காரைக்கால் திருநள்ளாறு சனி பகவான் கோயிலில் தேரோட்டம் : திரளான பக்தர்கள் தரிசனம்

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழாவின் 15ம் நாள் நிகழ்வாக, நேற்று காலை 5 தேர்களின் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் உலக புகழ் பெற்றது. இக்கோயிலில் சனி பகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் பிரமோற்சவ விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக, கடந்த 18ம் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு செல்லும் நிகழ்ச்சியும், 23ம் தேதி பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 15ம் நாள் விழாவாக, நேற்று காலை 5.30 மணியளவில், கோயில் வாசலில் விநாயகர், சுப்பிமணியர், தியாகராஜர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் என 5 தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

தேர்களை, மாவட்ட கலெக்டர் கேசவன், சப்கலெக்டர், கோயில் நிர்வாக அதிகாரியுமான விக்ராந்த்ராஜா, எஸ்.எஸ்.பி ராகுல் ஆல்வா, கோயில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான முக்கியஸ்தர்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தேர், கோயிலின் 4 வீதிகளை கடந்த மாலை மீண்டும் அதே இடத்திற்கு தேர் சென்றடைந்தது. இரவு 9 மணிக்கு, செண்பகதியாகராஜ சுவாமி தேர் நிலையத்திலிருந்து எண்ணெய்க்கால் மண்டபத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (26ம் தேதி) இரவு சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியும், 27ம் தேதி தெப்ப உத்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி விக்ராந்த்ராஜா தலைமையில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

× RELATED சுசீந்திரம் தாணுமாலையசுவாமி கோயிலில்...