மனச் சிக்கலை நீக்கும் தலம்!

சோழநாட்டுத் திருத்தலங்களைப் பாடிக்கொண்டே வந்த திருமங்கையாழ்வார் சிறுபுலியூர் தலத்தை தரிசித்து 10 பாசுரங்கள் பாடி இருக்கின்றார். அதில் ஒரு அற்புதமான பாசுரம் இது.
கருமாமுகிலுருவா கனல் உருவா புனல் உருவா
பெருமாள் வரையுருவா, பிறவுருவா, நினதுருவா
திருமாமகள் மருவும் சிறுபுலியூர்ச்
சலசயனத்து
அருமா கடலமுதே உனதடியே
சரணாமே

“பெருமாளே! என் கண்களுக்கு நீ எப்படிக் காட்சி தருகிறாய், தெரியுமா?. கரிய மேகநிறத்திலும், நீர், நெருப்பு, மலை போன்ற பிற உருவங்களிலும் காட்சி தருகிறாய். திருமகள் விரும்பி உறையும் சிறுபுலியூர்த் தலமாகிய இந்த ஊரில்,அருட்கடலாகிய அமுதமாக விளங்குகிறாய். உனது திருவடிகளே எனக்கு அடைக்கலமென்பது நான் சரண் புகுகின்றேன்” என்று பெருமாளிடம் திருமங்கையாழ்வார் சரண் அடைந்த அற்புதமான திருத்தலம் இது. அண்மையில் அற்புதமான முறையில் குடமுழுக்கு (சம்ப்ரோஷணம்) கண்ட திருக்கோயில்.இத்தலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்தில் ஏறி, கொல்லுமாங்குடி என்ற சிற்றூரில் இறங்கி, 2 மைல் நடந்து சென்றால் இத்தலத்தை அடையலாம். திருவாரூர் போகும் எந்த பேருந்திலும் இத்தலத்தை அடையலாம். இந்த ஊர் மிகச் சிறிய ஊர் என்பதால் தங்குவதற்கு யாதொரு வசதியு மில்லை. எனவே மயிலாடுதுறை அல்லது திருவாரூரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டு பெருமாளை வழிபட்டு நண்பகலுக்குள் திரும்பிவிடலாம்.

தல வரலாறு

இத்தலத்தைப்பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது. ஒரு காலத்தில் கருடனுக்கும், ஆதிசேஷனுக்கும் தம்மில் யார் பெரியவர் என்று போட்டி ஏற்பட்டது. ஒருவரை வாகனமாகவும் ஒருவரைப் படுக்கும் படுக்கையாகவும் கொண்ட பெருமாள் இவர்கள் சண்டையிடாத வண்ணம் சாமாதானப்படுத்துவதற்காக ‘‘பாலசயனத்தில்’’ எழுந்தருளிய தலம் இதுவென்பது வரலாறு.வியக்கிரபாதர் என்னும் முனிவர் சிதம்பரத்தில் தவமியற்றி தனக்கு மோட்சம் வேண்டுமென்று நடராஜரிடம் கேட்க, மோட்சம் கொடுக்க வல்லவர் மகாவிஷ்ணுவே என்று, சிவலிங்க ரூபமாக வழிகாட்ட, அவரை பின்பற்றுவதற்கு தாம் பெற்ற வலிமையால் விரைந்து செல்லும் புலியின் கால்களால் இத்தலத்திற்கு வந்து சேர்ந்து முக்திபெற்றதால் இதற்குச் சிறுபுலியூர் எனப் பெயர்.

ஆலய அமைப்பு

அழகான ராஜகோபுரம் நம்மை வரவேற்கும். உள்ளே சிறு சிறு மண்டபங்கள். ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மரம், பலி பீடம், கருடாழ்வார் சந்நதி ஆகியவை உள்ளன. அடுத்து உட்கோபுரமான சிறிய கோபுரம் உள்ளது. மூலவர் கருவறை கோஷ்டத்தில் விநாயகர், பெருமாள், விஷ்ணு துர்க்கை ஆகியோர் உள்ளனர். விஷ்வக்சேனர் உள் திருச்சுற்றில் உள்ளார். மூலவர் சந்நதி முன் வலது புறம் பள்ளியறை உள்ளது. வெளித்திருச்சுற்றில் ஆண்டாள் சன்னதி, பால அனுமார் சன்னதி, திருமாமகள் தாயார் சன்னதி, ஆழ்வார் சந்நதி, யாகசாலை, திருமடைப்பள்ளி, திருவாய்மொழி மண்டபம்
ஆகியவை உள்ளன.

பெருமாள் கருவறையில் அழகாகக் காட்சி தருகிறார். பார்க்கப் பரவசமாக இருக்கும். தெற்கே திருமுக மண்டலம். புஜங்க சயனம். சலசயனப் பெருமாள் என்று திருநாமம். உற்சவர் உபய நாச்சிமார்களோடு காட்சி தருகிறார்.கிருபா ஸமுத்திரப் பெருமாள் என்று வடமொழியிலும், அருள்மாகடல் என்று தமிழிலும் திருநாமம். இவரைத்தான் அருள்மா கடல் அமுதே என்று திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார்.தாயார் திருநாமம் திருமாமகள் நாச்சியார். உற்சவர் திருநாமம் தயா நாயகி. வருகின்ற பக்தர்களின் குறை தீர்க்கக்கூடிய தயாபரி அல்லவா. இங்குள்ள தீர்த்தம் மானஸ புஷ்கரிணி என்ற பெயரிலும், கருவறை விமானம் நந்தவர்த்தனம் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறது. இந்தப் பெருமாளை வியாஸர், வியாக்ர பாதர் ரிஷிகள் தரிசித்து இருக்கிறார்கள்.

அனந்தனுக்குத் தனிச் சந்நிதி

திருமங்கை ஆழ்வார் பெருமாளை புஜங்கசயனத்தில் மிகச்சிறிய உருவமா யிருந்ததைக் கண்டு, “பெரிய திருவுருவத்தில் அல்லவா சேவிக்க வந்தேன்” என்று சொல்ல, பெருமாள் “உமது குறைதீர நமது மிகப்பெரிய உருவை திருக்கண்ணமங்கையில் காணும்” என்று அருளிச் செய்த தலம். கருடனுக்கு அபயமளித்த இடம்.இங்கு பூமிக்குக் கீழ் கருடனுக்கு சந்நதியும், மிக உயர்ந்த இடத்தில் ஆதி சேஷனுக்கும் சந்நதியும் உள்ளது. ஆதிசேஷ சந்நதிக்கு ராகு- கேது தோஷம் உள்ளவர்கள் வந்து தரிசனம் செய்கின்றார்கள். ஆதிசேஷனுக்கு தனிச் சந்நதி உள்ள தலம் இது. திருமணம் நடந்து வெகுகாலம் குழந்தை இல்லாதவர்களும் இங்கே வந்து வேண்டிக் கொள்ளுகின்றார்கள்.ஸ்ரீரங்கத்தைப் போன்றே பெருமாள் தெற்கு நோக்கிய சயனம் செய்து கொண்டிருக்கிறார் திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாசுரங்களால் மங்களா சாசனம் செய்யப்பட்ட தலம். நாகதோஷ நிவர்த்தியும் புத்திர சந்தான விருத்தியும் இத்தலத்திற்கு ஏற்பட்ட தனி மகத்துவம்.இத்தலத்தின் பெருமானை பூஜித்து வைகுண்டம் அடைந்த வியக்ரபாதரை பெருமாளின் திருவடிகளுக்கு அருகிலேயே பிரதிஷ்டை செய்துள்ளனர். அவருக்கும். இங்கு வழிபாடுகள் நடக்கின்றன.

தகவல்கள்

1.அருள்மிகு கிருபாசமுத்திரப் பெருமாள் திருக்கோயில், திருச்சிறு புலியூர்- 609 801, திருவாரூர் மாவட்டம்.
2.காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
3.மூலவர்-அருமாகடலமுதன், சலசயனப்பெருமாள், உற்சவர் – கிருபா சமுத்திரப்பெருமாள், தயாநாயகிதாயார்- திருமாமகள் நாச்சியார்.
4.தல விருட்சம்-வில்வ மரம்.
5. தீர்த்தம்-திருவனந்த தீர்த்தம், மானச தீர்த்தம்.
6.ஆகமம்-பாஞ்சராத்ரம்.
7.பழமை-1000-2000 வருடங்களுக்கு முன்.
8.திருவிழா: சித்திரை பிறப்பு, வைகாசி பிரமோற்சவம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், ஆடி ஜேஷ்டாபிஷேகம், கோகுலாஷ்டமி, நவராத்திரி பவித்ர உற்சவம், ஐப்பசி மூலத்தில் மணவாள மாமுனிகள் உற்சவம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, மகர சங்கராந்தி, மாசி சுக்லபட்ச ஏகாதசி, பங்குனி உத்திரம்.
9.நேர்த்திக்கடன் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.

 

The post மனச் சிக்கலை நீக்கும் தலம்! appeared first on Dinakaran.

Related Stories: