×

நிபா வைரசும், பஞ்சாங்க எச்சரிக்கையும்!

ஜோதிடம் என்கிற மருத்துவம் - 44

பஞ்சாங்கத்தில், விளம்பி வருடத்திற்குரிய வெண்பாவில் ‘நேவான் மெலிவரே நோக்கரிதாகுங் கொடுமை ஆவா புகலரி தாம்’ என்று சொல்லியிருந்த படியே நடந்திருக்கிறது., பொதுமக்களை பலவிதமான நோய்கள் தாக்கும், இதனால் மக்கள் பலிகள் நிகழும் என்று பஞ்சாங்கம் எச்சரித்த வண்ணம் தற்போது நிபா வைரஸ் தாக்கி கேரளாவில் பத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்ற தகவல் பரவியது. கோடை விடுமுறைக்காக கேரளாவிற்கு சுற்றுலா சென்றவர்கள் நிபா வைரஸ் குறித்த பீதியினால் பாதியிலேயே திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார்கள். ‘பஞ்சாங்கம் வருடத்தின் துவக்கத்திலேயே சொல்லிவிட்டது,’ என்று பல ஜோதிடர்களும், ‘நாங்கள் அப்போதே சொன்னோம்,’ என்று பல சாமியார்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை என்ற மனநிலையில் பொதுமக்கள் தவிப்பதையும் காண முடிகிறது. உண்மையில் என்னதான் நடக்கிறது?

மரணத்தை உண்டாக்கும் நிபா வைரஸ், பழங்கள் மூலமாகப் பரவுகிறது, அதனால் கேரளாவில், நறுக்கி வைத்து விற்கப்படும் பழங்களை சாப்பிடாதீர்கள் என்று முதல் எச்சரிக்கை வந்தது. கேரளாவில் மட்டுமல்ல, வேறு எங்குமே நறுக்கி வைத்து விற்கும் பழங்களை சாப்பிடக்கூடாது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. நாம் எப்போது பழத்தை சாப்பிடப் போகிறோமோ, அப்போதுதான் நறுக்க வேண்டும். முதலிலேயே நறுக்கி வைப்பதால் காற்றில் உள்ள கிருமிகள் அதன்மீது அமரத்தான் செய்யும். இது பழங்களுக்கு மட்டுமல்ல, வெளியில் வைத்து விற்கப்படுகின்ற எல்லா உணவுப் பொருட்களுக்கும் பொருந்தும். மனிதனைப் போலவே, மிருகங்களுக்கும், பறவைகளுக்கும், ஏன் காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும்கூட, கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இறைவனால் படைக்கப்பட்டதே மேற்தோல்.

மனிதனுக்கு மேற்தோலில் காயம் ஏற்பட்டால் அந்த காயத்தின் மீது பாக்டீரியாக்கள் அமர்ந்து நோய் உண்டாக்கக் கூடும் என்பது தெரிந்ததே. அந்த பாக்டீரியாக்களிடம் இருந்து நம்மைக் காத்துக் கொள்வதற்காகத்தான் காயத்தின் மேல் மருந்து போடுகிறோம். இதே விதி பழங்களுக்கும் பொருந்தும்.
பலாபழத்தின் மேற்தோல் எத்தனை வலிமையானதாகப் படைக்கப்பட்டிருக்கிறது! அதனை வெட்டி சுளைகளைப் பிரித்து எடுத்தவுடன் சாப்பிட்டுவிட வேண்டும். அவ்வாறின்றி நீண்ட நேரம் சுளைகளை வெளியில் வைத்திருப்பதால் கிருமிகள் வந்து ஒட்டிக் கொள்ளத்தான் செய்யும். நறுக்கி வைத்த பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வந்து தாக்கும் என்ற விதி எல்லா சூழலுக்கும் பொருந்தும். பழங்களின் மூலம் நிபா வைரஸ் பரவுகிறது என்று ஒருசாரார் சொல்லும்போது மற்றொரு சாரார் இது கால்நடைகளின் மூலமாக பரவுகிறது, கால்நடைகளிடம் நெருங்கிப் பழகாதீர்கள் என்ற ஓர் எச்சரிக்கையை சமூக வலைதளங்களில் பரவவிட்டனர்.

நிபா வைரஸ் மட்டுமல்ல, எந்த வைரஸ் கிருமியும் முதலில் தனது தாக்கத்தை மிருகங்களின் மீதிருந்தது தான் தொடங்கும். இது காலம் காலமாக நாம் கண்டு வருகின்ற உண்மை. எலி ஜுரம், பன்றிக் காய்ச்சல், பூனைசொறி என்று ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மிருகத்தின் பெயரைச் சொல்லி, அந்த மிருகத்திடமிருந்து இந்த வைரஸ்கள் பரவுகின்றன என்று ஒரு விளக்கத்தினைச் சொல்வார்கள். அதனை மறுப்பதற்கில்லை. உலகத்தின் மூலையில் ஏதோ ஒரு பசுமாட்டிடமிருந்தோ அல்லது ஏதோ ஒரு பிராணியிடமிருந்தோ ஒரு கிருமி பரவத் தொடங்கியுள்ளது என்பதற்காக உலகத்தில் உள்ள எல்லா பசுமாடுகளையும் புறக்கணிக்க முடியுமா? கால்நடைகளிடம் இருந்து விலகியே இருங்கள் என்று சொல்வது எத்தனை அபத்தமானது! வீட்டில் வளர்க்கும் கால்நடைகளைப் பேணிக் காக்க வேண்டியது நம் கடமையல்லவா?

பழங்கள் என்று ஆரம்பித்து, கால்நடைகள் என்று போய், கடைசியில் வௌவால்களால் நிபா வைரஸ் பரவுகிறது என்ற தகவலையும் பரவவிட்டிருக்கிறார்கள். வௌவால்கள் என்றாலே நம் மனதிற்குள் ஒருவித பீதியுணர்வு தன்னால் வந்து சேரும். வௌவால்கள் கெடுதியைச் செய்யும் என்ற கூற்று உண்மையானதா என்பதை சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள். நம்மில் பலரும் வௌவால்களை கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில்தான் கண்டிருப்போம். கெடுதல் செய்யக் கூடிய ஒரு உயிரினத்தை ஆண்டவன் தன் இருப்பிடத்தில் வசிக்க அனுமதிப்பானா? உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் அனைத்தும் மனிதனுக்கு உதவி செய்வதற்காகத்தானே அன்றி, உபத்திரவம் செய்வதற்காக அல்ல. அனைத்து ஜீவராசிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைப்படி செயல்படுகின்றன. மனிதர்களாகிய நாம்தான் நமக்கு உரிய விதிமுறைகளைத் துறந்து போலியானவற்றை நம்பி ஏமாறுகிறோம். நடத்தை விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு துன்பத்தினைத் தேடிப் பெறுகிறோம்.

சரி, பஞ்சாங்கத்தில் சொல்லியுள்ளபடிதான் நிபா வைரஸ் தற்போது தாக்கியுள்ளதா? இல்லை. பொதுமக்களை பலவிதமான நோய்கள் தாக்கும், இதனால் மக்கள் உடல் மெலிந்து உயிர் பலிகள் நிகழும் என்றுதான் அந்த வெண்பாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தாக்கி இறந்தவர்கள் யாரும் உடல் மெலிந்து இறக்கவில்லை. பலவிதமான நோய்களும் தாக்கவில்லை. வருடாவருடம் வருகின்ற ஏதோ ஒரு நோயைப்போல இந்த வருடத்தில் நிபா வைரசின் பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். சிக்குன் குன்யா, டெங்கு வரிசையில் நிபாவின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது, அவ்வளவுதான். விளம்பி வருட பொதுவான வெண்பாவின் கருத்து நம்மை எச்சரிக்கை செய்வதற்காகத்தானே அன்றி அதையே நினைத்து அச்சப்பட்டுக் கொண்டிருப்பதற்காக அல்ல. உண்மையில் இந்த வருடத்தின் கிரஹ நிலை மோசமாக இல்லை. தற்போது நிபா வைரஸ் தாக்கியிருக்கும் கடந்த மாதத்தினுடைய கிரஹ நிலையும் அத்தனை மோசமாக இல்லை.

தீய கிரஹங்கள் என்று பொதுவாக சொல்லப்படுகின்ற சூரியன், செவ்வாய், சனி கோள்களாலும் நமக்குப் பல நன்மைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. சூரியனால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி நாம் ஒவ்வொரு இதழிலும் தொடர்ந்து கண்டு வருகிறோம். செவ்வாயின் தாக்கத்தினால்தான் நாம் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெறமுடியும். ரத்தத்தில் கிருமிகள் எதுவும் தொற்றாமல் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருபவர் செவ்வாய். ஜாதகத்தில் செவ்வாயின் பலத்தை உடையவர்கள் நிபா உள்ளிட்ட எந்த கிருமிக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. ஜாதகத்தில் செவ்வாய் நீசம் அடையப் பெற்றவர்களை பாக்டீரியாக்களும், வைரசுகளும் எளிதில் தாக்கும். மிளகு மற்றும் இஞ்சி, சுக்கு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற இயலும். செவ்வாய் கிரஹத்திற்கு உரிய பரிகாரமாக முருகன் கோவிலில் உப்பையும், மிளகையும் பக்தர்கள் காணிக்கையாகத் தருவதன் காரணமும் இதுவே.

ரத்தச் சுத்திகரிப்பு மட்டுமின்றி எலும்புகளில் வலிமையைச் சேர்க்கும் பணியையும் செவ்வாய் கிரஹமே செய்கிறது. ஜென்ம லக்னத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கும் ஜாதகர்களை செவ்வாய் தோஷம் உடையவர்கள் என்று கருதாமல், அவர்கள் உடல் வலிமை பெற்று ஆரோக்கியமாக வாழ்பவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். செவ்வாய் நீச பலம் பெறும் கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. மூன்றாம் வீட்டில் செவ்வாயின் அமர்வினைப் பெற்றவர்கள் தோள்வலிமை உடையவர்களாக இருப்பார்கள். உடம்பின் மேற்தோல்தான் நம்மைக் கிருமிகளிடம் இருந்து காக்கிறது என்பதைக் கண்டோம். இந்த மேற்தோலின்மேல் தன் ஆதிக்கத்தைச் செலுத்துபவர் சனி. சனி என்றதும் அது ஒரு கெட்ட கிரஹம் என்றுதான் நம்மில் பலரும் நினைக்கிறோம். உண்மையில் சனியின் ஆதிக்கத்தைப் பெற்றவர்களை அத்தனை எளிதாக நோய்கள் தாக்காது.

சனியின் பலத்தை உடையவர்களின் உடம்பில் மேற்தோல் வலிமை கொண்டதாக இருக்கும். இவர்களை எந்த தொற்றுநோயும் அத்தனை எளிதாக அண்டாது. தீய கிரஹங்கள் என்று கருதப்படும் சூரியன், செவ்வாய் மற்றும் சனி ஆகியோரே நம்மை தொற்றுநோயில் இருந்து காக்கும் வலிமையைப் பெற்றவர்கள். நிபா வைரஸ் தாக்கியிருப்பதாக சொல்லப்படுகின்ற காலத்தில் இந்த மூன்று கிரஹங்களுமே வலிமையாகத்தான் அமர்ந்திருக்கின்றன. இந்த கிரஹங்களின் துணையோடு வெகுவிரைவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு, அதனால் உண்டாகின்ற உயிரிழப்பு முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுவிடும். மருத்துவ ஜோதிடர்களின் கூற்றின்படி நிபா வைரஸ் என்ற பெயரைக் கேட்டு பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்பதை நாம் புரிந்து கொள்வோம். பொதுவாக அச்சம் என்பதே ஆரோக்கியத்தின் முதல் எதிரி. இந்த அச்சத்தைப் போக்கவல்லவர்கள் சூரியனும், செவ்வாயும். சனி எதையும் தாங்குகின்ற மனப்பக்குவத்தைத் தருவார். தீய கிரஹங்கள் என்று எண்ணாமல் சூரியன், செவ்வாய், சனி ஆகியோரை வணங்குவோம். அச்சம் தவிர்ப்போம். ஆரோக்கியத்துடன் வாழ்வோம்.

திருக்கோவிலூர் கே.பி. ஹரிபிரசாத் சர்மா

Tags :
× RELATED திருப்பம் தரும் திருப்புகழ்