
சேலம்: ஆட்சியில் பாஜவிற்கு பங்கு இல்லை என அமித்ஷாவிற்கு எழுத்து பூர்வமாக தெரிவிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா என பெங்களூரு புகழேந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பெங்களூரு புகழேந்தி நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: தேர்தல் ஆணையத்தில் இருந்து எனக்கு கடிதம் வந்துள்ளது. வருகிற 28ம் தேதி இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணைக்காக டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்திற்கு நேரில் வரவேண்டும் என்று அழைப்பானை வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி செய்துள்ள தவறுகள் எல்லாம் ஆதாரத்துடன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் நீதி கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தை நாடும் நிலை ஏற்படும். ஜெயலலிதா பாஜவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்று தெரிவித்திருந்தார். அதேபோல் எடப்பாடியும் இதுவரை பாஜவுடன் கூட்டணி இல்லை என்று கூறி விட்டு இப்போது ஈ.டி., ஐ.டி.,க்கு பயந்து பாஜவுடன் கூட்டணியில் சேர்ந்துள்ளார்.
இன்று (நேற்று) தம்பிதுரை கூட்டணி ஆட்சி கிடையவே கிடையாது என்று தெரிவித்துள்ளார். ஏன்? அமித்ஷா கூட்டணி குறித்து அறிவித்த போதும், அமைச்சரவையில் பாஜ இடம்பெறும் என்றபோதும் யாரும் வாய் திறக்கவில்லை. தற்போது புதிய தமிழகம் கிருஷ்ணசாமி ஆட்சியில் பங்கு கொடுத்தால்தான் சேருவோம் என தெரிவித்துள்ளார். பொதுக்குழு, செயற்குழுவுக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை கொடுத்தாரா?. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு ஜெயலலிதா கமிட்டி போடுவார். இவர் கமிட்டி போட்டாரா?. சசிகலா, பன்னீர்செல்வம் என்டிஏ கூட்டணியில் இருப்பதாக டி.டி.வி. தினகரன் கூறுகிறார். ஆனால் அவர்கள் இந்த கூட்டணியில் இருப்பதாக வேறு யாரும் கூறவில்லை. இவர்களை கூட்டணியில் சேர்க்க கூடாது என தெரிவித்த பின்பு தான் அதிமுக, பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
ஒரு வேளை அதிமுக வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி கிடையாது, அமைச்சரவையில் அதிமுக மட்டும் தான் இடம்பெறும். பாஜவுடன் கூட்டணி மட்டும்தான் என்று எடப்பாடி பழனிசாமி கையொப்பமிட்டு அமித்ஷாவுக்கு கடிதமாகவோ, மெயில் மூலமாகவோ அனுப்ப தயாரா? 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி தொகுதியில் நான் போட்டியிட தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
எடப்பாடியும்… ஓடாத ஸ்கூட்டரும்….
பேட்டியின்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜ ஓடாத ஸ்கூட்டர் என்று முன்பு கூறியிருந்தார். அந்த ஓடாத ஸ்கூட்டருடன் தான் எடப்பாடி பழனிசாமி கூட்டணி அமைத்து உள்ளார் என்று பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். இதை கிண்டல் செய்யும் வகையில், ஸ்டார்ட் ஆகாத ஸ்கூட்டரை தள்ளி கொண்டு நடப்பது போல் செய்து காட்டினார்.
The post ஆட்சியில் பாஜவுக்கு இடமில்லை என அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்புவாரா?.. எடப்பாடிக்கு பெங்களூரு புகழேந்தி கேள்வி appeared first on Dinakaran.
