×

நான் வடிவேலுவின் ரசிகன்: மாமன்னன் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் நெகிழ்ச்சி

சென்னை: உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில், லால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் மாமன்னன். பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரித்துள்ளது. படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இது என் கடைசி படம் என்று சொல்லித்தான் மாரி செல்வராஜிடம் கதை கேட்டேன். வடிவேலு, ஏ.ஆர்.ரகுமான் கால்ஷீட் வாங்கினேன். அடுத்து கமல் சார் தயாரிப்பில் ஒரு படம் நடிப்பதாககூட இருந்தது. மாரி செல்வராஜ் கதை சொன்னதும் மாமன்னன் கேரக்டருக்கு வடிவேலு நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். அவர் நடிப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.

வடிவேலுவிடம் பரியேறும் பெருமாள், கர்ணன் படத்தை பாருங்கள் அந்த படங்களை இயக்கியவர்தான் இந்தப் படத்தை இயக்க உள்ளார். உங்களின் வழக்கமான கேரக்டராக இது இருக்காது என்று சொன்னேன். பிறகு வடிவேலுவிடம் கதை சொல்ல மாரி செல்வராஜை அனுப்பினேன். கதையை கேட்டதும் வடிவேலு ஒப்புக் கொண்டார். 80 நாளில் முடிப்பதாக இருந்த படம் 110 நாளில் முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார். கமல்ஹாசன் பேசியதாவது: நான் இந்த படத்தை பார்த்துவிட்டேன். இந்தியா எந்த வழியில் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கிற தலைமுறை இப்போது இருக்கிறது. அவர்களுக்கான படம் இது. வடிவேலு அறிமுகமானபோது அவரின் முதல் ரசிகனாக நானும், இளையராஜாவும் இருந்தோம். தேவர்மகன் படத்தில் அவரை நடிக்க வைத்தேன். கிளைமாக்ஸ் காட்சியில் எனது நடிப்பையும் சேர்த்து தாங்கிப் பிடித்தவர் வடிவேலு.

படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் அழகாக இருப்பதாக சொன்னார்கள். கொஞ்சம் மேக்அப் போட்டுவிட்டால் அழகாகி விடலாம். அது பெரிய விஷயம் இல்லை. அவரிடம் அழகோடு அறிவும் சேர்ந்திருக்கிறது. அதனால்தான் இதுபோன்ற படங்களை அவரால் தேர்வு செய்து நடிக்க முடிகிறது. மாரி செல்வராஜ் தனது படங்களில் எதிர்தரப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். சமமான இடம் கொடுக்கிறார், அதுதான் அவரது சிறப்பு. நாம் ஒருவரை, ஒரு தரப்பை எதிர்த்து சண்டைபோடும்போது கோபம் மட்டும் இருக்க கூடாது. நம் தரப்பில் நியாயமும் இருக்க வேண்டும். அது மாரி செல்வராஜ் படத்தில் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் மூன்று தலைமுறைகளை ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தன்னை தானே விமர்சித்து கொண்டு தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். இவ்வாறு கமல் பேசினார்.

வடிவேலு பேசியதாவது: இந்த படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடவேண்டும் என்றார்கள். எனக்கு தயக்கமாக இருந்தது. நான்பாட்டுக்கு ஒரு ஓரமா ஏதோ பாடிக்கொண்டிருக்கிறேன். ரஹ்மான் பழைய இரும்பு கடையில் சாமான் வாங்கிட்டு வர்ற மாதிரி ஆஸ்கர் விருதை அள்ளிகிட்டு வந்து அம்மா காலடியில போட்டவரு. அவர்கிட்ட மாட்டி விட்டுறாதீங்கன்னு சொன்னேன். உதயநிதியும், மாரி செல்வராஜும் என்னை வற்புறுத்தி ரஹ்மானிடம் அனுப்பி வைத்தார்கள். ரஹ்மானும் எனக்கு நிறைய டெஸ்டுகள் எடுத்து, கிளிபிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி சொல்லிக் கொடுத்து பாட வைத்தார். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி, கவின், சூரி, கதிர் இயக்குனர்கள் வெற்றி மாறன், மிஷ்கின், பாண்டிராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், பா.ரஞ்சித், கே.எஸ்.ரவிகுமார், கிருத்திகா உதயநிதி, தியாகராஜன் குமாரராஜா, ரவிகுமார், ஏ.எல்.விஜய், பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, கே.ராஜன், முரளி ராமசாமி, போனி கபூர், கேயார், இசை அமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரஹ்மான், சந்தோஷ் நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நான் வடிவேலுவின் ரசிகன்: மாமன்னன் பாடல் வெளியீட்டு விழாவில் கமல் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Udhayanidhi Stalin ,Keerthy Suresh ,Vadivelu ,Bhagat Basil ,Lal ,Mari Selvaraj ,Pariyerum Perumal ,Karnan ,Theni Iswar ,AR Rahman.… ,Leschi ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஆற்றல்மிகு செயல்வீரர் புகழேந்தியின்...