×

அர்ஜூனருக்கு அருளிய கிராதமூர்த்தி : சிவாலய ஓட்ட 6வது திருக்கோயில்

குமரி மாவட்டத்தில் சிவாலய ஓட்டம் பிரசித்தி பெற்றது. இதற்கு காரணம் இங்குள்ள 12 பிரசித்திப்பெற்ற சிவாலயங்கள் ஆகும். சிவராத்திரிக்கு முந்தைய நாள் இந்த ஓட்டம் தொடங்கும். சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடக்கும் இந்த சிவாலய ஓட்டத்தில், குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கேரள பக்தர்களும் ஏராளமாக கலந்து கொள்வார்கள். இவர்கள் ஓட்டத்தின்போது ‘கோபாலா கோவிந்தா’ என்ற கோஷத்துடன் கைகளில் விசிறி ஏந்தியும், கால்களில் செருப்பு அணியாமலும் மேற்படி 12 சிவாலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்வார்கள். அப்படிப்பட்ட சிவாலய ஓட்ட தலங்களில் ஆறாவது தலமாக விளங்குவது தக்கலை அருகே திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி திருக்கோவில் ஆகும். இக்கோவில் இரண்டு ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

உயரமான பெரிய மதில் வெளிப்பிரகாரங்கள், திறந்த வெளி உட்பிரகாரம், கருவறையை சுற்றி உட்பிரகாரம், முன்மண்டபம், நந்தி மண்டபம், திருச்சுற்று மண்டபம், விமானம் என்னும் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோவில் மகாபாரத கதையுடன் தொடர்புடையதாக காணப்படுகிறது. பாண்டவர்களில் ஒருவரான அர்ஜூனர் மகாபாரத போரில் துரியோதனை வெல்ல விஷேச சக்திகளை பெற வேண்டும். அதற்காக சிவபெருமானை வேண்டி நீ கடும் தவம் புரிய வேண்டும் என்று பகவான் கிருஷ்ணன், அர்ஜூனருக்கு அறிவுரை வழங்குவார். அதன்படி அர்ஜூனர் ‘பாசுபதாஸ்திரம்’ வேண்டி சிவபெருமானை நோக்கி நீண்ட தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சிவபெருமான் கிராதனாக (வேடனாக) தோன்றினார்.

அப்போது சிவபெருமானுக்கும் அர்ஜூனருக்கும் ஏற்பட்ட மோதலில் அர்ஜூனன் கிராதனான சிவனுடன் மோதி தோற்றுப்போவார். இந்த நிகழ்வுடன் தொடர்புடையது இக்கோவில் ஆகும். இக்கோவிலின் மூலவரான கிராதமூர்த்தி இருக்கும் கருவறை மூன்று சிறு மண்டபங்களை கொண்டது. கல்லால் ஆனது. கருவறை விமானம் மூன்று அடுக்குகள் உடையது. விமானத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணுநரசிம்மர், யோக நரசிம்மர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். மூலவர் லிங்க வடிவத்தில் ஆவுடையில் இருக்கிறார். இக்கோவிலின் வெளிபிரகாரத்தில் பலிபீடம் உள்ளது. தெற்கு பிரகாரத்தில் சிறிய விநாயகர் கோவில் உள்ளது. இதன் அருகே லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டு சமாதிகள் காணப்படுகின்றன. இரண்டும் அண்ணன், தம்பி ஆகிய இரு யோகிகளுக்கு உரியது. இச்சமாதி அருகே கிளிமரம் என்ற ஒருவகை மரம் உள்ளது.

இதுவே இக்கோவிலின் தலவிருட்சமாகவும் உள்ளது. வடக்கு வெளிப்பிரகார கோவிலில் கம்பீரமான தோற்றத்தில் காலபைரவர் காட்சி தருகிறார். குமரி மாவட்ட கோவில்களில் உயரமான காலபைரவர் இவரே ஆவார்.கருவறையை ஒட்டி கிழக்கு பகுதியில் சாஸ்தா உள்ளார். வடக்கு உள்பிரகார நடுப்பகுதியில் லிங்க வடிவில் நிர்மால்ய தேவர் காட்சி தருகிறார், கேரள மாந்திரீக ஆகம முறைப்படி நிர்மால்ய தேவருக்கு வழிபாடு கிடையாது. இக்கோவில் காலை 6 மணிக்கு நடைதிறப்பு, 6.30க்கு பூஜை, 9 மணிக்கு பூஜை நடைபெறும். 10 மணிக்கு நடையடைப்பு. மாலை 5 மணிக்கு நடை திறப்பு, 7.30க்கு பூஜை நடைபெறும். 8 மணிக்கு திருநடை அடைப்பு. இக்கோவிலில் மகாசிவராத்திரி விழா வெகு விமர்சையாக, சீரும் சிறப்புமாக நடைபெறும்.

Tags :
× RELATED சுந்தர வேடம்