செவ்வாய், ராகுகேது தோஷமா, சந்தோஷமா?

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது இரண்டு விஷயங்களை முக்கியமாக பார்ப்பார்கள். ஒன்று செவ்வாய் தோஷம். மற்றொன்று ராகுகேது தோஷம். செவ்வாய், லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12ல் இருந்தால் தோஷம். ராகுகேது லக்னம் 2, 7, 8ல் இருந்தால் தோஷம். இந்த இடங்கள் எல்லாம் காதல், காமம், இச்சை, ஆசை, போகம், தாம்பத்திய சுகம் பற்றி குறிக்கும் இடங்களாகும். குறிப்பாக செவ்வாய் 7 அல்லது 8ல் இருந்தால் தெரிந்தோ, தெரியாமலோ நிறைய பேர் அச்சப்படுவார்கள். இதற்கு உடல்ரீதியான காரணம்தான் முக்கியமானதாகும். இவர்களுக்கு உடல் வெப்பம் அதிகமாக இருக்கும். உறவில் இன்பம், உள்ளக் கிளர்ச்சி கூடுதலாக இருக்கும். திருமண பந்தத்தில் தம்பதிகளின் சேர்க்கையே வம்சம் விருத்தியடைய முக்கியமானது. இருவருக்கும் அந்த இச்சையை பூரணமாக தருவதில் செவ்வாய்க்குத்தான் முக்கிய பங்கு உண்டு.

Advertising
Advertising

இதை நம் முன்னோர்கள் இலைமறைவு காய் மறைவாக தோஷம் என்று சொல்லி அந்த வகையான ஜாதகங்களை ஒன்று சேர்த்து இல்லற வாழ்க்கையில் இருவரும் சரிசமமாக இன்பம் பெற வழி வகுத்தார்கள். ராகுகேது விஷயத்திலும் இதே அணுகுமுறைதான். 7 மற்றும் 8ல் ராகுகேது இருக்கும் ஜாதகங்களின் தன்மையும் இல்லற சம்போகத்தை பற்றி குறிப்பதாகும். பாம்புகளின் குணாதிசயங்களில் முக்கியமானது அவை பின்னிப் பிணைந்து இணைந்து இருப்பதுதான். ஆகையால் அதே சம தோஷமுள்ள ஜாதகத்தை சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் ஆகிறது. அத்தம்பதிகளின் ஆசைகள், உணர்ச்சிகள் ஒத்துப் போகின்றன. இதுவே தாம்பத்திய உடல் சார்ந்த சுகங்களுக்கான சரியான பரிகார முறையாகும். ஒருவருக்கு தோஷம் இருந்து மற்றொருவருக்கு தோஷம் இல்லாமல் போகும் போதுதான் பல விஷயங்களில் சந்தேகமும், விரக்தியும், ஈடுபாடு இல்லாமையும் ஏற்பட்டு கருத்து வேறுபாடு உண்டாகிறது. ஆகையால்தான் தோஷத்தையும், தோஷத்தையும் சேர்ப்பதால் தோஷம் சமன் ஆகி சந்தோஷம் கிடைக்கின்றது.

Related Stories: