×

கொடியேற்றத்துடன் வயலூர் சுப்பிரமணியர் கோயிலில் வைகாசி விசாக விழா துவக்கம்

திருச்சி: வயலூர் சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முருகபெருமான் தனது வேலால் தடாகத்தை உண்டாக்கி அம்மையப்பனை வழிபட்ட இடம், குமரபெருமாள் அருணகிரிநாதருக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்த இடம் என்ற சிறப்புக்குரியது திருச்சி அடுத்த குமார வயலூர் சுப்பிரமணியசாமி கோயில்.  இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாக திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திகடனை செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு வைகாசி திருவிழா நேற்று காலை 10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற 30ம்தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

நேற்றிரவு 8 மணிக்கு முத்துக்குமாரசாமி வெள்ளி விமானத்தில் வீதி உலா வந்தார். இன்று (20ம் தேதி) நந்தி வாகனத்தில் வீதியுலா நடக்கிறது. நாளை (21ம் தேதி) அன்னம் வாகனத்திலும் 22ல் வெள்ளி மயில் வாகனத்திலும், 23ம் தேதி ரிஷபம் வாகனத்திலும், 24ம் தேதி யானை வாகனத்திலும், 25ம் தேதி சேஷன் வாகனத்திலும், 26ல் குதிரை வாகனத்தில் சிங்காரவேலர் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27ம் தேதி நடக்கிறது. அன்று காலை 9.30 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியசாமி ரதாரோகணம் கண்டருள்கிறார். மாலை 4 மணிக்கு தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. நிறைவு நாளான 28ம் தேதி காலை 9 மணிக்கு தீர்த்தவாரியுடன் வைகாசி விசாக விழா நிறைவடைகிறது.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?