
சென்னை: தமிழகத்தில் இருந்து காஷ்மீர் சென்ற 140 சுற்றுலா பயணிகள் ரயில் மற்றும் விமானம் மூலமாக சென்னை வந்து சேர்ந்தனர். காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் 27 சுற்றுலா பயணிகளை, தீவிரவாதிகள் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 145 சுற்றுலாப் பயணிகளை தமிழ்நாடு அரசு பத்திரமாக மீட்டு, ரயில் மற்றும் விமானங்கள் மூலம் சென்னை அழைத்து வருகிறது. முதல்கட்டமாக நேற்று அதிகாலை 1.30 மற்றும் 2.30 மணியளவில் விமானங்களில் 50 பேர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து நேற்று காலை 9 மணியளவில் காஷ்மீரில் இருந்து ஐதராபாத் வழியாக சென்னை வந்த விமானத்தில் 68 பேர் வந்தனர்.
அவர்களை தமிழ்நாடு அரசின் தமிழர் நல ஆணைய அதிகாரிகள் வரவேற்று, திருச்சி, மதுரை, திருச்செங்கோடு, வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அனுப்பி வைத்தனர். காஷ்மீரில் இருந்து அழைத்து வரப்பட்ட தமிழக சுற்றுலா பயணிகள் கூறியதாவது: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ராணுவ அதிகாரிகள் எங்களை பத்திரமாக மீட்டு மலைக்கு கீழே அழைத்து சென்றனர். தமிழ்நாடு அரசு அதிகாரிகள் எங்களை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர். தமிழகம் வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். எங்களுடன் சுற்றுலா வந்திருந்த சந்துரு என்பவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் முதல்வர் ஆகியோர் நேரில் சென்று, நலம் விசாரித்து ஆறுதல் கூறினர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மதுரையைச் சேர்ந்த ஜோதி கூறுகையில், ‘‘நாங்கள் இருந்த பகுதிக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் தாக்குதல் சம்பவம் நடந்தது. ராணுவத்தினர் எங்களை பத்திரமாக மீட்டு, பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர். எங்களை பத்திரமாக மீட்ட இந்திய ராணுவத்திற்கும், பாதுகாப்பாக அழைத்து வந்த தமிழ்நாடு அரசுக்கும் நன்றி. அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளை, நிற்க வைத்து சுட வேண்டும்’’ என்றனர். திருச்சியை சேர்ந்த நடராஜன் கூறுகையில், ‘‘தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து 3 கி.மீ அருகில் இருந்தோம். தாக்குதல் நடந்தவுடன் காஷ்மீர் மக்கள்தான், முதலில் எங்களுக்கு உதவி செய்தனர். அதன் பிறகு ஓட்டுநர்கள் அனைவரும் எங்களை பாதுகாப்பாக கீழே இறக்கி கொண்டு வந்தனர். காஷ்மீரில் இந்து, முஸ்லிம்கள் வேறுபாடுகள் இல்லை. அனைவரையும் அன்பாகவும் மனிதநேயத்துடனும் பார்த்துக் கொள்கிறார்கள்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, அவர்களின் வாழ்வாதாரம், சுற்றுலா பயணிகளால் பெருகி வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது. தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொல்ல வேண்டும்’’ என்றார். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் வள்ளலார் கூறுகையில், ‘‘தமிழக அரசு சார்பில் காஷ்மீர் சென்ற சுற்றுலா பயணிகளில் முதற்கட்டமாக 50 பேர் சென்னை வந்தனர். அவர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்பொழுது இரண்டாம் கட்டமாக நேற்று சென்னை வந்த 68 பேரும் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த இருவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல், மாரடைப்பு ஏற்பட்ட ஒருவரும் சிகிச்சையில் உள்ளார். இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 140 சுற்றுலா பயணிகள் ரயில் மற்றும் விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்’’ என்றார்.
டாக்டர் பரமேஸ்வரன் உடல்நலம் குறித்து முதல்வர் விசாரித்தார்
தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பஹல்காமில் கடந்த 22ம் தேதி நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டை சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டனர். தகவல் கிடைத்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டார். அதன்படி, உதவி மையம் செயல்பட்டு வருகிறது. தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி டாக்டர் பரமேஸ்வரன் ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் நேற்று மதியம் டெல்லி வந்தடைந்தார். தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் ஆஷிஷ் குமார் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று டாக்டர் பரமேஸ்வரனின் மனைவி டாக்டர் நயன்தாராவிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, பரமேஸ்வரனின் உடல்நிலை குறித்தும், சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழ்நாடு அரசு மூலம் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். இதற்காக முதல்வருக்கு டாக்டர் நயன்தாரா நன்றி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 பேர் டெல்லி தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு நேற்று ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களை அழைத்து வரும் பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து நடந்து வருகிறது என கூறப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் இருந்து காஷ்மீர் சென்ற 140 சுற்றுலா பயணிகள் சென்னை திரும்பினர்: ‘தீவிரவாதிகளை நிற்க வைத்து சுட வேண்டும்’ என ஆவேசம் appeared first on Dinakaran.
