புதுடெல்லி: உலக வங்கியின் சமீபத்திய தரவுகளின்படி, இந்தியா உலக அளவில் மிகவும் சமத்துவமான சமூகங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. 25.5 என்ற ஜினி குறியீட்டுடன் (ஜினி இண்டெக்ஸ்) வருமான சமத்துவத்தில் உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக வங்கி ஏப்ரலில் இந்தியாவிற்கான அதன் வறுமை மற்றும் சமத்துவ குறியீட்டை வெளியிட்டது. அதன் பிறகு, இந்தியாவில் வறுமை மற்றும் சமத்துவமின்மை குறித்து உலக வங்கி வெளியிட்ட பல எச்சரிக்கை அறிகுறிகளை அடையாளம் காணும் ஒரு அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டது.
இந்த அறிக்கை வெளியான மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஜூலை 5ல் பத்திரிகை தகவல் பணியகம் (பிஐபி) ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில், இந்தியா உலகின் மிகவும் சமத்துவமான சமூகங்களில் ஒன்றாகும் என்ற அதிர்ச்சியூட்டும் வகையில் தொடர்பில்லாத கூற்றை வெளியிட்டது. உலக வங்கி அறிக்கையை பகுப்பாய்வு செய்வதில் மோடி அரசு அலட்சியம் காட்டியது. அது முற்றிலும் அறிவுபூர்வமாக நேர்மையற்றது, மோசடித்தனமானது.
பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வருமான சமத்துவம் மிகவும் மோசமாக உள்ளது. 2019ல் மொத்தம் 216 நாடுகளில் இந்தியா 176 வது இடத்தில் உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியா 4 வது மிகவும் சமமான சமூகம் அல்ல – அது உண்மையில் உலகின் 40 வது மிகவும் சமமற்ற சமூகமாகும்.
இந்தியாவில் செல்வ சமத்துவமின்மை வருமான சமத்துவமின்மையை விட அதிகமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
The post உலகின் மிகவும் சமத்துவ நாடு இந்தியா என்பது மோசடித்தனமானது: ஜெய்ராம் ரமேஷ் தாக்கு appeared first on Dinakaran.
