நோன்பு ஏன் கடமையாகிறது?

இஸ்லாம் ஐந்து தூண்களின் மீது அமைக்கப்பட்டுள்ள ஒரு கட்டிடம். அந்த ஐந்து தூண்களில் ஒன்று நோன்பு. இந்த நோன்பு இன்றைய முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, முன்பு வருகை தந்த இறைத்தூதர்களின் சமுதாயங்களுக்கும் கடமையாக்கப்பட்டிருந்தது என்று குர்ஆன் கூறுகிறது. நோன்பு கடமையாக்கப்பட்டதற்கான காரணங்கள் இரண்டு.

Advertising
Advertising

1. இந்தத் தூய ரமலான் மாதத்தில்தான் மனித குலத்திற்கு வழிகாட்டக் கூடிய திருக்குர்ஆன் வேதம் இறைவனால் அருளப்பட்டது. இறைவனின் அந்த மகத்தான பேரு தவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்கும்படி கட்டளையிடப்பட்டது.

2. பயபக்தி இறையச்சத்தை மனிதன் பெற வேண்டும் என்பதற்காகவும் நோன்பு கடமையாக்கப்பட்டது. குர்ஆன் கூறுகிறது: “இறைநம்பிக்கையாளர்களே, உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின் பற்றிய)வர்கள்மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப் பட்டிருக்கிறது. அதன் மூலம் நீங்கள் இறையச்சமுள்ளவர்களாய்த் திகழக்கூடும்.”(2:183) இறையச்சத்தைப் பெறுவதற்கு நோன்பைவிட சிறந்த பயிற்சி முறை வேறு எதுவும் இல்லை. படைத்த இறைவனின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிந்து வாழும் பயிற்சியை நோன்பு அளிக்கிறது. அதிகாலை நான்கரை மணிக்குள் உணவு, பானம் ஆகியவற்றை முடித்துக் கொள்ளுங்கள் என்பது இறைவனின் ஆணை. அப்படியே முழுமையாக அடிபணிகிறோம். அதிகாலை நான்கரை மணிக்குப் பிறகு ஒரு சொட்டு நீரைக்கூட அருந்த மறுக்கிறோம். ஏன்? அருந்தக்கூடாது என்பது ஆண்டவன் கட்டளை. மாலை ஆறரை மணிக்கு நோன்பை விட்டுவிடுங்கள் என்பது இறைவனின் உத்தரவு. ஆறரை மணிக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

“ரமலானில் பொய் பேசுவது, புறம் பேசுவது, சண்டையிடுதல், திட்டுதல் போன்ற தீய காரியங்கள் அனைத்திலிருந்தும் விலகியிருங்கள்” என்கிறது மார்க்கம். அப்படியே செய்கிறோம். யாரேனும் நம்மிடம் சண்டைக்கு வந்தாலும், “நான் நோன்பாளி” என்று சொல்லி விலகி விடுகிறோம். “இது பொறுமையின் மாதம். பொறுமையை மேற்கொள்ளுங்கள்” என்பது நபிகளாரின் திருவாக்கு. மிகுந்த பொறுமையை, கட்டுப்பாட்டை மேற்கொள்கிறோம். இச்சைகளை அடக்கிக் கொள்கிறோம். இதயத்தை இறைநினைவில் ஆழ்த்துகிறோம். தொழுகை போன்ற வழிபாடுகளில் அதிகம் ஈடுபடுகிறோம்.“பின்னிரவில் எழுந்து தொழுங்கள்” என்பது இறைவனின் உத்தரவு. தூக்கம் கண்களைச் சொக்கினாலும் சரி, அதை உதறிவிட்டு படுக்கையிலிருந்து எழுகிறோம். படைத்தவனைத் தொழுகிறோம். பின்னிரவில் இறைவன் முதல் வானத்திற்கு வந்து, தன் கைகளை விரித்தபடி, “இதோ நான் அருள்புரிவதற்குத் தயாராக இருக்கிறேன். பிரார்த்திப்பவர் உண்டா? இதோ, நான் மன்னிப்பதற்குத் தயாராக இருக்கிறேன், மன்னிப்புக் கோருபவர் உண்டா?” என்று கேட்பான் என்பது நபிமொழி. இதற்குப் பிறகும் ரமலான் மாத இரவுத் தொழுகையை எப்படி விடுவதற்கு மனம் வரும்?

இந்த மாதத்தில் இறைவனுக்காக தான தர்மங்களை அதிகம் செய்யுங்கள் என்று மார்க்கம் வலியுறுத்துகிறது. ஒவ்வொருவரும் அவரவர் வசதிக்கு ஏற்ப அள்ளி  

வழங்குகிறார்கள். ஆண்டவனின் கட்டளைக்கு அடிபணிகிறார்கள். இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் இறைவனின் உத்தரவு என்ன என்பதைப் பார்த்து அதற்கு முழுமையாக அடிபணியும் வழக்கம் ஏற்படுகிறது. ஒரு நாள், ஒரு வாரம் அல்ல  தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த ஒரு மாதம் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து இறைவழிபாடுகளில் ஈடுபடும்போது ஆன்மிக இன்பத்தில் இதயம் கனிந்து பக்குவப்படுகிறது. ரமலான் மாதம் முடிந்த பிறகு ஏதேனும் தவறான காரியங்களில் ஈடுபட மனம் தூண்டினாலும் ரமலானில் நாம் பெற்ற பயிற்சியும் செய்த வழிபாடுகளும் மனத்துக்குக் கடிவாளம் போட்டுவிடுகிறது. தீமைகளிலிருந்து நம்மைத் தடுத்துவிடுகிறது. தூய ரமலான் நோன்பு தரும் பயிற்சிகளில் முதன்மையானது, அடியார்களிடம் இறையச்சத்தை உருவாக்குவதுதான்.

சமீம் ஜாவீத்

Related Stories: