தமிழ்நாட்டின் தொழில் வளம் மிக்க மாவட்டங்களாக மேற்கு மாவட்டங்கள் என்றழைக்கப்படும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் விளங்கி வருகிறது. இம்மாவட்டங்களில் ஜவுளி, மோட்டார், எலக்ட்ரிக்கல் தொழில், வெள்ளி, சேகோ, கொசுவலை, கயிறு ஆலைகள் ஏராளம் இருக்கின்றன. இந்த தொழில்களை பெருக்கி வளமிக்க மாவட்டங்களாக மாற்றி, மாநில அரசுக்கு மிக அதிகப்படியான வருவாயை வழங்கிடும் வகையில் மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு தீட்டி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் மேற்கு மாவட்டங்களில் தொழில்கள் வளம் பெற புதிய அறிவிப்புகளை வெளியிடும் தமிழ்நாடு அரசு, நடப்பாண்டும் அதற்கு பஞ்சம் வைக்கவில்லை. ஓரிடத்தில் தொழில் வளம் பெருக வேண்டும் என்றால், அடிப்படை கட்டமைப்பான போக்குவரத்து மிக சிறப்பானதாக இருக்க வேண்டும். அந்த வகையில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களை மையமாக கொண்டு, போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதில் மாநில அரசு அதிக கவனம் செலுத்துகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் தொழில்துறையினர் வந்துசெல்ல வசதியாக கோவை, சேலம் விமான நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிலும், மிக சிறிய அளவிலான சேலம் காமலாபுரம் விமானநிலையத்தில் இருந்து தற்போது, சென்னை, ஐதராபாத், பெங்களூரு, கொச்சி ஆகிய நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நகரங்களுக்கு விமான சேவை வழங்குவதன் மூலம் பன்னாட்டு விமான சேவை இணைப்பை பெற்றுள்ளது.
இங்கிருந்து விமானம் ஏறிச்செல்லும் தொழில் நிறுவனத்தார், சென்னை, கொச்சி, பெங்களூரு பன்னாட்டு விமான நிலையங்களில் இருந்து வெளிநாடுகளுக்கும் பறக்கலாம். இப்படி விமான போக்குவரத்தை கோவையிலும், அதற்கு அடுத்தபடியாக சேலத்திலும் மேம்படுத்தியிருக்கும் நிலையில், தற்போது ரயில் போக்குவரத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல தமிழ்நாடு அரசு ஒரு புதிய திட்டத்தை தீட்டியுள்ளது. இந்த திட்டம், பயன்பாட்டிற்கு வந்தால், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டங்களில் இன்னும் ஏராளமான புதிய தொழில் நிறுவனங்கள் வருவதோடு, தொழிலாளர்களின் பயணம் எளிமையாக்கப்படும்.
தினசரி ரயில் போக்குவரத்து மூலம் மிக அதிகப்படியான மக்கள் பயன்பெறுவார்கள். அப்படி என்ன திட்டத்தை மாநில அரசு போட்டிருக்கிறது என்றால், அது மிகப்பெரிய மாஸ்டர் பிளான் ஆகும். அது, இந்தியாவில் புதடெல்லி-மீரட் இடையே மட்டும் தற்போது நடைமுறையில் இருக்கும் ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவை திட்டமாகும். அதாவது, மிக அதிவேக ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரும் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு (Regional Rapid Transit System-RRTS) உருவாக்க 3 வழித்தடங்களை தேர்வு செய்து, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய இருக்கின்றனர்.
இதுதொடர்பான அறிவிப்பை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில், வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், புதுடெல்லி-மீரட் இடையே மிக அதிவேக ரயில் போக்குவரத்து வசதியை ஆர்ஆர்டிஎஸ் நிறுவனம் மேற்கொள்வது போல், தமிழ்நாட்டில் அவ்வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இதற்காக மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்திடவும், சென்னை- செங்கல்பட்டு-திண்டிவனம்-விழுப்புரம் (167 கி.மீ.,), சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் (140 கி.மீ.,), கோவை-திருப்பூர்-ஈரோடு-சேலம் (185 கி.மீ.,) வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கிட சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதை சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்படும், எனக்கூறியுள்ளார். பட்ஜெட் அறிவிப்பால் தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பில் முதல்கட்ட ஆய்வை தொழில் நிறுவனங்கள் அதிகமுள்ள கோவை-திருப்பூர்-ஈரோடு-சேலம் வழித்தடத்தில் நடத்திட மெட்ரோ நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது, இவ்வழித்தடத்தில் தற்போது 110 முதல் 130 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்குவதற்காக தண்டவாள மேம்பாட்டு பணியை ஒன்றிய அரசின் ரயில்வேத்துறை செய்து வருகிறது.
கடந்த ஓராண்டிற்கும் மேல் நடக்கும் இப்பணி, நடப்பாண்டில் நிறைவு பெறவுள்ளது. அதனால், இந்த வழித்தடத்தில் தொழில் நிறுவனத்தார், தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் ஆர்ஆர்டிஎஸ் நிறுவனம் மூலம் அதிவேக ரயில் சேவையை மாநில அரசால் மேற்கொள்ள இயலும். இதற்கு ரயில்வே துறையுடன் இணைந்து செயல்பட்டால், அதற்கான சாத்திய கூறுகள் மிக அதிகம் இருப்பதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘‘தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடங்கள் அனைத்திலும் தண்டவாள மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. வருங்காலங்களில் அதிவேக ரயில்களை இயக்கிடும் வகையில், கட்டமைப்பை ஏற்படுத்தி வருகிறோம். வளைவுகளை குறைத்தும், ரயில்வே பாலங்களில் திறனை மேம்படுத்தியும், தண்டவாளங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.
இவற்றில் சேலம்-கோவை மார்க்கத்தில் 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்க பணிகள் நடக்கிறது. அதனால், மாநில அரசு திட்டமிட்டுள்ள ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தை இம்மார்க்கத்தில் செயல்படுத்த சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது. இருப்பினும் இதுதொடர்பாக ரயில்வேத்துறை எவ்வித ஆய்வும் மேற்கொள்ள போவதில்லை.
மாநில அரசு சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் இதற்கான ஆய்வை நடத்தும் எனக்கூறியிருப்பதால், அவர்கள் ஆய்வை முடித்துவிட்டு, அரசின் ஒப்புதல் பெற்று ரயில்வேத்துறையுடன் பேசும். அப்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு, ரயில்வேத்துறையுடன் இணைந்து, இந்த மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்தலாம். அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது,’’ என்றனர்.
* ஆர்ஆர்டிஎஸ் திட்டத்தால் கிடைக்கும் நன்மைகள்
தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ஆர்டிஎஸ் திட்ட வழித்தடம் கவனம் பெற்றுள்ளது. இந்த வழித்தடத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துமே தொழில் நகரங்கள் தான். மேலும், அருகில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில் நகரம். பெங்களூருவின் இரட்டை நகரம் என்றும் சிலர் அழைக்கின்றனர். அதனால், இத்திட்டம் மூலம் ஓசூர் தொழில் நகரமும் பயன்பெறும். சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்துடன் ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவையை இணைத்தால், மேற்கு மண்டலம் முழுவதையும் மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி பெற்ற பகுதியாக மாற்றலாம்.
* புதிய முதலீடுகள் குவிய வாய்ப்பு
மேற்கு மண்டலத்தில் ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வந்தால், பொதுமக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். நவீன உள்கட்டமைப்பு வசதிகளை கண்டு, புதிய முதலீடுகள் குவிந்து தொழில் வளர்ச்சிக்கு வித்திடும். கிட்டத்தட்ட மெட்ரோ ரயில் சேவைக்கு இணையானது, இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் சேவை. மெட்ரோ ரயில் நிலையங்கள், 1 முதல் 2 கி.மீ., தூர இடைவெளியில் அமைந்திருக்கும். ஆர்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்கள் 10 கி.மீ., தூர இடைவெளியில் அமைந்திருக்கும். இந்த ரயில்கள், மணிக்கு 160 கி.மீ., வேகம் வரை பயணிக்கும். ரயிலில் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். முழுவதும் ஏசி வசதி கொண்டது.
* டெல்லி-மீரட் ஆர்ஆர்டிஎஸ் சேவையில் என்ன இருக்கிறது?
டெல்லிக்கும், மீரட்டுக்கும் இடையில் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆர்ஆர்டிஎஸ்) எனப்படும் விரைவு ரயில் போக்குவரத்து சேவையை வழங்க டெல்லி-மீரட் ரயில் நிறுவனம் (National Capital Region Transport Corporation- NCRTC) செயல்படுகிறது. இதில், டெல்லி-காசியாபாத்-மீரட் இடையே 82 கி.மீ., தூரத்தை இணைக்கும் மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பாக என்சிஆர்டிசி செயல்படுத்துகிறது.
இந்த திட்டத்தில், ‘‘நமோ பாரத்’’ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இத்திட்டத்தில் இயங்கும் ரயில்களை அல்ஸ்டாம் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, மீரட்டில் பல புதிய ரயில் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. டெல்லி-மீரட் ஆர்ஆர்டிஎஸ் திட்டம், டெல்லியில் உள்ள நியூ அசோக்நகரை மீரட் தெற்கில் உள்ள சதாப்தி நகருடன் இணைக்கிறது. பயண நேரம் 45 முதல் 50 நிமிடங்களாகும்.
* இந்தியாவிலேயே புதுடெல்லி-மீரட் இடையேதான் மித அதிவேக ரயில் போக்குவரத்து வசதியை ஆர்ஆர்டிஎஸ் நிறுவனம் மேற்கொள்வது போல்,
* சென்னை- செங்கல்பட்டு-திண்டிவனம்-விழுப்புரம் 167 கி.மீ.,
* சென்னை-காஞ்சிபுரம்-வேலூர் 140 கி.மீ.,
* கோவை-திருப்பூர்-ஈரோடு-சேலம் 185 கி.மீ.
* வழித்தடங்களில் மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயில்களை இயக்கிட சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பதை சென்னை மெட்ரோ நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தப்பட உள்ளது.
The post மேற்கு மாவட்டங்கள் வளர்ச்சிக்காக அதிவேக ரயில் போக்குவரத்து சேவை: மாஸ்டர் பிளான் போடும் தமிழ்நாடு அரசு, முதற்கட்டமாக 3 வழித்தடங்கள் தேர்வு, மெட்ரோ மூலம் ஆய்வு appeared first on Dinakaran.