×

கூடலூர் அருகே 5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 105வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம்

கூடலூர்: இலங்கையில் இருந்து கடந்த 1977ல் மாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி, நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்த நாடுகாணியில் வந்து மெய்யாத்தா என்கிற சீனி பாட்டி குடியேறி உள்ளார். இவரது கணவர் தங்கையா 1963ல் இறந்துவிட்டார். இவருக்கு 5 மகன்கள், 2 மகள்கள். தற்போது 2 மகன்கள், ஒரு மகள் மட்டுமே உயிருடன் உள்ளனர். இவரது மகன் மற்றும் மகள்களின் வாரிசுகள் 16 பேர் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் ஆகி 25க்கும் மேற்பட்ட வாரிசுகளும், அவர்களில் திருமணமானவர்களுக்கு 5க்கும் மேற்பட்ட வாரிசுகளும் உள்ளனர். மகன், மகள்கள், பேத்திகள், கொள்ளுப்பேத்திகள், எள்ளுப்பேத்திகள் என ஐந்து தலைமுறைகளை சீனி பாட்டி இதுவரை கண்டுள்ளார். இலங்கை ஊவா மாகாணம் பண்டாரவளையை அடுத்த டயரபா தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக பணி புரிந்த காலத்தில் அங்குள்ள பெண்களுக்கு பிரசவம் பார்த்து குழந்தைகளை பராமரித்து கொடுத்து வந்துள்ளார்.

இதேபோல் நாடுகாணியில் குடி வந்த பின்னும் சுற்றுவட்டாரத்தில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்த்து, குழந்தைகளைபராமரித்து உள்ளார். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் குறிப்பிட்ட காலங்களில் தண்ணீர் ஊற்றுதல் உள்ளிட்ட பணிவிடைகளையும் செய்து வருகிறார். வழக்கமாக கிடைக்கும் உணவுகளையே தான் சாப்பிடுவதாகவும், பிறருக்கு உதவி செய்தல், அன்பாக இருத்தல், அமைதியான மனநிலை போன்ற காரணங்களே தனது நீண்ட நாள் வாழ்க்கையின் ரகசியம் என்கிறார் சீனி பாட்டி. நேற்று முன்தினம் இவரது 105 வது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை கிராம மக்கள் திரண்டு கேக் வெட்டி கொண்டாடினர். விழாவில் அவரது ஒரு மகன், மகள் மற்றும் பேரன், பேத்திகளுடன் கலந்து கொண்டனர்.

 

The post கூடலூர் அருகே 5 தலைமுறை கண்ட மூதாட்டிக்கு 105வது பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Gudalur ,Meiyaththa ,Sri Lanka ,Nadukkani ,Nilgiris district ,Tangaiya ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...