×

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார வாகனம்: கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தொடங்கி வைத்தார்

சென்னை: : மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இயக்க மேலாண்மை மூலம், போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். போதையில்லாத தமிழ்நாடு உருவாகிடும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் போதைப் பொருட்கள் தொடர்பான உறுதிமொழியேற்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கிடும் வகையில் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை இயக்க மேலாண்மை அலகின் மூலம் “போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு” எனும் கருத்தை மையமாகக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த பிரசார வாகனம் சென்னை மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. அதுசமயம், போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து தங்களுடைய சுய விபரங்களின்றி புகார் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசால் ட்ரக் ப்ரீ டி.என் மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் சிறப்பு என்னவென்றால் போதைப் பொருட்கள் விற்பனை குறித்த விபரங்களை தெரிவிப்பவரின் தகவல் கோரப்படாது. இந்த செயலி மிகவும் பாதுகாப்பானது.

இதனை மாணவர்கள் கண்டிப்பாக தங்களுடைய அலைபேசி மற்றும் பெற்றோர்களின் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து கொண்டு போதை பொருட்கள் பயன்பாடு தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம். போதைப்பொருட்கள், பான், குட்கா, கஞ்சா, சட்டவிரோத சாராயம் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்வோர் அல்லது பயன்படுத்துவோர் குறித்து உங்களுக்கு தகவல் தெரிந்தால் இந்த மொபைல் செயலியில் அவர்கள் பற்றிய தகவல்களையும், புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் பதிவேற்றம் செய்தால் உடனடியாக சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போர்க்கால அடிப்படையில் போதைப் பொருட்களின் பயன்பாடு தடுத்து நிறுத்தப்படும்.

முன்னதாக, “போதைப் பொருட்கள் இல்லா தமிழ்நாடு” எனும் கருத்தை மையமாகக் கொண்டு போதைப் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேசுதல் இன்றி கை மற்றும் உடல் இயக்கங்களாலும் முகக் குறிப்புகளால் நடித்துக் காட்டும் மைம் என்ற கலை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் கலால் துணை ஆணையர் (ஆயத்தீர்வை) கு.பிரேம்குமார் உட்பட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார வாகனம்: கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Collector ,Rashmi Siddharth Jagade ,Chennai ,Prohibition ,Excise Department ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED பசுமை நகராட்சி நிதிப்பத்திரம் மூலம்...