மாடர்ன் கலாசாரத்தால் மறந்த முறையை  தேடும் காலமிது: மண்பாண்டங்களுக்கு மவுசு கூடுது

கோடை காலம் துவங்கும் முன்பே வெயில் தலைகாட்ட துவங்கி. தற்போது வெயில் கடுமையாக வாட்டி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் சதத்தை தாண்டி வெயில் வாட்டி வருவதால் மக்கள் வெளியே தலைகாட்டவே அச்சப்படும் நிலை உருவாகி உள்ளது. அடிக்கும் வெயிலுக்கு மக்கள் குளிர்ச்சியை தேடி செல்கின்றனர். வெப்பஅலையால் திண்டாடும் மக்கள் தர்பூசணி, இளநீர், நுங்கு, மோர், கேப்பை, கம்பங்கூழ், கரும்பு சாறு ஆகியவற்றை தேடி செல்கின்றனர். பிரிஜில் வைக்கப்படும் நீரை பருகினால் பல்வேறு உடல் உபாதைகள் வரும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுப்பதால், இயற்கை முறையிலான மண்பானைகளை மக்கள் வாங்குவது அதிகரித்து உள்ளது. வேனிற் காலத்தில் நீரைக் குளிரவைத்துக் குடிப்பதற்காக வாய் குறுகிய மண்பாண்டங்களைச் சங்ககாலத் தமிழர்கள் பயன்படுத்தியுள்ளனர்.

வாய் சிறுத்த பானைகளை, ‘தொகுவாய் கன்னல்’என்று பத்துப்பாட்டில் ஒன்றான ‘நெடுநல்வாடை’ நூல் குறிப்பிடுகிறது. ஒரு கிலோ களிமண்ணில் ஓராயிரம் வடிவங்களை சிற்பமாக்கி கலைநயமிக்க பொருட்களை செதுக்கும் திறன் பெற்றவர்கள் மண்பாண்ட தொழிலாளர்கள். அதிலும் அவர்களால் தயாரிக்கப்படும் மண்பானைகளுக்கு உள்ள மகத்துவங்கள் ஜாஸ்தி. மண்பானை என்பது இயற்கை சுத்திகரிப்பு என்றே கூறலாம். மண்பானை தண்ணீரை சமையல், குடிநீருக்கு பயன்படுத்தினால் உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் நீங்கும். மண்பானை தண்ணீரில் தேற்றான்கொட்டை போட்டால், சுத்தமான குடிநீர் கிடைக்கும். இதை தொடர்ந்து குடிக்கும்போது, இருதய நோய் குணமாகும். மண்பானை தண்ணீரில் செப்புத்தகடு போட்டால் கழிவுகள் தகட்டில் தேங்கும், சுவையாக இருக்கும்.

அதனால் தான், நம் முன்னோர்கள், சமைக்க, தாகம் தீர்க்க என அனைத்திற்கும் பெரும்பாலும் மண்பாண்டங்களையேப் பயன்படுத்தினர். இதன் காரணமாகவே அவர்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், நோய்களுக்கு இடம்கொடுக்காமலும் வாழ்ந்தனர். அதன்பின் மாறிவிட்ட மாடர்ன் கலாசாரத்தால் மண்பாண்டங்கள் மறக்கப்பட்டது. ஆனால் தற்போதுதான் அங்குமிங்குமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட,மறைந்த முறைகளை தேடுகின்றனர்.மண்பானைக்கு என்றுமே தனிசுவை உண்டு. நட்சத்திர ஓட்டல்களில் கூட மண்பானை சமையல் என விளம்பரப்படுத்தும் அளவிற்கு இதற்கு தனி மவுசு இன்றும் உள்ளது. இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: பூமியில் இருந்து எடுக்கப்படும் மண்ணைக் கொண்டு தயாரிக்கும் மண்பாண்டங்களில் இயற்கையாகவே பல்வேறு வைட்டமின்கள் உள்ளன. அதில் பி12 வைட்டமினும் அடங்கியுள்ளது.

குளிர்ச்சிக்காக பிரிட்ஜில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து 15 நிமிடங்களுக்கு பின்பே குடிக்க வேண்டும். மண்பானையில் சிறு சிறு துவாரங்கள் இருக்கும். வெளியில் உள்ள வெப்பநிலை அதிகரிக்கும்போது, இந்த நுண்துவாரங்கள் வழியாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாவதன் மூலம் வெளியேற்றப்படுகிறது. அதனால்தான் மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீர் சில்லென்று குளிர்ச்சியாக இருக்கிறது. மண்பானை தண்ணீர் இயற்கையானது. அந்த தண்ணீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் உடனே அருந்தலாம். பிரிட்ஜ் தண்ணீரை காட்டிலும் மண்பானை தண்ணீரே மிக சிறந்தது. மேலும் எலுமிச்சை, புதினாவையும் தண்ணீரில் சேர்த்தால் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது. மண்பானைகளை வைப்பதற்கு முன் கீழே மணல் வைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், என்றனர்.

கெட்டப் பொருட்களை மண்பானை உறிஞ்சி விடும்
சித்த மருத்துவர்கள் கூறியதாவது: தண்ணீரைக் குளிர்விப்பதற்கு மண்பானைகளே ஆரோக்கியமானவை. செயற்கை முறையில் குளிரூட்டப்பட்ட நீரைக் குடிப்பதால், தொண்டை அலர்ஜி, தலை பாரம், காய்ச்சல் போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். உலகத்திலேயே மிகச் சிறந்த வாட்டர் பில்டர் மண் பானை. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. பானையில் ஊற்றிக் குடிக்கும் நீரோடு சந்தனச் சக்கைகள், நன்னாரி வேர், வெட்டிவேரைப் போட்டு ஊறவைத்து, வடிகட்டி குடிப்பது சுட்டெரிக்கும் வெயிலுக்குச் சிறந்த பானம் என்கிறது சித்த மருத்துவம். அதனால்தான் இன்றளவும் நாட்டு மருந்து காய்ச்சுபவர்கள் மண் பானையிலேயே காய்ச்சுகின்றனர். மண் பானைகளில் சமைத்து சாப்பிட்டால் வியாதிகள் வராது. மண் பானை மருத்துவ குணமுடையது.

The post மாடர்ன் கலாசாரத்தால் மறந்த முறையை  தேடும் காலமிது: மண்பாண்டங்களுக்கு மவுசு கூடுது appeared first on Dinakaran.

Related Stories: