ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு: தியேட்டர் ஸ்நாக்ஸ் விலை உயர்கிறது?

புதுடெல்லி: ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50வது கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தியேட்டர்களில் விற்கப்படும் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு கூடுதலாக 5 சதவீதம் வரி விதிப்பது என முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் நொறுக்கு தீனிகள் மற்றும் பானங்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதற்கே பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் நொறுக்கு தீனிகளுக்கு கடும் விலை வைத்து ரசிகர்களை படாய்படுத்தி வருகிறார்கள்.

இப்போது நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் ஒரே மாதிரியாக மேலும் 5 சதவீதம் வரி விதிக்க வேண்டுமென ஒன்றிய, மாநில வரித்துறை அதிகாரிகள் அடங்கிய பிட்மென்ட் கமிட்டி, ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன் பேரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் இது குறித்து பரிசீலித்து முடிவு எடுக்கும் என தெரிகிறது. இதுபோல் மேலும் 5 சதவீத வரி விதித்தால் தியேட்டர்களில் கிடைக்கும் பாப்கார்ன், குளிர்பானங்கள் மற்றும் ஸ்நாக்ஸ் வகைகளின் விலை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இதுபோல் விலை உயர்ந்தால், தியேட்டர்களுக்கு வரும் சிறு கூட்டமும் இனி வராது என திரையுலகினர் குமுறுகின்றனர். இப்படியொரு சூழலில், தியேட்டர் டிக்கெட் கட்டணத்தின் விலையை அதிகரித்துவிட தியேட்டர் அதிபர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். தற்போது தமிழக தியேட்டர் அதிபர்கள் சிலர், ரூ.120 டிக்கெட் விலையை ரூ.250 ஆக உயர்த்த வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு பொதுமக்கள் தரப்பில் கடும் அதிருப்தி நிலவுவது குறிப்பிடத்தக்கது.

The post ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு: தியேட்டர் ஸ்நாக்ஸ் விலை உயர்கிறது? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: