×

மாங்கனி திருவிழாவை ஒட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

காரைக்கால்: காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவை ஒட்டி, நாளை (ஜூலை 10) காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார். புனிதவதியார் என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் பிறந்த ஊரில் அவருக்கு ஆலயம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இங்கு காரைக்கால் அம்மையாரே, மூலவராக இருக்கிறார். அடியாராக வந்த ஈசனுக்கு சாப்பிட புனிதவதி மாங்கனி படைத்ததையும், புனிதவதிக்கு சிவபெருமான் மாங்கனி அருளியதையும் நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஆனி மாத பௌர்ணமியையொட்டி இவ்வாலயத்தில் மாங்கனித் திருவிழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாங்கனி திருவிழா நேற்று தொடங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இவ்விழாவின் காரைக்கால் மட்டுமல்லாது, பல்வேறு ஊர்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பக்தர்களுக்கு மாம்பழங்களை பொழியும் ‘மாங்கனித் திருவிழா’ நாளை நடைபெறவுள்ளதையொட்டி, காரைக்கால் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி விழாவைக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. மாங்கனித் திருவிழா 08.07.2025 முதல் 11.07.2025 வரை பிரமாண்டமாகக் கொண்டாடப்பட உள்ளது. தெய்வங்களின் புனிதத் திருக்கல்யாணம் 09.07.2025 அன்று நடைபெற உள்ளது. மேலும் பக்தர்களுக்கு மாம்பழங்களை பொழியும் மங்களகரமான நிகழ்வு 10.07.2025 (வியாழக்கிழமை) அன்று நடைபெற உள்ளது.

இந்தச் சூழ்நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுடன், அருள்மிகு காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக காரைக்கால் பகுதிக்கு 10.07.2025 அன்று உள்ளூர் விடுமுறை (அரசு அலுவலகங்கள்/நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள்) அறிவிக்கப்படுகிறது. அதற்கு ஈடு செய்யும் வேலை நாளாக 19.07.2025 (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மாங்கனி திருவிழாவை ஒட்டி காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை: அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karaikal ,district ,Mango festival ,Minister ,Namachivayam ,Karaikal Ammaiyar Temple ,Karaikal Ammaiyar ,Punitavathiyar ,Dinakaran ,
× RELATED அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு...