×

பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு

*கலெக்டர் தொடங்கி வைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்

பெரம்பலூர் : பெரம்பலூர் பாலக்கரை பகுதியில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் இணைந்து நடத்திய எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை மாவட்டக் கலெக்டர் அருண்ராஜ் நேற்று (11ம்தேதி) தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு இணைந்து, எச்.ஐ.வி தொற்றினை பூஜ்ஜியமாகக் கொண்டு வருவதும், புதிய தொற்று இல்லாமை, எச்.ஐ.வி / எய்ட்ஸால் இறப்பு இல்லாமை மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளோரை புறக்கணிக்காமை என்ற தேசிய கட்டுப்பாட்டு நிறுவனத்தின் நோக்கத்தினை அடையும் வகையில், பல்வேறு திட்டங்களை சிறப்புடன் செயல்படுத்தி வருகிறது. எச்.ஐ.வி எய்ட்ஸ் பற்றிய அடிப்படை தகவல்கள் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டாரங்களிலும் உள்ள முக்கிய கிராமங்களில் நாட்டுப்புற கலைகளான கரகாட்டம், பறை இசை மற்றும் ஒயிலாட்டம் போன்ற 10 கிராமிய நிகழ்ச்சிகள் மூலமாக எய்ட்ஸ் மற்றும் பால் வினை நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற உள்ளது. அதன் தொடக்கமாக பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் நேற்று நடைபெற்ற நாட்டுப்புற கிராமிய கலைக்குழு கலை நிகழ்ச்சியினை, பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அருண் ராஜ் தொடங்கிவைத்து, பொது மக்களுக்கு எச்.ஐ.வி / எய்ட்ஸ், பால்வினை நோய் பற்றிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரும், மாவட்ட சுகாதார அலுவலருமான டாக்டர் கீதா, மாவட்ட திட்ட மேலாளர் (பொ) சுமதி, காசநோய் துணை இயக்குநர் டாக்டர் நெடுஞ் செழியன், தேசிய சுகாதாரக் குழுமம் உதவி திட்ட அலுவலர் டாக்டர் விவேகானந்தன், ஆற்றுப் படுத்துநர் பழநிவேல் ராஜன், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பணியாளர்கள், நம்பிக்கை மைய ஆலோசகர்கள், எச்.ஐ.வி சேவைப் பிரிவு தொண்டு நிறுவனர் பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post பெரம்பலூர் மாவட்டத்தில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மூலம் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Palakkarai ,Tamil Nadu State AIDS Control Association ,District AIDS Prevention and Control Office ,
× RELATED சென்னை மெட்ரோ 2ம் கட்ட திட்டத்திற்கு ரூ.2,000 கோடி கடன் வழங்க ADB ஒப்புதல்!