×

விதிமுறைகளை மீறினால் சாய தொழிற்சாலை மீது நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக) பேசுகையில், “பவானி சாகர் ஆற்றங்கரை ஓரத்தில் புதிதாக ஒரு சாயத் தொழிற்சாலை ஒன்று உருவாக்குவதற்கு அரசிடமிருந்து, பணிகளைத் துவக்குவதற்கு என்ஓசி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆற்றங்கரை ஓரத்தில் 40, 50 மின்னேற்று நிலையங்கள் இருக்கின்றன. ஏறத்தாழ 40 லட்சம் பேர் அந்தக் குடிநீரைப் பயன்படுத்தி வருகின்றார்கள். ஆகவே, மக்களுக்கு இது பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் அரசு உடனடியாக இந்த சாயப்பட்டறைக்கு கொடுக்கப்பட்டிருக்கிற முன் அனுமதியை ரத்து செய்யுமா? என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், இந்த தொழிற்சாலை, பவானி ஆற்றிலிருந்து 500 மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அங்கே இருக்கக்கூடிய விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறது என்று அங்கு இருக்கக்கூடிய விவசாயப் பெருங்குடி மக்களும், அவர்களுடைய குரலை எதிரொலிக்க கூடிய வகையில் சட்டமன்ற உறுப்பினரும் அந்த இசைவு ஆணையை ரத்து செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

இந்தத் தொழிற்சாலை இயங்குவதற்கு தேவைப்படக்கூடிய நாளொன்றுக்கு 15.68 லட்சம் லிட்டரில் 15.23 லட்சம் லிட்டரை சுத்திகரிக்கப்பட்ட சாயக்கழிவு நீரிலிருந்து எடுத்து கொள்ளவும், மீதமுள்ள நாளொன்றுக்கு 45 ஆயிரம் லிட்டர் நீரினை மட்டும்தான் பவானி ஆற்றிலிருந்து எடுத்துக் கொள்ள விரிவாக்க இசைவு ஆணைகள் பெற்றிருக்கிறார்கள். கழிவுநீரை நீர்நிலைகளில் வெளியேற்றவோ அல்லது விவசாய நிலங்களிலே விவசாயத்திற்கு உபயோகப்படுத்தவோ நிச்சயமாக அதற்கு அனுமதி கிடையாது.

இந்தத் தொழிற்சாலை மற்றும் சுற்றியுள்ள இடங்களில் நிலத்தடி நீர் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மாதிரிகளைச் சேகரித்து வாரியம்மூலம் அதைக் கண்காணிக்க வேண்டுமென்றும் நாங்கள் சொல்லியிருக்கிறோம். இந்த விதிமுறைகளை எல்லாம் அவர்கள் மீறக்கூடிய பட்சத்தில் நிச்சயமாக அந்தத் தொழிற்சாலைகளில் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்” என்றார்.

The post விதிமுறைகளை மீறினால் சாய தொழிற்சாலை மீது நடவடிக்கை: அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Minister ,Thangam ,Southern Government ,K.A. Sengottaiyan ,AIADMK ,NOC ,Bhavani Sagar river ,Dinakaran ,
× RELATED பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக உரிய...