×

வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் வன்முறையால் பதற்றம்; வாகனங்கள் எரிப்பு: அமைதி காக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்

 

கொல்கத்தா: வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. வன்முறையால் போலீசார் தடியடி நடத்தினர். இதனால் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் மக்கள் அமைதி காக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒன்றிய அரசு அண்மையில் வக்பு வாரிய சட்ட திருத்தத்தை நிறைவேற்றியது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக பல மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்க மாநிலத்தில் முர்ஷிதாபாத், டயமண்ட் ஹார்பர் மற்றும் டெல்லி, தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகிறது.

இதில் மேற்கு வங்கத்தில் சில நாட்களாக போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அங்குள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 11, 12ம் தேதிகளில் நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில், 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமான வீடுகள், கடைகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்நிலையில் இந்திய மதசார்பற்ற முன்னணி சார்பில் கொல்கத்தாவில் நேற்று வக்பு சட்டத்துக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னணியின் தலைவர் நவுஷாத் சித்திக் எம்எல்ஏ உரையாற்றினார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வாகனங்களில் கொல்கத்தாவுக்கு புறப்பட்டனர். அவர்களை போலீசார் வழிமடக்கி, ‘இந்த கூட்டம் அனுமதியின்றி நடத்தப்படுகிறது.

அதனால் உங்களை அனுமதிக்க முடியாது’ என்று கூறி தடுத்தனர். அதன்படி தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் போஜர்காட் பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து ஐஎஸ்எப் தொண்டர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் தடுப்பு வேலிகளை உடைத்து கொண்டு செல்ல முயன்றனர். இதனால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் போலீசாரின் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டன. இந்த மோதலில் போலீசார் உள்பட ஏராளமானோர் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசாரை கண்டித்து போராட்டக்காரர்கள் அந்த தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இதற்கிடையே, போராட்டத்தை கட்டுப்படுத்த உயரதிகாரிகள் மற்றும் ஏராளமான போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இந்த போராட்டம் மற்றும் வன்முறையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்கள் அமைதி காக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பொதுமக்கள் சட்டம்- ஒழுங்கை தங்கள் கையில் எடுக்க வேண்டாம். மதத்தை வைத்து தேவையில்லாத விளையாட்டுக்கள் விளையாட கூடாது. தர்மம் என்றால் பக்தி, பாசம், மனிதநேயம், அமைதி, நட்பு, கலாச்சாரம், நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை சக மனிதர்களை நேசிப்பதாகும். மனிதர்களை நேசிப்பது எந்த ஒரு மதத்தினுடைய உயரிய வெளிப்பாடாகும். நாம் தனியாக பிறந்தோம். தனியாக இறக்க போகிறோம். இதில் ஏன் நாம் சண்டை போட வேண்டும்? ஏன் வன்முறை, அமைதியின்மை’ என்றார்.

The post வக்பு வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் வன்முறையால் பதற்றம்; வாகனங்கள் எரிப்பு: அமைதி காக்கும்படி முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : West Bengal ,Mamata Banerjee ,Kolkata ,Chief Minister ,Mamta Banerjee ,Union ,Dinakaran ,
× RELATED முதல்வர் மம்தா விடுத்த வேண்டுகோளை...