ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு செய்தாலே பொருட்களை வழங்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைகளில் பொருட்கள் வினியோகம் செய்யும்போது ஒன்றிய அரசு திட்ட அரிசிக்கு ஒரு முறையும், மாநில அரசு திட்ட பொருட்களுக்கு ஒரு முறையும் என மொத்தம் 2 முறை ரேஷன் அட்டைதாரர்கள் கைவிரல் ரேகை பதிவு வைக்க வேண்டும். இதனால், பொருட்கள் வினியோகம் செய்வதில் பெருமளவில் காலவிரயம் ஏற்பட்டு வந்தது.

ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு அட்டைதாரர்கள் அதிக நேரம் காத்திருப்பதை கருத்தில் கொண்டு கால விரயத்தை குறைக்க தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் முக்கியமான ஒரு நடவடிக்கையாக முன்னுரிமை ரேஷன் அட்டைகள் (பி.எச்.எச்.) மற்றும் முன்னுரிமைக் ரேஷன் அட்டைகள் – அந்தியோதயா அன்ன யோஜனா (பி.எச்.எச்.-ஏ.ஏ.ஒய்.) ஆகிய ரேஷன் அட்டைகளுக்கு இனி பொருட்களை வழங்க ஒரே ஒரு முறையே கைவிரல் ரேகை அல்லது கண் கருவிழி பதிவு செய்தால் போதும் என்ற வகையில் மின்னணு விற்பனை எந்திரத்தில் (pos) மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அனைத்து பொருட்களும் குறைந்த நேரத்தில் வழங்கப்படுவதால் ரேஷன் அட்டைதாரர்கள் காத்திருக்கும் நேரம் கணிசமாக குறைந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்பெல்லாம் முன்னுரிமை அட்டைதாரர்களுக்கு 2 முறை கைவிரல் ரேகை பதிவு செய்வதால் நேரம் விரையம் ஆகும்.

ஆனால், தற்போது அது ஒருமுறை வைத்தாலே மத்திய அரசு மற்றும் மாநில அரசு திட்ட பொருட்களை வழங்க முடியும் என்பதால் பொருட்களை எளிதாகவும், உடனடியாகவும் வழங்க முடிகிறது. இதனால் வழக்கத்தை விட சுமார் 20 முதல் 25 ரேஷன் அட்டைகளுக்கு கூடுதலாக பொருட்களை வழங்க முடிகிறது என்று ரேஷன்கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

The post ரேஷன் கடைகளில் இனி ஒருமுறை கைவிரல் ரேகை பதிவு வைத்தால் போதும்: தமிழக அரசு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: