×

திருப்பங்கள் தரும் தில்லைக் கூத்தன்

ஆனி உத்திரம்: 20.6.18

தில்லைச் சிற்றம்பலமான சிற்சபைக்குள் இருக்கும் பிரணவ வடிவான பஞ்சாசன பீடத்தில் நடராஜப் பெருமான் முதன்மை மூர்த்தியாக விளங்குகின்றார். அவரது  இடப்பாகத்தில் அவருடைய ஆட்டத்தை வைத்த கண் வாங்காது பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பவளாகச் சிவகாமசுந்தரி எழுந்தருளியுள்ளார். நடராஜருக்கு  வலப்புறம் பின்புறச் சுவரில் சிதம்பர ரகசிய ஸ்தானம் உள்ளது. ரகசியத்திற்கு நேரே மேடையில் ஒரு முகலிங்கம் உள்ளது. நடராஜரின் பீடத்தில் இரண்டு சிறிய  பெட்டகங்கள் உள்ளன. ஒன்றில் மாணிக்கக்கூத்தரான ரத்தின சபாபதியும், மற்றதில் அபிஷேக விடங்கரான அழகிய திருச்சிற்றம்பலமுடையாரும்  எழுந்தருளியுள்ளனர். சபையின் உள்ளே நடராஜப் பெருமானுக்குக் கிழக்கில் சுவற்றோரம் தெற்கு வடக்காக ஒரு மேடை உள்ளது. அதில் வைரவ மூர்த்தியும்,  நித்தியோற்சவரான ஸ்ரீபலி நாயகரான சந்திரசேகரரும் உள்ளனர்.நடராஜர் சந்நதியில் பாவை விளக்குகளும் தூங்கா விளக்குகளும் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றன.
 
அழகிய திருச்சிற்றம்பலமுடையார் தில்லைச் சிற்றம்பலவாணருக்குரிய அபிஷேக விடங்கராக இருக்கும் ஸ்படிக லிங்க மூர்த்திக்கு அழகிய திருச்சிற்றம்பலம்  உடையார் என்பது பெயர். நாள்தோறும் கனகசபையில் அமைந்துள்ள வெள்ளியாலான வேதிகையில் வைத்து, ஆறு காலத்திலும் இவருக்கு சிறப்பான  அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பூஜையில் அன்னாபிஷேகமும் செய்யப்படுகின்றது. அபிஷேகம் முடிந்ததும் தங்கக் கவசம் சாத்தி, பெட்டகத்தில் வைத்து  நடராஜர் எழுந்தருளியுள்ள பிரணவ பீடத்தில் வைக்கின்றனர். தீக்ஷிதர்கள் தமக்கு ஆத்மார்த்த மூர்த்தியை அருளும்படி வேண்டியபோது நடராஜப் பெருமான் தமது  சடா மண்டலத்துள் இருக்கும் பிறைச் சந்திரனில் துளிர்க்கும் அமுதத்துளிகளையும், கங்கை நீரையும் திரட்டி லிங்கமாக்கி அவர்களுக்கு அளித்தார். தீக்ஷிதர்கள்  அனைவருக்கும் பொதுவான ஆத்மார்த்த மூர்த்தியாக இந்த உடையவர் விளங்குகிறார். (ஸ்ரீமத் ஆதி சங்கராச்சாரியார் சிதம்பரத்தில் நிறுவிய முத்தி லிங்கம்  இதுவன்று)

மாணிக்க கூத்தரான ரத்தினசபேசர்

ஆதியில் தில்லைச் சிற்றம்பலம் வெளிப்படுவதற்கு முன்பாக ஆலமரத்தின் கீழிருந்த மூலட்டானரையும், ரகசிய ஸ்தானத்தையும் தில்லை மூவாயிரவர்கள்  பூஜித்து வந்தனர். ஒரு சமயம் அவர்கள் பிரம்மதேவனின் வேண்டுகோளை ஏற்று, அவனது யாகத்தை நடத்தித்தர சரஸ்வதி நதிக்கரையிலுள்ள அந்தர்வேதிக்குச்  சென்றனர். நாள்தோறும் நடராஜரைப் பூஜித்த பின்னரே உணவு உண்ணும் வழக்கமுடையவர்கள், ஆதலால் உணவு அருந்தாமல் இருந்தனர். அவர்கள் பூஜிக்கும்  பொருட்டு நடராஜர் வேள்வித் தீயின் மத்தியில் இருந்து தோன்றினார். நெருப்பின் நடுவே மாணிக்கச் ஜோதியோடு தோன்றியதால் அவரை மாணிக்கக்கூத்தர்  என்கின்றனர். திருமூலர் மாணிக்கக்கூத்தனை மன்னு தில்லைக் கூத்தனை ஆனிப்பொன் கூத்தனை, அம்பலக்கூத்தனென்று பாடுகிறார்.

தில்லைச் சிற்றம்பலத்துள் நடராஜர் எழுந்தருளியுள்ள பிரணவ பீடத்தில் அழகிய பெட்டகத்துள், தேன் வண்ணத்தில் (கருஞ்சிவப்பு) சிறிய திருமேனியாக ரத்தின  சபேசர் திருவுருவம் உள்ளது. இவரை ரத்தின சபாபதி என்றழைக்கின்றனர். இவர் மாணிக்கத்தால் ஆன வடிவம் என்பதால் மாணிக்கக்கூத்தர் என்றும்  அழைக்கப்படுகிறார். இந்த நடராஜர் ஐந்தடுக்கு பீடத்தில் பிரபா மண்டலத்துடன் விளங்குகிறார். பீடத்திற்கும் பிரபா மண்டலத்திற்குத் தங்கத்தால் கவசம்  அணிவித்துள்ளனர்.தினமும் காலையில் நடைபெறும் இரண்டாம் கால பூஜையின்போது, இந்தத் திருவுருவத்திற்கு அபிஷேகம் நடைபெறுகிறது. பால், தேன்  முதலியவற்றால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இறுதியில் தீபாராதனை செய்யும் போது கற்பூர ஜோதியை பின்புறமும் காட்டுகின்றனர். அந்த ஜோதியில் நடராஜர்  வடிவம் அழகாகத் தோன்றுகிறது. இந்தக் காட்சி காணற்கிணிய காட்சியாக அமைகிறது.

முகலிங்கம்

பொன்னம்பலத்தில் அமைந்துள்ள மேடையில் நடராஜருக்கு மேற்கில் தெற்குநோக்கியவாறு ஏக முகலிங்கம் அமைந்துள்ளது. தெற்கு நோக்கியுள்ள அகோர  முகத்துடன் காட்சியளிப்பதால், இது அகோர லிங்கமாகும். இதுவும் ஆகாச லிங்கமாகப் போற்றப்படுகிறது. பரமாகாசத்தையும், சிதாகாசத்தையும் விளக்கி நிற்கும்  ரகசியத்திற்கு அபிஷேக மூர்த்தியாக இந்த லிங்கம் அமைந்துள்ளது என்கின்றனர். இதற்குக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியறை அம்பிகை நின்றவாறு
காட்சியளிக்கிறாள்.

ஸ்ரீபாதுகாமூர்த்தி

சிவாலயங்களில் சிவபெருமானின் திருவடி எனப்படும் பாதுகையைத் தாமரைப் பீடத்தில் வைத்து அதற்குத் திருவாசி அமைத்து வழிபடுகின்றனர். இது  உலோகத்தால் அமைக்கப்பட்டதாகும். சிதம்பரத்தில் நடராஜர் எழுந்தருளியுள்ள மேடையில் ஸ்ரீபாதமும் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளது. அர்த்தசாம பூஜையில்  இந்த ஸ்ரீபாதம் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளி வைக்கப்பட்டு உபசாரங்களுடன் கொடி மரத்தை வலம் வரச் செய்து பள்ளியறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது.  அங்கு வெள்ளி மஞ்சத்திலுள்ள வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி இருக்கும் பள்ளியறை அம்மனின் பக்கத்தில் எழுந்தருளி வைக்கப்பட்டுப் பள்ளியறை பூஜை  நடத்தப்படுகிறது. பால் நிவேதனம் நடைபெறுகிறது. மணிவாசகரின் திருப்பொன்னூஞ்சல் பாடப்படுகின்றது. அதிகாலையில் பள்ளியறை பூஜை நடைபெற்று  ஸ்ரீபாதம் பல்லக்கில் வைக்கப்பட்டு மீண்டும் சிற்சபையை அடைகிறது.

ஸ்ரீபலி நாயகர் (நித்தியோற்சவர்)

பேரண்டத்திற்கு உணவூட்டிச் செழிக்கச் செய்யும் முகமாக தினமும் வேள்வியும், அதைத் தொடர்ந்து, சிவபெருமான் தாமே எழுந்தருளி தசதிக்குப் பாலகர்களுக்கு  ஸ்ரீபலி இடும் நிகழ்ச்சியும் சிவாலயங்களில் நடத்தப்படுகிறது. இதற்கு ஸ்ரீபலி என்பது பெயர். தினமும் காலையிலும் மாலையிலும் ஸ்ரீபலி உற்சவம்  நடைபெறுகின்றது. இதற்கான ஸ்ரீபலி நாயகர் எனப்படும் சிறிய சந்திரசேகரர் சிற்சபையில் எழுந்தருளி வைக்கப்பட்டுள்ளது. பிரதோஷ காலத்தில் இவர் வெள்ளி  இடப வாகனத்தில் பவனி வந்து அருட்பாலிக்கிறார்.சிதம்பரம் பற்றி வடமொழியில் அமைந்த புராணங்கள் :சிதம்பர மகாத்மியம், புண்டரீக புர மகாத்மியம்,  வியாக்புர மகாத்மியம் ஆகியவை கிரந்தத்தில் உள்ளன. தில்லைவாரண்ய மகாத்மியம், ஹேம சபாநாத மகாத்மியம் ஆகியவை கையெழுத்துப் பிரதிகளாக  உள்ளன. கோயிற்புராணம் உமாபதி சிவத்தால் பாடப்பட்டது. இதில் சிதம்பர மகாத்மியம் சிதம்பரம் சி.எஸ்.சச்சிதானந்த தீக்ஷிதரால் வடமொழிக்கு நேர் தமிழ் மொழி பெயர்ப்பாக 1952ல் வெளிவந்துள்ளது.
 
பதஞ்சலி  வியாக்ரபாதர்  ஜைமினி

ஆதியில் தில்லையம்பலத்தில் ஆடிக் கொண்டிருக்கும் நடராஜப்பெருமானின் பிரபஞ்ச இயக்கத்திற்கான பஞ்சகிருத்திய பரமானந்தத் தாண்டவம் அதிசூட்சும  நிலையில் நடந்து வந்தது. அந்த தாண்டவத்தைப் பலர் தமது அரிய தவமுயற்சியால் இறையருள் பெற்றுக் கண்டு களித்தனர். அவர்களில் பதஞ்சலி,  வியாக்ரபாதர், ஜைமினி ஆகியோர் முதன்மை பெற்றவர்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படியே பலரும் காண அங்கே சிற்சபை தோன்றியது.  அவர்களுக்காகப் பெருமான் ஆடிய வரலாற்றையும் மேற்குறித்த மூவர் பற்றிய சிறு குறிப்பையும் இங்கே காணலாம்.பதஞ்சலி அனந்தனில் அரிதுயில்  கொண்டிருந்த விஷ்ணு ஆனந்தப் பரவசராகி முகம் பொலிவெய்தி ஆனந்தக் கண்ணீர் பெருகக் கைகளைக் கூப்பினார். அதைக் கண்டு வியந்த அனந்தன்  பெருமானே இந்த வியப்புக்கு என்ன காரணம் என்றான். திருமால் பெருமானின் ஆனந்தக் கூத்தை எண்ணி மகிழ்ந்ததால் உண்டானது என்றார்.

அனந்தனுக்குத் தானும் அக்காட்சியைக் காண விருப்பம் உண்டானது. திருமாலிடம் விடைபெற்றுக் கொண்ட அவன் கயிலை மலைக்குச் சென்று தவம் புரிந்தான்.  சிவபெருமான் அவனிடம் அத்ரிஅனசூயா தம்பதியருக்கு மகனாகப் பிறந்து தவம் செய்வாய் என்றார். அவன் சிறிய பாம்பு வடிவுடன் விண்ணில் பறந்து அத்ரி  ஆசிரமத்தை அடைந்தான். அவ்வேளையில் அனசூயாதேவி ருது ஸ்நானம் செய்து விட்டு கைகளில் நீரை அள்ளியெடுத்தாள். அனந்தன் அவளது கரங்களில்  வீழ்ந்தான். அவள் பாம்பென்று பதறி அவளது கைகளை விலக்க, பாதத்தில் வீழ்ந்த அவன், அவளைத் துதித்தான். அங்கு வந்த அத்திரி அவனுக்குப் பதஞ்சலி  என்று பெயர் சூட்டினார். அவன் அவரிடம் தன்னை மகனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான்.

அத்ரியும் அனசூயாதேவியும் மகிழ்ந்து அவனை மகனாக ஏற்று வளர்த்து வந்தனர். அவன் உரிய வயதை எய்தியபோது, அவனுக்கு உபநயனம் செய்வித்து  மந்திரோபதேசமும் செய்து வைத்தார். அவன் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு தில்லைவனத்தை அடைந்தான். தமக்கு முன்னமேயே அங்கு வந்து தவம்  செய்து கொண்டிருந்த வியாக்ரபாதருடன் சேர்ந்து கொண்டான். அங்கு மூலட்டானரை வழிபட்டு மகிழ்ந்ததுடன் பாம்பரசர்களால் அங்கு நிறுவப்பட்டிருந்த  அனந்தேஸ்வரர் சிவலிங்கத்தைக் கண்டு பூஜை செய்து மகிழ்ந்திருந்தான். தில்லையில் நடைபெற்று வரும் பூஜைமுறைகளை வகுத்தளித்தவர் அனந்தனின்  அவதாரமான பதஞ்சலியேயாவார். அவர் வகுத்தபடியே தான் இப்போதும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பதஞ்சலியின் வடிவம் ஆலயத்தில் உள்ளது.

வியாக்ரபாதர் மத்தியந்தின முனிவரின் குமாரர் மாத்யானந்தினர். இவர் இளம் வயதிலேயே தந்தையிடம் சகல ஞானங்களையும் கற்றார். அவற்றின் மூலம்  சிவபூஜையே உயர்ந்த பூஜை எனக் கண்டு தெளிந்து, பல்வேறு தலங்களில் வழிபாடு செய்தவாறே தில்லைக்கு வந்தார். மூலட்டானரைக் கண்டு நாள்தோறும்  பூஜை செய்து மகிழ்ந்திருந்தார். அவர் பூஜைக்கென பூச்சி அரிக்கா, வண்டு மொய்க்காத மலர்களைப் பெற வேண்டி அதிகாலையிலேயே நந்தவனங்களுக்குப்  பூப்பறிக்கச் செல்வது வழக்கம். நந்தவனங்களில் மரக்கிளைகளில் ஏறும் போது பனியால் கால் வழுக்கியதுடன் இருள் பிரியாத நேரத்தில் பூக்களைத் தேடிப்  பறிப்பதும் துன்பமாக இருந்தது. அதனால் மிகுந்த வருத்தம் அடைந்தார்.

இறைவன் அவரது துன்பத்தை மாற்ற வேண்டி இடப வாகனத்தில் காட்சி கொடுத்தார். மாத்யானந்தினர் நாள்தோறும் அதிகாலையில் சிவபூஜைக்கு வேண்டிய  மலர்களைப் பெற எளிதாக இருக்க புலிக்கு இருப்பது போன்று இரவிலும் பார்வை நல்கும் கண்களும், வழுக்காது மரங்களில் ஏற, புலி போன்று நகமும்  தசைப்பற்றுகளும் கொண்ட கை கால்களைப் பெற்றார். புலி போன்ற பாதங்களைப் பெற்றதால் வியாக்ரபாதர் என்று பெயர் பெற்றார். இவர்  வசிட்டரின் சகோதரியை மணந்தார். அவர்களுக்குப் பிறந்தவரே உபமன்யு முனிவர் ஒரு சமயம் உபமன்யு பால் வேண்டி அழுதபோது, இறைவன் அவருக்காகப்  பாற் கடலையே அழைத்துத் தந்தார். பாற்கடலின் நினைவாக தில்லையில் அமைந்ததே திருப்பாற்கடல் தீர்த்தமாகும். உபமன்யு முனிவர் முனிவர்களில்  உயர்ந்தவராகப் போற்றப்படுகின்றார்.

வியாக்ரபாதர் தில்லை வனத்தில் மூலட்டானரை வணங்கி வந்ததுடன், திருப்புலீச்சரம் என்னும் ஆலயத்தையும், அதன் முன்பாகப் புலிமடு என்னும்  தீர்த்தத்தையும் தோற்றுவித்தார். அத்தீர்த்தமே இந்நாளில் இளமையாக்கின தீர்த்தம் என வழங்குகின்றது. புலிக்கால் முனிவர் வணங்கிப் பேறுபெற்ற இடமாதலின்  சிதம்பரம், வியாக்ரபுரம், திருப்புலீச்சரம், பெரும் பற்ற புலியூர், புலியூர் என்னும் பெயர்களால் அழைக்கப்படுகிறது. தில்லையில் இரண்யவர்மனைக் கொண்டு பெரும்  திருப்பணிகளை நடப்பித்தவர் வியாக்ரபாதரேயாவார். தில்லையில் வியாக்ரபாதர் ஜைமினி, பதஞ்சலி ஆகிய மூவரும் ஒரே பீடத்தில் அமைந்த உலாத்திருமேனி  உள்ளது. தைப்பூசத்திற்கு முன்பாக ஒன்பது நாட்கள் மூவரும் திருமூலட்டானரை பூஜிக்கும் ஐதீக விழா நடைபெறுகின்றது. பத்தாம் நாள் நண்பகலில் மூவருக்கும்  நடனக்காட்சி அருளும் ஐதீக விழா நடைபெறுகின்றது. மூவரையும் சிற்சபைக்கு முன்பாக எழுந்தருளுவித்து தீபாராதனை செய்து அவர்களுக்கு குஞ்சிதபாதத்தைச்  சூட்டுகின்றனர்.

Tags :
× RELATED சுந்தர வேடம்