×

உடல் நீக்கி, உயிரை பற்றி சிந்திப்பதே தவம்!

அபிராமி அந்தாதி சக்தி தத்தவம் - 19

(அபிராமி அந்தாதி பாடல் 13க்கான விளக்கம் தொடர்கிறது)

‘பூத்தவளே’ -

இச்சொல்லானது இவ்வுலகத்தை படைத்தவள் என்பதை குறிக்கிறது. தலைகடவுளான பிரம்மாவிற்கு உறுதுணை சக்தியாக இருந்து உலகத்தை  படைப்பவளாக தேவியானவள் சொல்லப்படுகின்றாள். ஆகமங்களின்படி பிரம்மாவின் மனைவி மூவறாவர் - காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி. இந்த  மூன்று சக்திகளைத்தான் ஒன்றாக்கி ‘பூத்தவளே’ என்கிறார் அபிராமி பட்டர். காயத்திரி என்றால் உடலைப் படைப்பவள். சாவித்திரி என்றால் ஞானம்,  உள்ளத்தை படைப்பவள். சரஸ்வதி என்றால் சப்தார்த்தங்கள் என்ற சாஸ்திரத்தை படைப்பவள். ஆகையினால் ‘பூத்தவளே’ எனப்படுகின்றனர்.

மேலும் பிரம்மாவின் சக்தியாக பிராம்ஹி என்பவளும் கூறப்படுகின்றாள். நான்கு முகங்களைக் கொண்டும், பிரம்மாவைப் போலவே உருவத்தை ஒத்த  இவள், ஆத்ம ஞானத்தை அருள்வதாக சிற்ப சாஸ்திரங்கள் கூறுகின்றன. உலக படைப்பிற்கு பிரம்மாவிற்கு உதவியாக ஏழு பிரஜாபதிகள்  தோன்றினார்கள். இவர்களுக்கு உமையம்மையானவள் புற உலகிலுள்ள ஏழு அடிப்படைகளைக் கொண்டு (சப்ததாது) உயிர்களுக்கு உடலைப் படைக்க  உதவினாள், அவர்களின் பெயரானது 1. பிராம்மி, (பிரம்ம சக்தியினிலிருந்து வேறானவள்) 2. வைஷ்ணவி, 3. காளி, 4. சண்டி, 5. கௌமாரி, 6. வாராகி,  7. மாதேஸ்வரி. இவர்கள் 1. அஸ்தி, 2. சுக்லம், 3. மஜ்ஜா, 4. இரத்தம், 5. மாம்சம், 6. சர்மம், 7. நரம்பு என்ற ஏழுவகை தாதுக்களுக்கும்  அதிதேவதைகளாவர்.

இவை ஒவ்வொன்றின் வழி ஆன்மாவிற்கு ஒவ்வொரு அறிவு கூடுகின்றது. அவை: 1. கண்டு, 2. கேட்டு, 3. நுகர்ந்து, 4. உற்று, 5. உண்டு, 6. உணர்ந்து,  7. அறிவது. இவர்கள் சப்தமாதர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இவர்களைப் பற்றி ஔஷத சித்தாந்தம் என்ற பெயரில் தனி சமயம் பண்டைய  காலத்தில் வழிபடப்பட்டுள்ளது. இவர்களை ‘பூத்தவளே’ என்கிறார் அபிராமி பட்டர். திருக்கடையூரில் இவர்கள் அனைவருக்கும் உருவச் சிலைகள்  அமைக்கப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரங்கள் சப்த மாத்ருகா என்ற ஏழுவகை. எழுத்துப் பிரிவை இறைவியாக எண்ணி வழிபடுகிறார்கள். அந்த  எழுத்துகளைக் கொண்டு தேவதைகளுக்கு உருவத்தை தோற்றுவிக்கிறார்கள்.

ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு அவயவத்தைக் குறிக்கும். இதை நியாசம் என்ற கலைச் சொல்லால் குறிப்பிடுவர். லலிதா ஸஹஸ்ர நாமமானது,  ‘மாத்ருகா வர்ண ரூபின்யை’ - எழுத்து வடிவானவளே - என்பதிலிருந்து இதை அறியலாம். எழுத்துகளின் தொகுப்பு சேர்ந்து ஒரு குறிப்பிட்ட  தேவதையை உணர்த்தும் என்கிறது மந்திர சாஸ்திரம். ‘புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம் காத்தவளே’ - புவனம் என்ற சொல், சக்தி வழிபாட்டைப்  பொறுத்தவரை ஏழு என்றும் குறிப்பிடப்படுகின்றது. ‘புவி ஏழையும் பூத்தவளே’ (பாடல் - 13) என்பதிலிருந்து அறியலாம்.

‘புவனம் பதினான்கையும்’ - பதினான்கு உலகங்கள் என்பதாகத் தெரிகின்றது.

புவனங்கள் 21 - இவை, ஆகாசம் 7, பூமி 7, பாதாளம் 7 என்பதாக குறிப்பிடப்படுகின்றது. யோக சாஸ்திரங்கள் - சைவ யோக சாஸ்திரம்  (பதஞ்சலியிலிருந்து வேறுபட்ட) மனிதன் உடலுக்குள் ஏழு உலகம் உள்ளது (ஞானபூமி) என்பதாக குறிப்பிடுகிறது. ஆகம சாஸ்திரங்கள் இவை  அனைத்தையும் சேர்த்து 28+196 = 224 புவனங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகின்றன. சித்தாந்த சாராவளியில் 224 புவனங்களின் பெயர்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஆவியுடையார் கோயிலில் (புதுக்கோட்டையை அடுத்துள்ளது) திருப்பெருந்துறை என்ற தலத்தில் 224 விளக்குகளாக,  மண்டலங்களாக இன்றும் காணலாம். இவை கருங்கல்லிலும் வடிக்கப்பட்டுள்ளன.

இத்தனை புவனங்களையும், இறைவியானவள் உலக உயிர்களுக்கு வாழ்விடமாக படைத்தாள். இந்த உலகங்கள் அனைத்திலும் உடல் வாழ்வதற்கு  இன்றியமையாததான, நீர், உணவு, காற்று, இருப்பிடம் போன்ற அனைத்தையும் தோற்றுவித்து உயிர்கள் உடலோடு ஒட்டியிருப்பதற்கு உதவும்  என்பதற்காக உயிர்கள் அறிவை பெறும்வரை உயிர்களுக்கு அஞ்ஞானம் விலகும்வரை உடலானது காக்கப்பட வேண்டும் என்பதனாலேயே உடல்  காக்கும் புவனங்களும், அதில் உள்ளவையும், அதை அனுபவிக்கும் உடலையும், இறைவி படைத்ததோடு அவை அழியா வண்ணம் காக்கவும் செய்தாள்  என்பதையே ‘பூத்த வண்ணம் காத்தவளே’ என்கிறார்.

‘புவனம்’ - 

பூ-சத்தாயாம் - ‘பூ’ என்ற எழுத்தொலியானது இருத்தல் என்கிற பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்று வடமொழி விளக்கம் தருகிறது. அந்த வகையில் எல்லா உயிர்களுக்கும் இருப்பிடமாகத் திகழ்வது எதுவோ அந்த இருப்பிடத்திற்கு ‘புவனம்’ என்பது பெயர். உடலுக்குள் உலகம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சாஸ்திரங்களில் அந்த வகையில் உயிர் தங்கியிருக்கின்ற இடத்திற்கு பூமி என்பதாக  கூறப்படுகிறது. புற உலகிலிருந்து வேறுபடுத்திக் காட்ட ஞானபூமி என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார்கள்.

இதற்கு அறிவுப்பொருளாகிய ஆன்மாவின் இருப்பிடம் என்பது பொருள். அந்த வகையில் ‘புவனம்’ என்ற சொல்லானது உடலையும் குறிக்கும். ‘புவனம்’  என்ற சொல்லால் இருத்தல் என்ற தன்மையையும் குறிப்பிடுகின்றார். அதாவது தீ, சுடும்; சுடாதது தீயில்லை என்பதாகிய தன்மை. உலகத்தை  (இருப்பிடத்தை அல்லாமல்) அதில் உள்ளவை அனைத்தையுமே ‘புவனம்’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார்.

அதாவது, கோயில் என்ற சொல்லால் வணங்கும் இடத்தோடு அதில் உள்ள உருவச்சிலைகள், வேலை செய்யும் பணியாளர்கள், பூஜைக்கு பயன்படும்  பொருட்கள் என அனைத்தையும் குறிப்பிடுவதுபோல. ‘ஒன்றாய் அரும்பி’ (பாடல் - 56) பூமி ஒன்றாக இருக்கிறது. ‘பலவாய் விரிந்து’ (பாடல் - 56)  பூமியில் உள்ள பொருட்கள் பலவாக இருக்கின்றன. ‘ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி’ (பாடல் - 68) என்பதனால்  ஞானபூமியாகிற உடலையும் குறிப்பிடுகிறது.

‘பின் கரந்தவளே’ -

கரத்தள் என்ற சொல்லிற்கு மறைத்தல் என்பது பொருள். இறைவியானவள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கின்ற ஐந்து  செயல்களை செய்வதன் மூலம் பக்குவத்திற்கு ஏற்ப ஆன்மாக்களுக்கு ஞானத்தை வழங்குகின்றாள். அந்தவகையில் ஐந்துவகைத் தொழில்களை  ஐந்துவகை சக்திகள் செய்கிறார்கள் என்கிறது லலிதா ஸஹஸ்ர நாமம்: படைப்பவள்-பிரும்மரூபா, காப்பவள்-கோவிந்தரூபா, அழிப்பவள்-ரூத்ரரூபா,  மறைப்பவள்-ஈஸ்வரி, அருள்பவள்-சதாசிவா (மனோன்மணி). அந்த வகையில் கரந்தவளே என்று ஈஸ்வரி என்ற சக்தியை குறிப்பிடுகிறார்.

ஆன்மாக்களின் பொருட்டு தன் உணர்வு பெறுவதற்காக உடலை படைத்து அது அழியாமல் உணவு, நீர் போன்றவற்றால் காத்து அதனிடத்திலிருந்து  மூச்சை நீக்குவதனால் உடலை அழித்து, சக்தியே செயல்படுகின்றாள். அதில் மூச்சு நீங்கியபின் வெற்று உடலிலிருந்து ஆன்மா தனித்து நிற்கும்.  அதைப் பற்றிய உண்மையை அறிய முடியாத வகையில் மறைத்து பாவ-புண்ணியத்திற்கு ஏற்ப பிறவியையும் மோட்சத்தையும் பெறும்வரை  ஆன்மாவின் நிலையை யாராலும் அறிய முடியவில்லை. இறந்து, பிறந்தவர்கள்கூட இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையே உள்ள நிலையை  உணர்த்தவும், உணரவும் முடியவில்லை. ஆனாலும் ஆன்மாவானது இருக்கிறது.

மறைத்தலினால் ஆன்மாக்களுக்கு சற்று இளைப்பாறுதல் கிடைக்கிறது. அந்த கருணை தொழிலை செய்கின்ற சக்தியின் பெயர்தான் ஈஸ்வரி.  கோயில்களில் ரகசியத்தை மறைக்கும் திரையை, குறிப்பாக நடராஜர் எழுந்தருளியுள்ள சந்நதியில் உள்ள திரையை மட்டும் திரோதான சக்தி  என்கின்றனர். சிவாலயத்தை பொறுத்தவரை பஞ்ச திரோதான சக்திகள் உள்ளன: 1. போக சக்தி    - சிவன் கோயில் அர்த்த மண்டபத்திலிருக்கும்  இதை வெளிப்படையாகப் பார்க்க முடியாது. 2. சித்சக்தி - பள்ளியறையிலிருக்கும் (கண்ணாடியாக). 3. திரை - பூஜையில் அலங்கார, நைவேத்யம்  செய்யும்போது போடப்படும் திரை.

4. ரகசிய திரை - நடராஜர் ரகசியம் மறைப்பதற்காக போடப்பட்டுள்ள திரை. 5. மந்திரம் - இறைவனின் மூலமந்திரத்தை வெளிப்படையாக கூறாது  மறைத்து விடுவார்கள். இவற்றில், ‘பின் கரந்தவளே’ என்று பள்ளியறையிலுள்ள கண்ணாடியில் பூஜிக்கப்படும் இறையருள் சக்தியையே  குறிப்பிடுகின்றார். இந்த சக்தியை பூஜித்த பிறகு வேறு எந்த ஆலயத்திற்கும் செல்லக்கூடாது. அத்தோடு ஆலய கதவு மூடப்பட வேண்டும். காலையில்  திறக்கும்போதும் கண்ணாடியில் அந்த சக்தியை வணங்கிய பின்பே பிற பூஜைகள் அனைத்தையும் துவங்க வேண்டும் என்கின்றன ஆகம நூல்கள்.  இந்த அடிப்படை திரோதான சக்தியையே ‘பின் கரந்தவளே’ என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

‘கறைக் கண்டனுக்கு மூத்தவளே’ -

ஒரு செயலுக்குப் பின்னர் அதன் விளைவு எஞ்சியிருக்கும். இதுவே கறை. இந்த ஒருவரி, சிவனின் கழுத்திலுள்ள கரிய நிறத்தை, தெளிவாக அவன்  சிகப்பு உடல் பிரதிபலிக்கிறது. இதன் மூலம் ஒரு புராணத் தகவலை நமக்கு அறிவிக்கிறார்: ஒரு சமயம் மரணம், மூப்பு, பிணி குறித்து அஞ்சிய  தேவர்களும், அசுரர்களும் இதிலிருந்து விடுபட முயற்சித்தனர். பிரம்மா மற்றும் விஷ்ணுவின் ஆலோசனை பேரில் பாற்கடலை கடைந்தால்  அதிலிருந்து அமுதம் வெளிப்படும். அந்த அமுதத்தை உண்பதால் மரணம், மூப்பு, பிணி இவற்றிலிருந்து விடுபடலாம். அதனால் என்றும் பகையான  தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து, பொதுவான இந்த பிரச்னையை தீர்க்க இணைந்து முயன்றனர்.

விளைவாக மகாவிஷ்ணு, ஆமையாகவும், மேருமலை மத்தாகவும், வாசுகி கயிறாகவும் கொண்டு, வாசுகியின் தலைபாகத்தை அசுரர்களும், வால்  பாகத்தை தேவர்களும் இழுத்து, கடைய,  வாசுகி, வலிதாங்க முடியாமல் கொடிய விஷத்தைக் கக்கியது. (பாற்கடலிலிருந்தும் ஒரு விஷம்  வெளிப்பட்டதாக சொல்லப்படுகிறது). அப்படி வெளிப்பட்ட கொடிய விஷம் கரிய நிறமுடையதாக இருந்ததால் கால கூடம், ஆலஹாலம் என்று பெயர்  கொண்டது. அது கொடிய விளைவை தந்தது.  அஞ்சிய தேவர்களும், அசுரர்களும், அழிக்கவல்ல சிவபெருமானை நாடினர். சிவபெருமான்  அவ்விஷத்தை, விபூதி தாங்கும் பணியை மேற்கொள்ளும் தன் சேவகனான சுந்தரரிடத்து பணிக்க, அவர் உள்ளங்கையால் விஷத்தைத் திரட்டி  இறைவனிடத்து ஒப்படைத்தார்.

தேவர்கள், அசுரர்கள் மற்றும் உலக நலன் பொருட்டு அதனை உண்டு அருளினார் ஈசன். விஷத்தன்மையால் மிகவும் சிவந்த நிறமுடைய  சிவபெருமானின் கழுத்து கருத்தது. அந்தக் கறை நீங்காமல் அவர் கழுத்திலேயே இருந்தது. அதனால்தான் அவருக்கு ஸ்ரீகண்டன் என்று பெயர். அந்த  வகையில் அபிராமி பட்டர் அமிர்தகடேஸ்வரர் என்ற, அமுதத்தோடு தொடர்புடைய தலபுராணம் கொண்ட சிவபெருமானை ‘கறை கண்டன்’ என்று  குறிப்பிடுகிறார். அப்படிப்பட்ட கறைகண்டன் அனாதியானதால், பிறப்பும், இறப்பும் இல்லாதவனாகையால், அவன் மனைவியான பார்வதியானவள்  அவருக்கு அன்னையாகவும் ஆனாள். அதையே, ‘அவளே அவர் தமக்கு அன்னையு மாயினள்’ (பாடல் - 43) என்றும் குறிப்பிடுகிறார் பட்டர்.

‘தஸாஸ்யாம் புத்ராற் தேஹி பதிமேகா தசங்கிருதி’ என்கிறது வேதம். பத்து புதல்வர்களை கொடு. பதினொறாவது புதல்வனாக கணவனையும் கொள்.  அந்த வகையில் கறைகண்டனுக்கு மூத்தவளே என்கிறார். உலகத்தை ருத்ரன் ஒருங்க அழித்தபிறகு தன்னிடத்திலிருந்து மீண்டும் தோற்றுவிப்பார்.  அப்படி தோற்றுவிக்கையில் முதலில் தண்ணீரிலிருந்து சக்தியை தோற்றுவிப்பார். அப்படி முதலில் தோன்றியதால் ‘மூத்தவளே’ என்கிறார். மேலும்  பாற்கடலிலிருந்து அமுதம் கடையும்போது முதலில் ஜேஷ்டாதேவியும், பிறகே இலக்குமிதேவியும் தோன்றியதாகக் கூறப்படுகிறது. ஜேஷ்டாதேவி  என்பதற்கு மூத்தவள் என்பது பொருள். திருக்கடையூரில் அவளுக்கு உருவச்சிலையும் உள்ளது. அதனாலேயும் ‘மூத்தவளே’ என்றாகிறாள்.

‘என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே’ -

இந்த சொற்றொடர் மகாவிஷ்ணுவைக் குறித்தது. முகுந்தன் என்றால் மகாவிஷ்ணு, சரி. அது என்ன மூவா முகுந்தன்? மூப்பு, பிணி, மரணம் நீக்கும்  அமுதத்தை உண்டதனால் மூவாதன்மை அடைந்தவர். முன்பு வெண்மையாக இருந்த விஷ்ணு, ஆலஹால விஷத்தின் தாக்குதலால் கரியவராக  ஆனார் என்கிறது தலபுராணம். இந்த இரண்டு தகவல்களைக் கொண்டும் மகாவிஷ்ணுவை மூவாமுகுந்தன் என்றார். அப்படிப்பட்ட விஷ்ணு,  திருக்கடையூரில் அமிர்தகடமாக தோன்றிய ஈஸ்வரரை தனித்து பூஜித்தலாகாது என்பதனால் தனது ஆபரணங்களை எல்லாம் தொகுத்து, அதை  அபிராமி அம்மையாக வடிவமைத்து இருவரையும் இணைத்து சிவசக்தியாக பூஜித்தார் என்ற வரலாற்று குறிப்பை நமக்கு உணர்த்தும்வகையில் என்றும்  மூவாத மகாவிஷ்ணுவிற்கு இளையவளாக திருக்கடையூரில் எழுந்தருளியுள்ளார்.

இக்கருத்தையே ‘நகையே’ (பாடல் - 93) என்கிறார் அபிராமி பட்டர். மூவாது இளைஞனாய் இருக்கும் மகாவிஷ்ணுவை காட்டிலும் பருவம் சார்ந்து  மிகவும் வயது வித்தியாசம் உடையவளாய், மிருத்தியுஞ்ஜயரின் மனைவியான பாலாம்பிகையின் குழந்தை பருவத்தைக் குறிப்பிடும்வகையில் ‘மூவா  முகுந்தற்கு இளையவளே’ என்று குறிப்பிடுகின்றார். 1. சிவனையும் சக்தியையும் ஒத்த வயதையுடைய தம்பதியராய் சிந்திக்க சிருஷ்டி பிறக்கும்; 2. ஏழு  வயது வித்தியாசமுடையவளாய் சக்தியை சிந்தித்தால் ஸ்திதி பிறக்கும்; 3. பதினான்கு வயது வித்தியாசமுடையவளாய் சக்தியை சிந்தித்தால்  சம்ஹாரம் பிறக்கும்; 4. இருபத்தியொரு வயது வித்தியாசமுடையவளாய் சக்தியை சிந்தித்தால் திரேபாவம் பிறக்கும்; 5. இருபத்திஎட்டு வயது  வித்தியாசமுடையவளாய் சக்தியை சிந்தித்தால் அனுக்கிரஹம் பிறக்கும்.

இந்த ஐந்து பருவம்வரை வணங்குபவர்களுக்கு போகத்தை தரும். இதைவிட இன்னும் இரண்டு வயது வித்தியாசம் உடையவளாய் சிந்தித்தால் ஞானம்  பிறக்கும். மிகுந்த வயது உடையவளாய் சிந்தித்தால் மோட்சம் பிறக்கும். உமையம்மையை வயது வித்தியாசம் உடையவளாய் தியானிப்பது  வெவ்வேறு பயனை தரும் என்கிறது ஆகமங்கள். பெண்களின் ஏழு பருவ நிலைகளான பேதை, பெதும்பை, அறிவை, தெரிவை, மங்கை, மடந்தை,  பேரிளம்பெண் ஆகியவற்றையே உணர்த்துகிறது. இந்த பாடலில் ‘மூத்தவளே, இளையவளே, மாத்தவளே’ என்று வயது வித்தியாசம்  தெரிவிக்கப்பட்டுள்ளது. சக்தி வடிவங்களில் திருமணமாகாத இளையவளாக, கன்னியாக, மகாவிஷ்ணுவின் சகோதரியாக இருப்பவள் துர்க்கை என்கிறது  தலபுராணம்.

துர்க்கையும், விஷ்ணுவும் உடன்பிறந்தவர்களாவர். திருக்கடையூர் தலபுராணப்படி துர்க்கை, சிவபூஜை செய்து வழிபட்டாள், அந்த துர்க்கையையே  ‘‘மூவா முகுந்தற்கு இளையவளே’’ என்று குறிப்பிடுகின்றார். காத்யாயினி சமேத அமிர்த மிருத்தியுஞ்ஜயர், பாலாம்பிகா சமேத காலசம்ஹாரமூர்த்தி  என்று ஆகமத்தில் சூட்டியுள்ள பெயர் விளக்கத்தின்படி, காத்யாயினி, ஏழு வயதுடையவள் (இளையவள்); பாலா, ஏழிலிருந்து ஒன்பது வயதுடையவள்.  பாலா துர்க்கா, மகாவிஷ்ணுவின் தங்கை. இவர்கள் அனைவருக்கும் திருக்கடையூரில் சிலைகள் உள்ளது, சிந்திக்கத்தக்கது.

‘மாத்தவளே’ -

ஆரியமுறை வாழ்க்கையில் அறுபதாம் கல்யாணம் முடிந்தபிறகு, தன் மனைவியை தவிர பிற உறவினர்கள் அனைவரையும் விட்டு நீங்கி, நாம் யார்,  ஏன் வந்தோம் எங்கு செல்கிறோம் என்பதை இதுவரை பயின்றும், செயல்முறைபடுத்தியும் அறிந்து கொண்ட அறங்களின் வழியாய் உடல் நீக்கி,  உயிரை பற்றி சிந்திப்பது தவம். இந்த நிலைக்கு வானப் பிரஸ்தாஸ்ரமம் என்று பெயர். தவம் என்ற சொல் ‘காடு’ என்பதைக் குறித்தது. எழுபத்தி ஐந்து  வயதில் கணவனோ அல்லது மனைவியோ இறந்தபிறகு சுடுகாட்டிலே சென்று தனியாக, யாக்கை நிலையாமையையும், உயிரின் நிலைப்பாட்டையும்  அனுபவத்தில் அறிய முற்படுவது தவம் - இது ‘காட்டு எறி’ எனப்படுகிறது.

பிரம்மச்சாரி (பயில்வோன்) கிரகஸ்தன் - கற்றவழி நிற்போன், வானப்பிரஸ்தன் - நின்றதன் வழி உணர்வோன். சன்யாசி - உணர்ந்ததை  அனுபவிப்போன். இந்த நான்கு வாழ்க்கை முறையை வரையறுக்கிறது வேதம். இந்த முறையைச் சிறிதும் வழுவாமல் காப்பதற்கு தவம் என்று பெயர்.  எந்த ஒரு அறத்தையும், இயல்பாக இருப்பவற்றைக் கொண்டு முயற்சித்து பயன்பெற வேண்டும். அந்த முயற்சியை இடைவிடாமல் செய்வதற்கும்,  நம்பிக்கைக் கொள்வதற்கும் தேவையான உறுதிப்பாடு தவம் எனப்படுகிறது. இதை வடமொழியில் சிரத்தா என்பர். இதுவே ராஜச குணம். எல்லா  ஞானத்தையும் நாம் பெறுவதற்கு உதவுகிற பணிவு, பிரம்மசரிய விரதம், புலனடக்கம், பற்றின்மை, உண்மை இது போன்ற உயர் குணங்களுக்கு  சாத்வீகம் என்று பெயர்.

இதுவே தவம். வேதத்தை அறிவதனால் கிடைக்கும் புண்ணிய தோற்றம் நான்கு. அவை அறம், பொருள், இன்பம், வீடு. இவற்றில் வீடு என்ற பயனை  தருவதற்குக் காரணமாவது தவம். தவம் என்ற சொல்லிற்கு ‘வீடு’ என்பதும் ஒரு பொருள். தர்ம, அர்த்த, காம, மோட்சம் என்பர். வடமொழியில்  வேதத்தின் கர்ம காண்டத்தில் சொல்லியபடி வழிபடப்படுகிற வேள்வித் தீக்கு ‘தவம்’ என்று பெயர். இந்த தீயானது தேவதையாகும். இது கருவில்  உருவாவது முதல் கயிலாய பதவி அடைவதுவரை அனைத்து நலன்களையும் மனிதனுக்கு வழங்கவல்லது. சூரியனின் கதிரிலிருக்கும் வெப்பமாக  இருக்கிறவள் உமையம்மை என்கிறது ஆகமம். இந்த வெப்பத்தை கொண்டுதான் தாவரங்கள் உணவு உற்பத்தி செய்கின்றன.

உலகிற்கு உணவாக இருக்கிற வெப்ப ஆற்றலுக்கு தவம் என்று பெயர். தவம் என்ற சொல்லிற்கு சூரிய வெப்பம் என்று பொருள். சூரியனின் காலை  ஒளி பிராம்மி எனவும், மத்திய ஒளி ரெளத்திரி எனவும், மாலை ஒளி மாகேஸ்வரி எனவும் சைவ சந்தியாவந்தன விதி கூறுகிறது. கற்பு என்றால்  தவம் என்று பொருள். லலிதா ஸஹஸ்ரநாமம் ‘சதாசிவ பதிவிரதா’ என்று குறிப்பிடுவதிலிருந்து இதை அறியலாம். ஒரு மனிதன் தன் பாவத்தை  போக்கிக் கொள்வதற்கோ, தான் விரும்பியதை பெறுவதற்கோ, அறத்தில் சிறந்த அந்தணர்க்கு அவர் விருப்பப்படி கொடுக்கும் கொடைக்கு தானம் என்று  பெயர். தவம் என்ற சொல்லிற்கு தானம் என்றும் பொருள். வேதங்கள், மனிதன் தன் பொருட்டும், தன்னை சார்ந்தவர் பொருட்டும், பிறர் பொருட்டும்  செய்ய வேண்டிய செயல்முறை நெறிகளை அறம் என்கின்றன.

அந்த அறத்திற்கு ‘புண்ணியம்’ என்று பெயர். அதாவது, புண்ணியம் என்றால் தவம். வேதத்தின் வழி ஒவ்வொரு இனத்தார்க்கும் உரிய வாழ்க்கை  விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. அவரவருக்குரியது அவரவருக்குரிய தவமாகும். அதாவது ஒழுக்கமாகும். தவம் என்ற சொல்லிற்கு ‘ஒழுக்கம்’ என்று  பெயர். இதையே அபிராமி பட்டர், அபிராமி அம்மையானவள் தானே தவமாகவும், தவத்தின் பயனாகவும் விளங்குவதாலும், அனைத்து தவத்திற்கு  மூலமாக இருப்பதாலும் ‘மாத்தவளே’ என்று குறிப்பிட்டார். ‘வேதம் சொன்ன வழிக்கே’ (பாடல் - 79), ‘பரமாகம பத்ததியே’ (பாடல் - 6), ‘ஐயன்  அளந்தபடி.. அறம் செய்ய’ (பாடல்- 57). தவம், காடு, காட்டக்கி, தவசு, ராஜச குணத்தொன்று, சாத்வீக குணத்துமொன்று, புண்ணியத் தோற்ற  நான்கினுமொன்று.

‘யாகத்தீ, வெப்பம், கற்பு, தானம், புண்ணியம், தத்தம் வருணத்திற்கும், நிலைக்கும் உரிய ஒழுக்கம்’ என்கிறது மதுரை தமிழ்ப் பேரகராதி. ஸ்ரீவித்யா  உபாசனை நெறியில் பத்துவிதமான நிலையில் போக, மோட்ச, ஞானம், பெறுவது குறித்து பின்பற்றி வருகிறார்கள்: முதல் நிலையில் அனைத்து  தெய்வங்களையும் வணங்குவது, இரண்டாம் நிலையில் குருவை வணங்குவது, மூன்றாம் நிலையில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நேசிப்பது, நான்காம்  நிலையில் விரும்பிய தெய்வத்தை பற்றிய சாஸ்திரங் களை படிப்பது, விரும்பிய தெய்வம் இருக்கும் கோயில் நாடி தரிசிப்பது.

ஐந்தாம் நிலையில் இஷ்ட தெய்வத்தின் மந்திரங்களை, வழிபாட்டு முறைகளை ஒரு குருவினிடத்து கற்பது, ஆறாம் நிலையில் கற்றவற்றை குரு  சொன்ன வழியே சாஸ்திர நெறி தவறாது பின்பற்றி பூஜிப்பது, ஏழாம் நிலையில் சொப்பனத்திலோ, நேரிலோ, பிரத்யட்ச இறைகாட்சியை பெறுவது,  எட்டாம் நிலையில் இறைகாட்சியைப் பெற்றபின் உபாசகன் தன் விருப்பங்களை பூர்த்தி செய்வது, ஒன்பதாம் நிலையில் இஷ்ட தெய்வத்தை  பிரார்த்தித்து தன்னை சார்ந்தோர்க்கு நன்மை செய்வது, பத்தாம் நிலையில் பூஜை, தியானம், ஆசாரங்கள் அனைத்தும் இயல்பாக நீங்கி தானும் தான்  வணங்கும் தெய்வமும் கூறும் மந்திரமும் ஒன்று எனக் கருதி, பிற தெய்வங்கள் வந்திப்பது நீங்கி, எல்லா இடத்திலும் உபாசனை தெய்வத்தை  மட்டுமே தரிசிப்பதாகும். 

இந்த பத்தாம் நிலையைத்தான் அபிராமி பட்டரின் இந்த பாடல் வரிகள் விளக்குகின்றன: ‘உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே’, ‘பார்க்கும்  திசைதோறும் பனிச்சிறைவண்டு ஆர்க்கும்’ (பாடல் - 85), ‘நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே’ (பாடல் - 100) பொதுவாக ஒரு தேவதையின் அருளை  பெற்றவர்கள் பிற தெய்வத்தை வணங்க மாட்டார்கள். உண்மையாகவே இறைவன்மீது அன்பு கொண்டவர்கள், தான் எந்த தெய்வத்தை அன்பின்  மிகுதியால் தியானிக்கிறார்களோ, அந்த அன்பின் மிகுதியே பிறதெய்வ வழிபாட்டிலிருந்து விலகுவதற்கு காரணமாக அமைகிறது. ஆகம சாஸ்திரங்கள்  தெய்வ வழிபாட்டு கருத்துகளைக் கூறும்போது, ‘அன்யாசாரம் நகாரயேத்’ - பிற சாஸ்திரங்களை பின்பற்றி ஒழுகுவதை விளக்க வேண்டும் என்கிறது.

ஒரே நேரத்தில் இரண்டு இறை வழிபாடுகள் செய்வதை தவிர்க்கப்பணிக்கிறது. கோயில்களில் காணப்படும் பிற தெய்வங்கள் அனைத்தும் ஒன்றையே  சார்ந்ததாகப் பரிந்துரைக்கிறது. உதாரணமாக உமையம்மை, சிவன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், நந்தி போன்றவை ஒரு தெய்வ வழிபாட்டை  சார்ந்ததே. பொதுவான சாஸ்திர வழிபாடுகளில் குரு, குலதெய்வம், தென்புலத்தார், வேத எறியோம்பல் போன்ற வழிபாடுகள் அனைத்தும் பிற  வழிபாட்டுக்கு துணை செய்வதே. பிற தெய்வ வழிபாடு என்று கருதலாகாது. இவற்றை விட்டுவிடுவதும் கூடாது. இவை எல்லாக் கருத்தையும்  மனதில்கொண்டே ‘மற்றோர் தெய்வம் வந்திப்பதே’ என்று பிற தெய்வ வழிபாட்டை விளக்கி, ஒருதெய்வ வழிபாட்டை செய்து உய்யும் வழியாக இந்த  வரிகளை நமக்கு அபிராமி பட்டர் பரிந்துரைக்கிறார்.

முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்

(தொடரும்)

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?