காதலின் தேக்கநிலை!
நன்றி குங்குமம் தோழி
பிப்ரவரி என்றாலே காதலர்களுக்கான மாதமாக மனதில் பதிந்துவிட்டது. ‘காதல்’ என்கிற வார்த்தை கொடுக்கும் மாயாஜாலத்தை மனிதனால் எப்பொழுதும் உணர மட்டுமே முடிகிறது. நாம் நேசிக்கிறோம் அல்லது நேசிக்கப்படுகிறோம் என நினைக்கும் நொடியில் ஒருவித மயக்க நிலைக்குள் மனம் இருக்கும்.திருமண பந்தத்தில், ஆண்/பெண் ஈர்ப்பில் காதல் என்ற உணர்வு குறைந்து வருவது போல் ஒரு தோற்றம் இப்போது இருக்கிறது. ஏனெனில் திரைப் படங்களில் காண்பிக்கப்படும் காதலும், நிஜ வாழ்க்கையில் பார்க்கும் காதலும் முற்றிலும் வேறானதாய் இருக்கிறது. அதிலும் சமூகம் கட்டமைத்துள்ள காதல் என்கிற வரைமுறையை, இன்றைய தலைமுறை ஆண்/பெண் பாகுபாடு இன்றி, அத்துனை நம்பிக்கைகளையும் சுக்கு நூறாய் உடைக்கின்றது. அதனால்தான் குடும்பங்களுக்கும், காதல் என்கிற உணர்வுக்கும் இடையில் மிகப்பெரிய தேக்கநிலை இருப்பதைக் காண முடிகிறது.
இன்றை தலைமுறையிடம் காதலிப்பது எளிதா என்று கேட்டுப் பாருங்கள். பள்ளியில் முதல் ரேங்க் வாங்கி விடலாம், கல்லூரியில் கோல்ட் மெடல் வாங்கி விடலாம், ஏன் நம்பர் ஒன் நிறுவனங்களில் கூட நமக்கான வேலையை பெற்றுவிடலாம். ஆனால் பிடித்த ஒருவர் மனதை ஈர்ப்பது ஏழு கடல், ஏழு மலையைக் கடக்கும் விஷயம் என்பார்கள்.
காதலில் கடினமானது, நேசிக்கும் ஒருவரின் காதலைப் பெறுவதுதான். அப்படி நேசிக்கும் நபரின் காதலைப் பெற்றுத்தானே, காதல் திருமணங்கள் நடைபெறுகிறது என்கின்ற கேள்வியும் எழும். பிறகு ஏன் திருமணத்திற்குப் பிறகு, காதலர்கள் ஒட்டுதல் இன்றி, உணர்ச்சிக் கொந்தளிப்போடு இருக்கின்றனர் என்ற கேள்வியும், புதிய பிரச்னையாக சமூகத்திற்குள் உருவாகி வருகிறது.
பட்டிமன்ற தலைப்பு போல, இன்றைக்கு காதலிப்பது எளிதாக இருக்கிறதா? இல்லை கடினமாக இருக்கிறதா? என்கிற பார்வையில் நோக்கினால், இன்றைய சூழலில் காதல், மனிதர்களிடையே வெறுமையை உருவாக்கி இருக்கிறது எனச் சொல்லும் அளவுக்கு, காதலுக்குள்தான் எத்தனை விதமான சாணக்கியதனங்கள் அரங்கேறி வருகிறது.
இன்றைய காதல் மூன்று விதங்களாகப் பார்க்கப்படுகிறது. முதலாவதாக அறிவு சார்ந்த மாற்றம். இரண்டாவதாக மனிதக் கடத்தல். மூன்றாவதாக தனிநபராய்(single) வாழும் விருப்பம்.அறிவு சார்ந்த மாற்றம்: திரைப்படம் பார்ப்பதிலும், நாவல் வாசிப்பதிலும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி பாத்திரங்களில் காட்டப்படும் காதல் மற்றும் காமம் சார்ந்த வர்ணனைகள், காட்சிகளில் இருக்கும் உந்துதல்கள், பார்க்கும் அல்லது வாசிப்பவரை மெய் சிலிர்க்க வைக்கும். தற்போது அவை “கிரிஞ்சு” என்ற ஒற்றைச் சொல்லில் கடந்து செல்லும் அளவுக்கு வறட்சியாகிவிட்டன. Sexual Apparatus இந்த வார்த்தைதான், அறிவு சார்ந்த காதலில் இடம்பெற்றிருக்கிறது. அதாவது, இங்கு ஒருவரது உடல் மற்றும் மனம் சார்ந்த ஈர்ப்பு சிந்தனையில் (Cognitive Thoughts) இருந்து ஈர்க்கப்படுவதாகவே காதல் இருக்கிறது.
ஒருவர் செயல்படும் தளம், அவர்கள் வாசிக்கும் புத்தகங்கள், பார்க்கும் திரைப்படங்கள், அவர்களின் திறமை, அவர்களின் பரந்த அறிவு சார்ந்த சிந்தனை, அதனால் ஏற்படும் வளர்ச்சி மற்றும் லாபம், அவர்களின் முடிவெடுக்கும் திறன் இப்படி ஒருவரது Knowledge மற்றும் Emotional Balance வைத்து தனக்கான துணையைத் தேர்ந்தெடுப்பதாக காதல் இருக்கிறது. காதலிக்கும் நபரின் துறை சார்ந்தும், சமூகத்தில் அவர் செயல்படும் விதத்தைப் பார்த்தும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். சில நேரங்களில் அந்த நபரும், அவரின் வீடும், வீட்டிற்குள் இருக்கும் சடங்கு முறைகளும், இந்த அறிவு சார்ந்த இடத்தில் மாறுபட்டிருக்கும். காதலிக்கும் நபரின் Conscientiousness மற்றும் Fluid Intelligence இடையில் இருக்கின்ற முரண்பாடுகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
ஆண்/பெண் இருவரும் தங்களை முற்போக்காக காட்டிக் கொண்டாலும். அதில் முழுமை இருக்காது. சமூகத்தின் முன், முற்போக்கு கருத்துக்களை முன்வைத்தாலும், வீட்டிற்குள் சடங்கு சம்பிரதாய நம்பிக்கைகள் நடந்தேறும். அவர்களின் தனிப்பட்ட விருப்பங்கள், கலாச்சார நம்பிக்கைகள், குடும்பம் சார்ந்த சடங்குகள் என்று முரண்பாடுகளுடனே வாழ்க்கையை பல சமயங்களில் கடக்க நேரிடும்.
மனிதக் கடத்தல்: உதாரணத்திற்கு, ஜாதி அல்லது மதம் மாறி திருமணம் செய்த பிறகு, சமூகம் சார்ந்த நம்பிக்கைகளான, சடங்கு சம்பிரதாயங்களை கணவனும் மனைவியும் அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும். அசைவ உணவுகளை விசேஷ நாட்களில் சாப்பிடக் கூடாது என்றெல்லாம் வற்புறுத்துவது, மூடநம்பிக்கை சார்ந்த விஷயங்களை ஏற்று நடக்க வைப்பது என்றிருப்பார்கள்.
இந்த இடத்தில் காதலித்த போது, அவர்கள் பேசிய அல்லது அவர்கள் பார்த்த பிம்பம், ஒருவர் மீது ஒருவர் வைத்த நம்பிக்கைகள் உடைய ஆரம்பித்திருக்கும்.Fluid Intelligence என்பது, தனக்கான பகுத்தறிவில், தான் கற்ற விஷயங்களை முழுமூச்சாக நம்பி அதன்படி செயல்படுவதாகும். காதல் மற்றும் காமத்திலும், குடும்பச் சடங்குகளிலும், காதலிக்கும் இருவரும் புதிய மாற்றங்களை வெளிப்படுத்தும் தன்மையுள்ளதாக அமைத்திருப்பார்கள். Sexual Apparatusயை நம்பி அவர்கள் காதலித்த விஷயங்கள் உடைபட உடைபட, தங்களைத் தாங்களே வதைத்துக் கொள்வார்கள்.
உதாரணத்திற்கு, கை, கால் பகுதியில் பிளேடால் கீறுவது, சாப்பிடாமல் இருப்பது, தற்கொலைக்கு முயற்சிப்பது, போதைக்கு அடிமையாவது, துறை சார்ந்து கவனம் இல்லாமலும், குடும்ப வாழ்க்கையை இழக்கும் சூழலிலும் இருப்பார்கள். தன்னை ஒரு முற்போக்குவாதியாக நினைத்தவர்கள், வாழ்க்கை துணையின் செயல்பாடுகளால் நம்ப முடியாத அளவிற்கு உணர்ச்சிக் கொந்தளிப்பில் சூழலை மோசமாக்கிக் கொள்வார்கள். இந்த இடத்தில் அறிவும், காதலும் பலவீனமடைந்து வெறுமையும், வன்முறையும் வெளிப்படும் இடமாக மாறியிருக்கும்.தாங்கள் சார்ந்த மதம், சாதி, வர்க்க ஏற்றத்தாழ்வில் காதலைப் பிரிப்பது, எதிர்ப்பு தெரிவிப்பது என ஆண்/பெண் கடத்தல் இப்போதும் ஆங்காங்கே நடந்து வருகிறது. பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்களின் கவுரவத்தை நிலைநாட்டுவதற்காக, மகன் அல்லது மகளை கடத்திச்சென்று, பிடிக்காத திருமண உறவை வற்புறுத்தி உருவாக்கி விடுகிறார்கள்.
இப்படியாக அமையும் உறவில் எந்த இடத்தில் காதலையும், அன்பையும் எதிர்பார்க்க முடியும். இதில், மிகப்பெரிய வன்முறை என்னவென்றால், விருப்பமில்லாம ஆண்,பெண் இருவரையும் திருமணம் என்கிற பந்தம் வழியாக வலுக்கட்டாயமாக, வாழ்நாள் முழுவதும் வாழ நிர்பந்திப்பது. சிங்கிள்: தன் விருப்பத்தின்பேரில் சிங்கிளாகவே இருக்கிறேன் என்பதற்கு பெரிய வரைமுறை எல்லாம் கிடையாது. காதல் பொறுப்பு சார்ந்தது.
பிடித்த நபருக்காக, அவர்களின் தேவைக்காக, அவர்களின் குடும்பத்துக்காக தன்னுடைய நேரம், பணம், ஆற்றல் என அத்தனையும் அர்ப்பணிக்க வேண்டும். எனக்கு இம்மாதிரியான அர்ப்பணிப்பை செய்ய விருப்பமில்லை என்று ஆண்/பெண் இருவருமே கூற ஆரம்பித்திருக்கிறார்கள். தனக்கான நேரத்தை தனது துறை சார்ந்தோ, தனக்குப் பிடித்த பொழுதுபோக்கு சார்ந்தோ அல்லது தன் விருப்பம் சார்ந்து மட்டுமே செயல்படுவேன் என விளக்கமும் சொல்கிறார்கள்.
இந்த முறைக்குள்ளாக வாழும் இவர்கள் யாரையும் காயப்படுத்துவதில்லை. பெரிதாக வாக்குவாதங்களில் ஈடுபடுவதும் இல்லை. என் வழி தனி வழி என்றே இருப்பார்கள். இன்றைய காலகட்டத்தில், காதலையும், காமத்தையும் தெளிவாக உணரக்கூடியவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்திருக்கிறது. ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி, இன்னொரு பக்கம் வேலை சார்ந்த அறிவுத்தேடல், காதலை பற்றி நினைக்கக்கூட நேரமில்லை என்றிருக்கும் தலைமுறை, போதைப் பழக்கங்களுக்கு அடிமையான சிலரென இவர்கள் கலந்தே இருக்கிறார்கள். காதலிக்கிற அளவுக்கு நாம் வசதியாக இல்லை என்ற சிந்தனையும், இன்றைய சமூகத்தை மனதளவில் இறுக்கமாக்கிக் கொண்டிருக்கிறது.
ஆண்/பெண் காதலும், காமமும் குடும்ப வளர்ச்சி மற்றும் சமூக வளர்ச்சியை உருவாக்கும் விஷயம். இதில் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்வது என்பதைவிட, அறிந்து கொள்வது முக்கியமானது. தெரிந்து கொள்வது என்பது, ஒரு நபர் தன்னை வெளிப்படுத்துகிற முகம் மட்டுமே. அறிந்து கொள்வது என்பது, நேசிக்கிற நபரை, மனம் திறந்து, சுதந்திரத்துடனும், பாதுகாப்பு உணர்வுடனும் அறிந்து கொள்கிற விஷயம்.இன்றைய ஆண்/பெண் காதலில், அவர்கள் உறவில் பாதுகாப்பும், வாழ்நாள் முழுவதும் தொடர்கிற பந்தம் இது என்ற நம்பிக்கையும் குறைந்து வருகிறது. உணர்வை அதீதமாக வெளிப்படுத்துவதன் மூலமாகவும், காதல் பற்றிய புரிதல் குறைய ஆரம்பிக்கிறது. எளிதாகப் பலருடன் பேசும் வாய்ப்பு, கட்டற்ற பாலியல் சுதந்திரம் போன்றவை சுலபமாக அமைவதால், காதலர்களுக்குள் முரண்களும், கருத்து வேறுபாடுகளும் உடனடி பிரிவை ஏற்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது.
புறக்கணிப்பையும், தண்டனையும் மட்டுமே கொடுக்கிற உறவுகளாக இன்றைய இளம் தலைமுறை மாறி வருகிறது. பிரேக்கப், டிவோர்ஸ் போன்ற வார்த்தைகள், வெறும் வார்த்தைகளாகவே, அதன் வலியை, அதன் சிக்கலைப் பற்றிப் பெரிதாக பேசவிடாமல், மேம்போக்காக பேசிக் கடந்து செல்கிற நவீன சமூகமாக இன்றைய தலைமுறை மாறியிருக்கிறது. காதலுக்காக போர் நடந்திருக்கிறது. காதலுக்காக நாடு விட்டு நாடு சென்று வாழ்ந்திருக்கிறார்கள். காதலில் மொழிகளை கற்று இருக்கிறார்கள்.
காதலுக்காக பழக்கவழக்கத்தை மாற்றியிருக்கிறார்கள். காதலுக்காக வாழ்நாள் முழுக்க பெற்றோரிடம் பேசாமல் இருந்திருக்கிறார்கள். இப்படி காதலுக்காக என்னென்னவோ செய்து தங்களை மனிதர்கள் நிரூபித்திருக்கிறார்கள். ஆனால் இன்று… நேசிக்கின்ற மனிதர்களுக்குள் அன்பும், அரவணைப் பும், காதலும் குறைந்து, ஒருவித இறுக்கத்தை ஏற்படுத்துகிற சூழலாக இருக்கிறது. உலகமே காதலர் தினத்தை கொண்டாடினாலும், காதலில் ஒருவித தேக்க நிலையை பார்த்தும், கேட்டும் வருகிறோம்.
மனநல ஆலோசகர்: காயத்ரி மஹதி,
The post மூளையின் முடிச்சுகள் appeared first on Dinakaran.