×

இளம் பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி: தமிழ்நாடு அரசுக்கு சவுமியா சுவாமிநாதன் பாராட்டு

சென்னை: 14 வயதுடைய பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி போடுவதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்திருப்பது சிறந்த முன்னெடுப்பு என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் பாராட்டியுள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் சார்பில் (பிக்கி) (FICCI) பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், பிக்கி மகளிர் பிரிவின் தலைவர் திவ்யா அபிஷேக், துணைத் தலைவர் விஜய் சங்கர் ஆகியோர் இணைந்து விருது வழங்கி சிறப்பித்தனர்.

பின்னர் சவுமியா சுவாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாடு, பொது சுகாதாரத் துறையில் முன்னேறி இருக்கிறது. சுகாதார துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். தனியாரை விட பொது சுகாதாரத் துறை சிறப்பாக உள்ளது. கேன்சர் அதிகரிக்க வாழ்வியல் முறைகள்தான் காரணம். உணவு பழக்க வழக்கங்கள் மாறிவிட்டது. நல்ல காய்கறிகள், சத்தான பழங்களை நாம் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்கள் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் தவிர்ப்பதற்கு எச்பிவி தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக 14 வயதுடைய பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி போட உள்ளதாக தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது மிகவும் சிறப்பான ஒரு அறிவிப்பு, சிறந்த முன்னெடுப்பும் கூட. இரண்டு தடுப்பூசிகள் மிக முக்கியமானது. ஒன்று எச்பிவி, இது நோய் தடுப்புக்கானது. மற்றொன்று ஹெப்படைடிஸ் பி, இது கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post இளம் பெண்களுக்கு எச்பிவி தடுப்பூசி: தமிழ்நாடு அரசுக்கு சவுமியா சுவாமிநாதன் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Soumya Swaminathan ,Tamil Nadu government ,Chennai ,Former ,Chief Scientist ,World Health Organization ,Indian Ministry of Commerce and Industry ,Nungambakkam, Chennai… ,
× RELATED முன் அறிவிப்பின்றி விடுப்பு...