×

எடப்பாடி பழனிசாமி மீது முத்தரசன் தாக்கு தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் திட்டங்களுக்கு கையெழுத்திட்டவர்

சென்னை: தமிழக மக்களின் உரிமைகளைப் பறிக்கும் திட்டங்களுக்கு கையெழுத்திட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இது குறித்து முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன் வைத்த “தமிழகத்தை மீட்போம்“ என்ற அரசியல் முழக்கத்தை, இன்று காலப்பொருத்தம் இல்லாமல் முழங்கி வருகிறார். பாஜவோடு இனி எந்த காலத்திலும் அதிமுக கூட்டணி அமைக்காது என பெருந்திரளாக கூடிய, மக்கள் மன்றத்தில் உறுதியளித்த, இவரது குல விளக்கு ‘அம்மா’வின் வார்த்தைகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டு, மோடி – ஷா கூட்டணிக்கு கூழைக் கும்பிடு போட்டு ஓடியது யார் என்பதை நாடு மறந்துவிடவில்லை.

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் ஜிஎஸ்டி வரி, உணவு பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம் எல்லவற்றையும் உறுதியாக எதிர்த்து குரல் கொடுத்த ‘அம்மா’ சமாதியின் ஈரம் காயும் முன்பு, இடுப்பில் துண்டு கட்டி, வாய் மூடி, ஒன்றிய அரசு நீட்டிய தாள்களில் எல்லாம் கையெழுத்து போட்டு, தமிழகத்தை வஞ்சித்து, மக்களுக்கு துரோகமிழைத்தவர் எடப்பாடி பழனிசாமி. மக்களின் உரிமைக்காக போராடும் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் மாநிலச் செயலாளரான என்னை பற்றி பேசுவதற்கு தகுதி படைத்தவரா என்பதை ஆயிரம் முறை யோசிக்க வேண்டும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் முகவரி இழப்பது யார் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்பதை சுட்டிக்காட்டி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடிக்கு நாவடக்கம் தேவை என்பதை காலத்தில் எச்சரிக்கிறோம். எடப்பாடியின் குல விளக்கு ‘அம்மா’வின் வார்த்தைகளை குப்பை தொட்டியில் வீசிவிட்டு, மோடி-ஷா கூட்டணிக்கு கூழைக் கும்பிடு போட்டு ஓடியது யார் என்பதை நாடு மறந்து விடவில்லை.

The post எடப்பாடி பழனிசாமி மீது முத்தரசன் தாக்கு தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் திட்டங்களுக்கு கையெழுத்திட்டவர் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Edappadi Palaniswami ,Tamil Nadu ,Chennai ,Communist Party of India ,state secretary ,AIADMK ,general secretary ,Edappadi ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி