×

மீண்டும் ரிலீசாகும் கமல்ஹாசனின் பேசும் படம்

சென்னை: பல முன்னணி நடிகர்களின் வெற்றிபெற்ற சில பழைய படங்கள், தற்போது அதிநவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு, மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், கமல்ஹாசன் நடித்த ‘பேசும் படம்’ என்ற படம், 36 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ரிலீசாகிறது. இதுகுறித்து ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் அறிவித்துள்ளது. கடந்த 1987 நவம்பர் 27ம் தேதி ரிலீசான படம், ‘பேசும் படம்’. சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன், அமலா, டினு ஆனந்த், பிரதாப் போத்தன் நடித்திருந்தனர். கே.வி.ரெட்டியிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய சிங்கீதம் சீனிவாசராவ், வசனமே இல்லாத ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று வித்தியாசமாக சிந்தித்தார். அதன் விளைவாக உருவான படம், ‘பேசும் படம்’. வசனம் கிடையாது. கதை, திரைக்கதை எழுதிய சிங்கீதம் சீனிவாசராவ், பெங்களூருவில் படப்பிடிப்பு நடத்தினார். கன்னடத்தில் ‘புஷ்பக விமானா’, தெலுங்கில் ‘புஷ்பக விமானம்’, இந்தியில் ‘புஷ்பக்’, தமிழில் ‘பேசும் படம்’ என்ற பெயரில் திரையிடப்பட்டது. வசனம் இல்லாததால் நடிகர்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது. அவர்களுடைய உடல்மொழி, முகபாவங்கள், நடிப்பு போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. வசனமே இல்லாத படத்துக்கு பின்னணி இசையில் எல்.வைத்தியநாதன் அசத்தியிருந்தார். பெங்களூருவில் 35 வாரங்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்ற இப்படம், 35 லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு, ஒரு கோடி ரூபாய் வசூல் செய்தது. கன்னடத்தில் ‘சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம்’ என்ற பிரிவில் தேசிய விருது வென்றது. ‘பிளாக் காமெடி’ என்ற ஜானருக்கு இப்படம் முன்னோடி என்று சொல்லலாம்.

The post மீண்டும் ரிலீசாகும் கமல்ஹாசனின் பேசும் படம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamal Haasan ,CHENNAI ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனது குடும்பத்துடன் நடிகர் கமல்ஹாசனை சந்தித்த நடிகர் ரோபோ சங்கர்!