இந்த நிலையில் திமுக எம்பியான ஆ.ராசா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேற்று ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா என்பது இந்திய அரசியலைமைக்கு எதிரானது ஆகும். இதனால் சிறுபான்மையினர் மிகவும் பாதிப்படைவார்கள். இஸ்லாமியர்களின் சொத்துக்களை சட்டத்திற்கு புறம்பான முறையில் பறிமுதல் செய்யும் சட்டமாகும். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டமானது மதரீதியான பிரச்சனைகளை எழுப்புவது மட்டுமில்லாமல், தேசிய அளவிலான பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். இதனால் சட்டம் ஒழுங்கில் மிகப்பெரிய பிரச்னை நாடு முழுவதும் ஏற்படும். எனவே இந்த விவகாரத்தில் நீதி வேண்டும் என்பதே எங்களது வழக்கின் முக்கிய சாராம்சமாக உள்ளது.
மேலும் வக்பு வாரிய திருத்த சட்டம் இஸ்லாமியர்களின் சிறுபான்மை சமூகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை மோசமாக பாதிக்கும். இதுகுறித்து ஒன்றிய அரசை வலியுறுத்தி கடந்த மாதம் 27ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா-2025, நாடாளுமன்ற கூட்டுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய ஆட்சேபனைகளை முறையாக கருத்தில் கொள்ளாமலும், அதில் இருந்த திருத்தம் நிறைவேற்றிட பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும், ஒன்றிய அரசால் வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. குறிப்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுக எம்.பி.க்கள் தரப்பில் எழுப்பப்பட்ட கருத்துக்கள் எதுவும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. வக்பு சட்ட திருத்தம் 2025, அமலுக்க வந்த கடந்த 6ம் தேதியில் இருந்து இஸ்லாமிய சிறுபான்மை சமூகத்தின் அடிப்படை உரிமைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது தமிழ்நாட்டில் உள்ள சுமார் 50 லட்சம் இஸ்லாமியர்களின் உரிமைகளையும், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 20 கோடி இஸ்லாமியர்களின் உரிமைகளையும் மீறுவது மட்டுமில்லாமல், பாரபட்சம் காட்டுகிறது என்பதையும் உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறும் வகையிலும், அதற்கு எதிராகவும் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா இருக்கிறது. எனவே ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக ஒன்றிய அரசு கடந்த 6ம் தேதியன்று கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத் திருத்தத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதிப்பதோடு, அதனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் விரைவில் அவரச வழக்காக பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வக்பு வாரிய சட்டத் திருத்தத்திற்கு எதிராக 12க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post அரசியல் சாசனத்திற்கு எதிரான வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து திமுக வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.