×

துறவறம் எனும் மரணம்!

ஞானியர் தரிசனம் - 17

அது கி.பி. 1586ம் வருடம். காஞ்சியில் ஸ்ரீமத் விஸ்வாதிக ஆத்ம போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் எதிரே ஒரு தம்பதி கைகூப்பி கண்களில் நீர் வழிய நின்றனர். ‘‘என்ன வேண்டும் உங்களுக்கு’’ அன்பொழுக கேட்டார். ‘‘என் பெயர் கேசவ பாண்டுரங்கன். இவள் என் பத்தினி. இவளின் பெயர் சுகுணா. பல வருடங்களாக  எங்களுக்கு குழந்தைப்பேறு இல்லை. எல்லோரும் எங்களை ஏதோ விசித்திரமாகப் பார்க்கிறார்கள்.  வெகு வருடங்களாக எங்களுக்கு குழந்தையே இல்லை.  தாங்கள்தான் அருள்புரிந்திட வேண்டும்’’ என்று கண்களில் நீர் பொங்க நின்றனர். ஸ்ரீமத் விஸ்வாதிக ஆத்ம போதேந்திரர் அந்த தம்பதியரை கருணையோடு  பார்த்தார். ‘‘உங்களுக்கேன் அந்தக் கவலை. உங்களுக்குள் நான் அந்த ஆண் குழந்தையை பார்க்கிறேனே. கவலைப்படாது போங்கள்’’ என்று கனிந்த பழத்தை  அளித்தார். தம்பதியருக்குள் பெரும் உற்சாகமும் நம்பிக்கையும் தளும்பி நின்றது. குருவின் வாக்கு நடந்தே தீருமென்று தீர்மானம் உதயமாயிற்று. இனி  நமக்கென்ன கவலை என மெல்லிய இறகுபோல மனதை மாற்றிக் கொண்டார்கள்.

குருவருளால் அழகான ஆண் குழந்தை பிறந்தது. புருஷோத்தமன் என்று திருநாமம் சூட்டினர். பிறந்ததிலிருந்தே குழந்தையின் முகத்தில் தேஜஸ் பொலிந்திருந்தது.  கண்கள் அதி கூர்மையாயிருந்தன. அகவை ஆறு முடிந்ததும் குழந்தைக்கு உபநயனம் செய்தனர். உபநயனத்தின் தாத்பரியமான குருவருகே ஒரு ஜீவனை நகர்த்திச்  செல்லல்தான். அதையே கேசவ பாண்டுரங்கரும் செய்தார். குழந்தை குருவைக் கண்டதும் கைகூப்பியது. நிலம்பட விழுந்து வணங்கியது. முன்னரே கண்டதுபோல  அருகே நகர்ந்து சென்று வாய்பொத்தி நின்றது. கேசவ பாண்டுரங்கர் வியந்தார். ஆத்ம போதேந்திரர் கேசவ பாண்டுரங்கரை நோக்கி, ‘‘இக்குழந்தை யார்’’  என்றார். கேசவர் விழித்தார். இவர் அருளால் பிறந்த குழந்தையைப்போய் யார் என்கிறாரே என்று குழம்பினார். ‘‘என் மகன்’’ என்றார். ‘‘அப்படியா... அது  எனக்குத்தான் தெரியுமே. சரியாகச் சொல்.’’‘‘குருநாதா... அவன் உங்கள் அருளால் உதித்தவன். நாங்கள் வெறும் கருவி மட்டுமே’.’‘‘அவ்வளவுதானா...’’‘‘இது குருநாதரின் குழந்தை’’ கேசவ பாண்டுரங்கர் மின்னலாக பதிலுரைத்தார்.

‘‘மிகச் சரியாகச் சொன்னாய். அப்போது குழந்தையை மடத்திற்கு கொடுத்துவிடேன்’’ குரு அருளாணையிட்டார். கேசவருக்கு ஒரு கணம் உடம்பு நடுங்கிற்று.  நாக்கு தடித்து சொல்லெழாது தவித்தது. வாய்பொத்தி கண்களில் நீர் கசிய, ‘‘நான் இப்போதே பதிலுரைக்க முடியாத நிலையிலிருக்கிறேன் குருநாதா. நீங்கள்  தீர்மானித்ததுதான் என்றாலும் இதுதான் நிகழப் போகிறதென்றாலும் என் பத்தினியிடத்தில் கேட்டுச் சொல்லலாமா.’’கேசவ பாண்டுரங்கன் மனைவியிடம்  குருநாதரை தரிசித்து அவரோடு உரையாடியதைக் விளக்கினார். சட்டென்று அவரது பத்தினியான சுகுணா வெடித்து அழத் தொடங்கினாள். கேசவர் பயந்தார்.  குருநாதரின் ஆசை நிறைவேறாது போலிருக்கிறதே என்று தவித்தார். ‘‘குழந்தையும் நானும் உங்களுக்கே உரியவர்கள். இதில் என்னோடு கலந்தாலோசித்து  சொல்கிறேன் என்று குருநாதரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை.’’கேசவ பாண்டுரங்கரின் அகம் தெளிவாயிற்று. தன்னுடைய பத்தினியின் மீது  மரியாதையும் மிகுந்தது. குருவருளால் கிட்டிய குழந்தை இது.

அதுமட்டுமல்லாது குருவாகவே வந்தமர்ந்து நானிலமும் அருள் பெருக்கும் ஜீவனல்லவா.... இது என்னுடையது என்று எப்படி சொந்தம் கொண்டாட முடியும்.  அவருக்குள் யாரோ துடைத்து விட்டது போலிருந்தது. புருஷோத்தமன் என்கிற அந்த பாலகனை அந்த தம்பதியர் கொண்டுவந்து குருநாதரின் திருவடி  நிழலில் விட்டுவிட்டுப் போயினர். புருஷோத்தமனும் அவனுடைய நண்பனான ஞானசேகரனும் பதினெட்டு வயதுக்குள் வேத வேதாந்தங்களை கற்றனர். பிரம்ம  வித்யை மட்டும் விட்டு வைத்தனர், ஏனெனில், அது குருநாதருக்கு அருகே அமர்ந்து மிகக் கவனமாக பாடம் செய்ய வேண்டும். ஆத்ம போதேந்திரரும் சரியான  காலத்தில் யான் பிரம்ம வித்யையை போதிப்போம் என்றார். ஆத்ம போதேந்திரர் காசிக்கு யாத்திரையாகச் சென்றார். கங்கைக் கரையில் அமர்ந்து தவம் புரிந்து  விஸ்வநாதரை தரிசித்தபடி ஆனந்தமாக இருந்தார். புருஷோத்தமனும், ஞானசேகரனும் குருநாதரை பார்க்கப் புறப்பட்டனர். ஞானசேகரன் ஜோதிடத்தில் பெரும்  பாண்டித்யம் உள்ளவன்.

அதில் மரணத்தின் சூட்சுமங்களை சொல்லும் பாடங்களையும் நன்கு படித்தபடி இருந்தான். அந்த பாடமே அவனின் மரணமும் அருகே வருவதை உணர்த்தியது.  இதை புருஷோத்தமனிடம் கூறினான். இருவரில் யார் இறப்பினும் அவருக்கு கங்கையில் இறுதிச் சடங்குகள் செய்து பின்பு தானும் உயிரை மாய்த்துக் கொள்ள  வேண்டுமென்று தீர்மானித்தனர். ஞானசேகரன் செல்லும் வழியிலேயே நோய்வாய்ப்பட்டான். காசியை நோக்கி புருஷோத்தமன் நடந்தான். இறுதிச் சடங்குகளை  முடித்துவிட்டு கங்கையில் கரைந்துபோக வேகமானான். குருநாதரிடம் வந்து ஞானசேகரனின் மரணத்தைச்  சொன்னான். ‘‘ஏனப்பா... இன்னும் மௌனமாக இருக்கிறாய்’’ குருநாதர் வினவினார். ‘‘இல்லை குருநாதா... என் நண்பனுக்கு கொடுத்த வாக்கின்படி நான் கங்கையில் இறங்கி இறக்க வேண்டும்.’’குருநாதர் உற்றுப் பார்த்தார். அவன் உள்ளத்தில் பற்றேயில்லாது துறவியைப்போல இருந்தான். கண்களில் ஒரு தேடலும், முதிர்ச்சியும், உலகத்தையும் ஏன் தன்  உடலையுமே உதாசீனமாக பார்க்கும் பக்குவத்திலிருந்தான். குருவின் முகம் மலர்ந்தது. இவனல்லவோ எனக்குப் பிறகு காமகோடி பீடத்தின் பட்டத்தை  அலங்கரிப்பவன் என்று கருணையோடு புருஷோத்தமனைப் பார்த்தார்.

‘‘நீ இறப்பது என்று சொல்கிறாய் அல்லவா. அது உடலைத் துறப்பது மட்டுமல்ல. உன் உள்ளத்தை, இதுநாள் வரையிலான உன் பெயரை, பிம்பத்தை,  நினைவுகளை, பெற்றோரை.... அதனால் மரணம் உனக்கு இப்படி வரட்டும். துறவறமே பெரும் இறப்புதான். எல்லாவற்றையும் உடலோடு இருக்கும்போதே  மனதைப்பற்றியிருக்கும் உடலையும் உடலை பற்றியிருக்கும் மனதையும் விடுவதுதான். அதனால் சந்நியாசம் எடுத்துக் கொள். நீயும் உன் நண்பனின்  வாக்கியத்தை காப்பாற்றியவனாவாய். எனக்கும் என் எண்ணமும் ஈடேறும்’’ என்று சொன்னதும் புருஷோத்தமன் குருவின் வாக்கிற்கு கட்டுப்பட்டார். தங்களின்  கட்டளை என்று ஆத்ம போதேந்திரரின் திருவடியில் விழுந்து வணங்கினார். அவரின் திருவடி ஸ்பரிசத்தோடு சந்நியாசத்தையும் ஏற்று எழும்போது புருஷோத்தமன்  இறந்தான். ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்கிற ஞானியாக மேலெழுந்தார். குருநாதருக்கு இவர் செய்ய வேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்று  அருகே அழைத்து பேசத் தொடங்கினார்.

கிருஷ்ணா

 (ஞானியர் தரிசனம் தொடரும்)

Tags :
× RELATED சுந்தர வேடம்