயில்களுக்கு  நன்கொடைகள் பெருகியதோடன்றி வைணவச் சான்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ப்ரப்பனாம்ருதம் என்ற புகழ்மிக்க ஸ்ரீவைஷ்ணவ  படைப்பின்படி, இந்த காலகட்டத்தில் தொட்டையாச்சாரியார் சித்திரகூடத்தில் (சிதம்பரம்) அத்வைத பண்டிதர்களை வாதில் தோல்வியுறச் செய்து, தாதாசார்யர் (பஞ்சமத பஞ்ஜனம் ஆசிரியர்) மற்றும் ராமராயப் பேரரசரின் துணை கொண்டு கோவிந்தராஜப் பெருமாள் வழிபாட்டினை மீண்டும் அங்கே  நிலைநிறுத்த உதவினார். வரலாற்றுச் செய்தியின்படி, தொட்டையாச்சாரியார் சிதம்பரத்திற்கு அழைக்கப்பட்ட போது அவர் சோளிங்கரிலிருந்து செங்கல்பட்டு வழியாகப் பயணித்தார்.

அப்போது தொட்டையாச்சாரியாரின் சீடனும் அப்பகுதியின் அரசனுமான ரங்கநாதன் என்பவர் ஏதோ காரணமாகத்  தம் குருவை கௌரவிக்க வரவில்லை. சிறிது காலம் கடந்து ரங்கநாதன் தன் தவறினை உணர்ந்து, குருவிடம் மன்னிப்பு கோரியதோடு,  அப்பேரரறிஞரின் பெயரால் ‘‘தொட்டையாச்சாரியார் அக்ரஹாரம்’’ என்ற சிற்றூரை பாலாற்றின் (க்ஷீரநதி) மேற்குக் கரையில் நிறுவினார். மேலும்  அவ்விடத்தில் ஷிக்ஷீவீலக்ஷ்மி நாராயணப் பெருமாளுக்கென்று ஒரு கோயில் கட்டவும், அதனைச் சுற்றித் தெருக்கள் அமைக்கவும், நூறு வீடுகள் கட்டி  அவற்றில் வைஷ்ணவர்களைக் குடியிருக்கச் செய்யவும் ஆணை பிறப்பித்தார் ராமானுஜர். மணவாளமாமுனிகள் உத்ஸவ விக்கிரகங்களை கோயிலுக்கு  நன்கொடையாக அளித்ததோடு நித்யோத்ஸவ, பக்ஷோத்ஸவ, மாஸோத்ஸவ, மஹா உத்ஸவ கொண்டாட்டங்களுக்கும்,

கோயிலில் விளக்கேற்றவும், கடவுளர்களுக்கு நீராட்டவும், பூமாலை சூட்டவும், வேதபாராயணம், திவ்யபிரபந்த அனுசந்தானம் ஆகியவை குறைவின்றி  நடைபெறவும் ஏற்பாடுகள் செய்ததோடு, ஓர் அழகிய நந்தவனத்தையும் கோயிலுக்கு அர்பணித்தார். அதனால் பல பண்டிதர்கள் மற்றும் வைணவத்  துறவிகள் அக்கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். களியப்பேட்டை ஸ்ரீலக்ஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோயில், 500 ஆண்டுகள் பழமை  வாய்ந்ததாகும். தூண்களோடு கூடிய திறந்த தாழ்வாரம் இக்கோயிலின் நுழைவாயிலாக உள்ளது. கோயிலின் உள்ளே மஹாமண்டபம், கர்ப்பக்கிரகங்கள்  உள்ளன. ஸ்ரீலக்ஷ்மி நாராயணப்பெருமாள் சந்நதி பிரதான கர்ப்பக்கிரஹம் ஆகும். லக்ஷ்மி தேவியைத் தன் இடது மடியின் மேல் அமர்த்திக் கொண்டு  அமர்ந்த திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். இப்பெருமான் தனது மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டும்,  கீழ் இடது திருக்கரத்தால் லக்ஷ்மி பிராட்டியை அணைத்துக் கொண்டும், கீழ் வலது திருக்கரத்தால் அபய ஹஸ்த கோலத்தைக் காட்டியபடியும்  காட்சியளிக்கிறார்.

இக்கோயிலின் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீகார்வானத்துள்ளான் ஆவர். இத்திருநாமம் காஞ்சி திவ்யதேசத்திலுள்ள உலகளந்த பெருமாள்  திருக்கோயில் வளாகத்தில் மூன்றாம் திருச்சுற்றில் அமைந்துள்ள கார்வானத்துள்ளான் என்ற எம்பெருமானை நினைவுக்குக் கொண்டு வரும்.  களியப்பேட்டையில் கோயில் கொண்டுள்ள கார்வானத்துள்ளான் தனது மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டு, கீழ் வலது  திருக்கரத்தை அபய ஹஸ்தமாகவும் கீழ் இடது திருக்கரத்தில் கதாயுதத்தை தாங்கிக் கொண்டும் நின்றகோலத்தில் காணப்படுகிறார். பிரதான  கர்ப்பக்கிரஹத்தை ஒட்டி இருபுறமும் தாயார், ஆண்டாள் சந்நதிகள் அமைந்துள்ளன. செண்பகவல்லித் தாயார் என்பது தாயாரின் திருநாமமாகும்.  இக்கோயிலிலுள்ள இதர உத்ஸவமூர்த்திகள் ஸ்ரீசுதர்ஸனர், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் மணவாளமாமுனிகள்  ஆவர். இங்குள்ள கலியனின் ஒப்பற்ற சிலா வடிவம் அவ்வாழ்வாரின் அவதார ஸ்தலமாகிய திருவாலி திருநகரியிலுள்ள அவரது திருவடிவம்  போன்றே சிறிய வடிவில் உள்ளது.

ருக்மிணி-சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி என்று இங்குள்ள கிருஷ்ண விக்ரஹம் போற்றப்படுகிறது. தம் இரு கரங்களால்  புல்லாங்குழலை ஏந்திய இரு கை உருவமாகவே பெரும்பாலும் வேணுகோபாலன் காணப்படுவார். ஆனால் இக்கோயிலில் ஸ்ரீகிருஷ்ணன் நான்கு  திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் கொண்டும், கீழ் இருக்கரங்களால் புல்லாங்குழலை பற்றிக்  கொண்டும் சேவை சாதிக்கிறார். இது விஜயநகர ஆட்சிக்காலத்து வேணுகோபால வடிவங்களின் குறிப்பிடத்தக்க மாதிரி உருவம் எனலாம். நிற்கும்  நிலையிலுள்ள பெரும்பாலான மற்ற தெய்வ வடிவங்களின் அமைப்பில் இரண்டு வளைவுகள் (த்விபங்கம்) அல்லது மூன்று (த்ரிபங்கம்) வளைவுகளே  காணப்படும். மாறாக, இந்த மனங்கவரும் தெய்வச்சிலை ஐந்து (பஞ்சபங்கம்) வளைவுகளைக் கொண்டுள்ளது என்பது அரிய சிறப்பாகும். இந்த  கவர்ச்சிமிக்க வேணுகோபாலனைக் காணும் பக்தரின் கண்கள் அவ்வுருவத்தினின்று விடுபடுவது இயலாததொன்று. இந்த விக்கிரகத்தை வடித்த, பெயர்  தெரியாத திறமைமிக்க அந்த சிற்பி யார் என்று வியக்க வைக்கும்.

1928ம் ஆண்டு ஸ்ரீலக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. அத்தருணத்தில் காஞ்சியிலிருந்து ஸ்ரீயதோக்தகாரி  (சொன்னவண்ணம் செய்த பெருமாள்) ஊர்வலமாக இங்கே எழுந்தருளினார். 1983ம் ஆண்டுவரை இக்கோயிலில் எல்லா வைபவங்களும் ஆகம விதிப்படி  தடங்கலின்றி சிறப்பாக நடைபெற்று வந்தன. குறிப்பாக ஸ்ரீராமானுஜரது (ஸ்ரீபாஷ்யகாரர்) பத்து நாள் உற்சவம் ஸ்ரீபெரும்புத்தூரில் நடைபெறுவது  போலவே மிகுந்த பொருட்செலவில் இங்கு நடத்தப்பட்டு வந்தது. துரதிருஷ்டவசமாக 1983க்குப் பின் இவை அனைத்தும் படிப்படியாக நின்று போயின.  பல ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2013ல் மஹா ஸம்ப்ரோஷணம் சிறப்பாக நடைபெற்று திருக்கோயில் பூரண பொலிவுடன்  திகழ்கிறது. களியப்பேட்டை, செங்கல்பட்டு நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் 4 கி.மீ. பயணித்து  பழத்தோட்டம் அருகே இடதுபுறம் திரும்ப வேண்டும். பின் பாலாற்றைக் கடந்து ஓரக்காட்டுப் பேட்டை வழியாக 3 கி.மீ. தூரம் செல்ல வேண்டும்.  உள்ளூர்வாசிகள் இக்கிராமத்தை அறிந்துள்ளதால், பக்தர்கள் இவ்வூரை அடைவது எளிது.

- எம்.என். ஸ்ரீநிவாசன்

Tags :
× RELATED சுந்தர வேடம்